தமிழ்நாடு மாநிலத்தை சேர்ந்த இந்திய மீனவர்கள் இலங்கையின் வடபிராந்திய கடற்பரப்பில் சட்டவிரோதமாக மீன்பிடிப்பது மற்றும் ஈழுவைப்படகுகளைப் பயன்படுத்துவது தொடர்பிலான தற்போதைய பிரச்சினையை இரு வாரங்களுக்கு முன்னர் எழுதிய இந்த கட்டுரையின் முதல் பாகத்தில் விரிவாக விளக்கிக் கூறியிருந்தேன்.
இந்த பிரச்சினையை திசைதிருப்புவதற்காக இந்திய தரப்பினால் கிளப்பப்படுகின்ற கச்சதீவுப் பூச்சாண்டி தொடர்பில் அந்த பாகத்தில் குறிப்பாக கவனம் செலுத்தப்பட்டது. முன்னதாக வலியுறுத்தக் கூறப்பட்டதைப் போன்று அடிப்படைப் பிரச்சினை இலங்கையின் கடற்பரப்பில் இடம்பெறுகின்ற சட்டவிரோத மீன்பிடியே தவிர, கச்சதீவின் உடைமை பற்றிய விவகாரம் அல்ல. தமிழ்நாட்டு மீனவர்களின் சட்டவிரோத மீன்பிடி தொடர்பாக குறிப்பிட்ட சில முக்கியமான விடயங்களை கட்டுரையின் இரண்டாவதும் இறுதியுமான இந்த பாகத்தில் விளக்கிக் கூறவிருக்கிறேன்.
இந்த பிரச்சினையில் மிகவும் கவலை தருகின்ற காரணி இலங்கையின் வடபகுதியில் உள்ள மீனவர்கள் தொடர்பில் தமிழ்நாட்டு மீனவர்கள் கொண்டிருக்கும் மனோபாவமும் அவர்களின் நடத்தையுமாகும். இலங்கையில் உள்ள தமிழ்பேசும் மீனவர்கள் மீது நம்பமுடியாத பகைமையையும் வெறுப்பையும் தமிழ்நாட்டு மீனவர்கள் வெளிக்காட்டி வருகிறார்கள். அத்துமீறிப் பிரவேசிக்கும் இந்திய மீனவர்களிடம் இலங்கை தமிழ் மீனவர்கள் பிடிபட்டால் அவர்கள் கடுமையாக தாக்கப்படுவதுடன் அவர்களின் படகுகளும் உபகரணங்களும் சேதமாக்கப்படுகின்றன அல்லது நிர்மூலம் செய்யப்படுகின்றன. இலங்கை மீனவர்களுக்கு சொந்தமான மீன்பிடி வலைகள் வேண்டுமென்றே திட்டமிட்ட முறையில் இந்திய மீனவர்களினால் நிர்மூலம் செய்யப்படுகின்றன.
ஒரு சந்தர்ப்பத்தில் இந்தியப் படகுகள் யாழ்ப்பாணக் குடாநாட்டில் மாதகல் -- சுழிபுரம் கரையோரத்துக்கு மிகவும் நெருக்கமாக வந்து மீன்பிடி வலைகளை நிர்மூலம் செய்திருந்தன.
இவ்வாறாக தமிழ்நாட்டு மீனவர்கள் ஈவிரக்கமற்ற முறையிலும் பேராசையுடனும் வட இலங்கையின் கடல் வளத்தை சுரண்டி மீட்கவோ மாற்றவோ முடியாத பாதகத்தை விழைவிக்கிறார்கள். நிலைபேறான மீன்பிடிக்காக கடல் வளங்களை பேணிப்பாதுகாக்க வேண்டும் என்பது பற்றி எந்த அக்கறையும் கிடையாது. போரின் விளைவாக சிதைந்துபோன வாழ்வை மீளக்கட்டியெழுப்புவதற்கும் வாழ்வாதாரத்தைச் சம்பாதிப்பதற்காகவும் போராடிக் கொண்டிருக்கும் இலங்கை தமிழச் " சகோதரர்கள் " மீது தமிழ்நாட்டு மீனவர்களுக்கு அனுதாபமோ அல்லது பச்சாதபமோ கிடையாது.
