நாடளாவிய ரீதியில் சுமார் 15,000 மண்சரிவு அபாயமுள்ள இடங்கள் அடையாளங் காணப்பட்டுள்ளதாகவும், குறித்த பகுதிகளில் வசிக்கும் சுமார் 5,000 குடும்பங்கள் ஏற்கனவே வேறு பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. எவ்வாறிருப்பினும் மண்சரிவு அபாயம் காணப்படும் பெரும்பாலான பிரதேசங்களில் மக்கள் தொடர்ந்தும் வசித்து வருவதாகவும், அவர் உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல வேண்டும் என்றும் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.
தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்துக்கு மண்சரிவுகள் தொடர்பில் அறிவிக்கப்படும் சம்பவங்கள், கிராம சேவகர் ஊடாக , பிரதேச செயலாளர்களுக்கு அறிவிக்கப்பட்டு , இறுதியாக மாவட்டச் செயலாளரை சென்றடையும். அதற்கமையவே குறித்த பிரதேசம் தொடர்பான ஆய்வுகள் முன்னெடுக்கப்படும்.
எனவே ஆய்வுகள் முன்னெடுக்கப்பட்டு தற்போதைய நிலைவரம் குறித்து அறிவிக்கப்படும் வரை மக்கள் அந்த பகுதிகளில் வசிக்காமல் இருப்பதே சிறந்ததாகும் என தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.
இதேவேளை நான்கு மாவட்டங்களில் அபாயப் பகுதிகளில் வசிப்போரை வெளியேற்ற அனர்த்த முகாமைத்துவ நிலையம் பணிப்புரைவிடுத்துள்ளது. அதற்கமைய கண்டி, கேகாலை, குருணாகல் மற்றும் மாத்தளை மாவட்டங்களில் உள்ள பாதிக்கப்படக்கூடிய பகுதிகளில் வசிக்கும் மக்களைப் பாதுகாப்பான மையங்களுக்கு மாற்றுவதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு மாவட்டச் செயலாளர்களுக்கு அறிவித்துள்ளது.
தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்ட சிவப்பு அறிவிப்புகளின் அடிப்படையிலேயே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக, கண்டி, கேகாலை, குருணாகல் மற்றும் மாத்தளை மாவட்டங்களின் பிரதேச செயலகப்பிரிவுகளில் அடையாளம் காணப்பட்ட அபாயப் பகுதிகளுக்கு தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தினால் மண்சரிவுக்கான சிவப்பு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.
அதற்கமைய இந்த பகுதிகளில் வசிப்பவர்களை டிசம்பர் 9 - 1 ஆம் திகதிக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றுமாறு மாவட்டச் செயலாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாவட்டச் செயலாளர்கள், தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவன அதிகாரிகள், பிரதேச செயலாளர்கள், கிராம சேவகர்கள், பொலிஸார் மற்றும் பிற தொடர்புடைய தரப்பினர் இந்த வெளியேற்றும் செயல்முறையை ஒருங்கிணைக்க வேண்டும் என்றும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் மேலும் குறிப்பிட்டுள்ளது.
அந் வகையில் கண் மாவட்டத்தில் ஹதாரலியத்த, யட்டிநுவர, உடுதும்பர, பஹதஹேவாஹெட்ட, மெததும்பர, பஸ்பாகே கோரள, தெல்தோட்டை, பூஜாப்பிட்டிய, கங்காஇஹல கோரள, பன்வில, கங்கா வட கோரள, உடபலாத்த, ஹரிஸ்பத்துவ, குண்டசாலை, மினிப்பே, தொளுவ, தும்பனை, அக்குரணை, உடுநுவர, பாஹததும்பர ஆகிய பிரதேச செயலகங்களுக்கு உட்பட்ட மக்களை பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கேகாலை மாவட்டத்தில் கேகாலை, கலிகமுவ, மாவனெல்ல, புளத்கொ{ஹப்பிட்டிய, அரநாயக்க, யாட்டியாந்தோட்ட, ரம்புக்கனை, வாரக்கப்பொல பிரதேச செயலகப் பிரிவுகளுக்கும், குருணாகல் மாவட்டத்தில் மாவத்தகம, மல்லாவப்பிட்டிய, ரிதிகம பிரதேச செயலகப் பிரிவுகளுக்கும், மாத்தளை மாவட்டத்தில் நாவூல, வில்கமுவ, பல்லேப்பொல, அம்பகங்க கோரள, லக்கல உக்குவ, ரத்தோட்ட, மாத்தளை மற்றும் யாத்தவத்த பிரதேச செயலகப் பிரிவுகளுக்கும் இவ்வாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.