தமிழ்நாட்டில் இப்போது மீன்பிடித்தல் பாரம்பரிய தொழிலாக இல்லாமல் இருப்பதே இதற்கு பிரதானமான ஒரு காரணமாகும். தலைமுறை தலைமுறையாக கடற்தொழில் செய்துவந்த பல சாதிகள் கிறிஸ்தவத்துக்கு மதம் மாறிய பிறகு கல்வியின் ஊடாக வாழ்க்கையில் மேம்பட்டுவிட்டார்கள். மீன்பிடி இனிமேலும் ஒரு குடும்ப அடிப்படையிலான தொழிலாகவோ அல்லது ஒரு உள்ளூர் முதலாளியின் படகுகளுடன் மட்டுப்படுத்தப்பட்டதாகவோ இல்லை.
முதலாளித்துவ தொழிற்துறை
பதிலாக, மீன்பிடி ஒரு முதலாளித்துவ தொழிற்துறையாக மாறிவிட்டது.மீனும் கூனி இறால்களும் நண்டுகளும் ' பண்டமாக்கப்பட்டு விட்டன.' அவை உற்பத்தி செய்யப்படுவதற்கும் நீண்டகால வாழ்வாதாரத்துக்கான அக்கறை எதுவுமின்றி சாத்தியமானளவுக்கு விற்பனை செய்யப்படுவதற்குமான பண்டங்களாகிவிட்டன. பெரிய மீன்பிடிப் படகுகளும் இழுவைப் படகுகளும் பணக்கார முதலாளிகளுக்கு சொந்தமானவையாக இருக்கின்றன. அவர்களில் பலர் ஒன்றில் அரசியல்வாதிகளாக அல்லது அரசியல் தொடர்புகளைக் கொண்டவர்களாக இருக்கிறார்கள். பெரும்பாலான படகுகள் மற்றையவர்களின் ' பினாமிகளாக ' இருக்கும் மீனவர்களுக்கே சொந்தமானவையாக இருக்கின்றன.
பினாமி எனப்படுவது உண்மையில் வேறு எவருக்கோ சொந்தமானதாக இருக்கும் சொத்தின் சட்டபூர்வமான உரிமையாளர்களாக இருப்பவர்களை குறிப்பதாகும். தமிழ்நாட்டிலும் இந்தியாவின் பெரும்பாலான இந்திய மாநிலங்களிலும் நில உச்சவரம்பு சட்டம் நடைமுறையில் இருப்பதால் பல நிலவுடைமையாளர்கள் மேலதிக நிலங்களை படிப்பறிவற்ற தங்களது ஊழியர்களை அல்லது வேலையாட்களை ' பினாமிகளாக' வைத்து அவர்களது பெயர்களில் பதிவு செய்திருக்கிறார்கள்.
அதைப்போன்று பல மீன்பிடிப்படகுகள் உண்மையில் பினாமிகளாக இருக்கும் மீனவர்களின் பெயர்களில் பதிவு செய்யப்படுகின்றன. இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான மீன்பிடித் தகராறுகளை ஆராய்ந்த டச்சு ஆராய்ச்சியாளர்களினால் இது கண்டுபிடிக்கப்பட்டது.
தமிழ்நாட்டில் மீன்பிப்படகுகளை இயக்குபவர்களில் பெரும்பாலானவர்கள் பாரம்பரியமாக கடற்தொழிலில் ஈடுபடுகின்ற சாதிகளைச் சேர்ந்தவர்கள் அல்ல என்பதையும் இந்த ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்திருக்கிறார்கள். தினச்சம்பளத்தின் அடிப்படையில் வேலைக்கு அமர்த்தப்பட்ட அவர்கள் இலங்கையின் கடற்பரப்பில் சட்ட விரோதமாக மீன்பிடியில் ஈடுபடுமாறு தங்களது முதலாளிகளினால் நிர்ப்பந்திக்கப்படுகிறார்கள். பெரும்பாலான மீன்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
இந்திய அதிகாரிகளினால் கட்டுப்படுத்தப்படாமல் அல்லது அவர்களிடம் பிடிபடாமல் இவ்வளவு பெரிய எண்ணிக்கையில் மீன்பிடிப் படகுகள் இலங்கை கடற்பரப்புக்குள் எவ்வாறு அத்துமீறிப் பிரவேசிக்கக்கூடியதாக இருக்கிறது என்பது இன்னொரு முக்கியமான விடயம். நடப்பவை குறித்து இந்திய அதிகாரிகள் வேண்டுமென்றே கண்டும் காணாமல் இருக்கிறார்கள் அல்லது அவ்வாறு கண்டும் காணாமல் இருக்குமாறு அவர்களது அரசியல் ஆசான்களினால் அவர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள் என்பது வெளிப்படையானது. அவர்களுக்கு இலஞ்சம் வழஙகப்படும் சாத்தியத்தையும் நிராகரிப்பதற்கில்லை.
என்னதான் காரணமாக இருந்தாலும், பிரச்சினை மிகவும் கூர்மையானதாக மாறிவிட்டது. முன்னர் இந்திய படகுகள் வாரத்தில் மூன்று நாட்கள் மாத்திரமே இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறிப் பிரவேசித்தன. ஆனால், அண்மைக்காலங்களில் அவை பெரும்பாலும் அன்றாடம் வருகின்றன என்று வடபகுதி மீனவர் கூட்டுறவுச் சங்கங்களும் அமைப்புக்களும் குற்றஞ்சாட்டுகின்றன.
அநுர - மோடி பேச்சுவார்த்தை
தமிழ்நாட்டைச் சேர்ந்த இந்திய மீனவர்கள் பெரும் எண்ணிக்கையில் இலங்கை கடற்பரப்புக்குள் சட்டவிரோதமாக மீன்பிடிப்பது மற்றும் இழுவைப்படகுகள் போன்ற தீங்கு விளைவிக்கும் நடைமுறைகளின் ஊடாக கடல் வளத்தை நிர்முலம் செய்வது தொடர்பான பிரச்சினை குறித்து இவ்வருடம் ஏப்ரிலில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு விஜயம் செய்த வேளையில் அவருடன் ஜனாதிபதி திசாநாயக்க ஆராய்ந்தார். இரு தலைவர்களும் இந்த பிரச்சினையை எந்தளவுக்கு சரியாக ஆராய்ந்தார்கள் என்பது எவருக்கும் தெரியாது. ஆனால், அவர்கள் வெளியிட்ட ஊடக அறிக்கைகள் இந்த பிரச்சினையில் அவர்களுக்கு " மாறுபட்ட " கருத்துக்கள் இருப்பதை வெளிக்காட்டின.
இந்த பிரச்சினைக்கு நிலைபேறான தீர்வு ஒன்றைக் காண்பதற்கு ஒத்துழைப்பு அணுகுமுறை ஒன்று அவசியம் என்று ஜனாதிபதி திசநாயக்க வலியுறுத்தினார். " இழுவைப்படகுகளினால் சுற்றுச்சூழலுக்கு ஏற்படுத்தப்படுகின்ற பாரதூரமான சேதத்தை கருத்திற்கொண்டு சட்டவிரோத மீன்பிடியை நிறுத்துவதற்கு தீர்க்கமான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று நாம் கோருகிறோம்" என்று அவர் மேலும் கூறினார்.
மறுபுறத்தில், பிரச்சினையை வாழ்வாதாரத்துடன் தொடர்புடையது என்று வர்ணித்த இந்திய பிரதமர் ' மனிதாபிமான அணுகுமுறை ' ஒன்றை கடைப்பிடிப்பது குறித்து இலங்கை ஜனாதிபதியுடன் இணங்கிக்கொண்டதாக கூறினார். இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் இந்திய மீனவர்களும் அவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட படகுகளும் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
அதைத் தொடர்ந்து ஊடகங்களுடன் பேசிய இந்திய வெளியுறவு செயலாளர் விக்ரம் மிஸ்றி நிறுவன ரீதியான பேச்சுவார்த்தைகளை தீவிரப்படுத்துவதற்கும் இரு தரம்புகளிலும் உள்ள மீனவர் சங்கங்களுக்கு இடையில் அண்மைய எதிர்காலத்தில் பேச்சுவார்த்தைகளை ஏற்பாடு செய்வதற்கும் இரு நாடுகளும் இணங்கிக் கொண்டதாக கூறினார்." இரு தரப்புகளிலும உயர்மட்டங்கள் உட்பட சகல மட்டங்களிலும் தொடர்ச்சியான பேச்சுவார்த்தைகளுக்கு உரிய விவகாரமாக இது இருந்துவருகிறது " என்றும் அவர் சொன்னார்.
மீனவர் பிரச்சினை இரு தரப்புகளினாலும் கணிசமானவு விரிவாக ஆரயப்பட்டதாக கொழும்பில் தாஜ்சமுத்ரா ஹோட்டலில் நடத்திய செய்தியாளர்கள் மகாநாட்டில் இந்திய வெளியுறவுச் செயலாளர் கூறினார். " இந்த பிரச்சினை அடிப்படையில் மீனவர்களின் அன்றாட வாழ்வாதாரத்துடன் சம்பந்தப்பட்டது என்று கூறிய பிரதமர் அண்மைக்காலத்தில் மேற்கொள்ளப்பட்ட குறிப்பிட்ட சில நடவடிக்கைகள் மறுபரிசீலனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார் " என்று விக்ரம் மிஸ்றி கூறினார்.
மீனவர் நெருக்கடியில் இலங்கையின் நிலைப்பாடு தெட்டத்தெளிவானது. இலங்கையின் கடற்பரப்பில் சட்ட விரோதமாக மீன்பிடிப்பதை தமிழ்நாட்டு மீனவர்கள் நிறுத்த வேண்டும். இழுவைப்படகுகளை பயன்படுத்தும் வெறுக்கத்தக்க நடைமுறையை அவர்கள் நிறுத்த வேண்டும். பல வருடகால போரினால் பாதிக்கப்பட்டு வாழ்க்கை சிதைவடைந்த தமிழ் மீனவர்கள் தங்களது வாழ்க்கையை மீளக்கட்டியெழுப்புவதற்கும் வாழ்வாதாரங்களை மீட்டெடுப்பதற்கும் அனுமதிக்கப்பட வேண்டும். இலங்கையின் கடற்பரப்பிற்குள் அத்துமீறிப் பிரவேசிப்பதை தமிழ்நாட்டு மீனவர்கள் நிறுத்த வேண்டும்.
இந்திய மனோபாவம்
இந்த பிரச்சினை தொடர்பில் இந்திய தரப்பில் மேலோங்கியிருக்கும் மனோநிலையும் அணுகுமுறையும் வித்தியாசமானவை. பிரச்சினை மனிதாபிமான முறையில் அணுகப்பட்டு பேச்சுவார்த்தைகளின் மூலமாகத் தீர்க்கப்பட வேணடும் என்பதே பிரதமர் நரேந்திர மோடி தொடக்கம் தமிழ்நாடு முலமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் வரையானவர்களின் பதிலாக இருக்கிறது.
அவர்கள் கோருகின்ற மனிதாபிமான அணுகுமுறை பாதிக்கப்பட்ட இலங்கை தமிழ் மீனவர்களின் அக்கறைகளை அடிப்படையாகக் கொண்டதல்ல. அது இலங்கைக் கடல் பிராந்தியத்துக்குள் ஊடுருவும் தமிழ்நாட்டு மீனவர்களுக்கானது. அந்த மீனவர்களை பாதிக்கப்பட்டவர்களாக தவறான முறையில் காண்பிக்கப்படுகிறது. இலங்கை கடற்படையிரை ஆக்கிரமிப்பாளர்கள் என்று தவறாக குற்றஞ்சாட்டப்படுகிறது." அப்பாவி தமிழ்நாட்டு மீனவர்களை கொடூரமான முறையில் கைதுசெய்யும் இலங்கை கடற்படை அவர்களின் படகுகளை பறிமுதல் செய்கிறது" என்பதே இந்திய தரப்பில் கூறப்படும் கதை. இந்த கதை இந்திய பிரதான ஊடகங்களினாலும் சமூக ஊடகங்களினாலும் தொடர்ச்சயாக கூறப்பட்டு வலுப்படுத்தப்படுகிறது.
இந்திய மீனவர்கள் கைது செய்யப்டக்கூடாது என்பதும் அவர்களின் படகுகள் பறிமுதல் செய்யப்படக்கூடாது என்பதுமே இந்திய தரப்பினர் விரும்புகின்ற இரக்கமுடைய -- கண்ணியமான அணுகுமுறையாகும். சுருக்கமாக கூறுவதானால், எமது கடல் வளங்களை இந்திய மீனவர்கள் தொடர்ந்தும் சூறையாட அனுமதிக்கப்பட வேண்டும் என்றும் மனிதாபிமான அணுகுமுறை என்ற பெயரில் எமது மீனவர்கள் பாதிக்கப்ட வேண்டும் என்றும் அவர்களன விரும்புகிறார்கள். பாதிக்கப்படுபவர்கள் மீது அல்ல, சூறையாடுபவர்கள் மீதே அனுதாபம்.
பேச்சுவார்த்தைகள் ஒரு பகிடி
பேச்சுவார்த்தைகள் மூலமாக பிரச்சினைக்கு தீர்வைக் காண்பது என்பது ஒரு பகிடி -- குரூரமான பகிடி. இது களவாடுவதற்காக ஒருவரின் வீட்டுக்குள் அடாத்தாக புகுந்த கொள்ளையர் கும்பல் ' நாங்கள் பேச்சுவார்த்தை மூலமாக பிரச்சினையை தீர்த்துக்கொள்வோம் ' என்று கூறுவதைப் போன்றதாகும். இந்திய -- இலங்கை மீனவர் தகராறைப் பொறுத்தவரை, வெவ்வேறு காலப் பகுதிகளில் பல சுற்றுப் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வந்திருக்கின்றன. அவற்றினால் உருப்படியான எந்த விளைவும் ஏற்பவில்லை. வெறுமனே காலத்தை இழுத்தடிக்கும் ஒரு செயற்பாடாக பேச்சுவார்த்தைகள் அமைந்ததே அதற்கு காரணமாகும்.
கடல்வளத்தை சூறையாடுதலும் இழுவைப் படகுகள் பயன்படுத்தலும் முடிவுக்கு வருவதற்கான எந்த அறிகுறியும் இல்லாமல் தொடருகிறது. இந்தியர்களின் சட்டவிரோத மீன்பிடிப் பிரச்சினையை பேச்சுவார்த்தை மூலமாக தீர்த்துவைப்பது என்ற கேலிக்கூத்து பல தசாப்தங்களாக மேடையேற்றப்பட்டு வருகிறது. அதேவேளை வடபகுதி மீனவர்கள் மத்தியில் விரக்தி அதிகரித்து வருகிறது.
தேசிய மக்கள் சக்திக்கு வடக்கு வாக்குகள்
இந்த விரக்திதான் அண்மைய பாராளுமன்ற தேர்தலிலும் உள்ளூராட்சி தே்தலிலும் வடக்கின் கரையோரப் பகுதிகளில் மக்கள் பெரும் எண்ணிக்கையில் ஜனதா விமுக்தி பெரமுன (ஜே.வி.பி. ) தலைமையிலான தேசிய மக்கள் சக்திக்கு வாக்களிக்க வழிவகுத்தது. தேர்தல் பிரசாரக்கூட்டங்களில் பேசிய ஜனாதிபதி திசநாயக்க மீனவர் தகராறுக்கு தீர்வைக் காண்பதாகவும் சட்டவிரோத மீன்பிடியையும் இழுவைப்படகுகள் பயன்படுத்தப்படுவதையும் நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்தார். திசநாயக்க மீது நம்பிக்கை வைத்த காரணத்தினால் மாத்திரமே பல தமிழர்கள் திசைகாட்டிக்கு வாக்களித்தனர்.
தேசிய மக்கள் சக்திக்கு யாழ்ப்பாணத்தில் ஆறு பாராளுமன்ற ஆசனங்களில் மூன்று ஆசனங்கள் கிடைத்தன. கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தான் யாழ்ப்பாணத்தில் ஜே.வி.பி.யின் முதன்மையான ஆள். அவர் இந்திய மீனவர்களுக்கு எதிராக கடுமையாகப் பேசினார். " நாங்கள் சண்டியர்கள் வந்துவிட்டோம்" என்று சந்திரசேகர் முழங்கினார். இந்தியர்களின் சட்டவிரோத மீன்பிடிக்கு எதிராக கடுமையான போக்கு கடைப்பிடிக்கப்படும் என்பதே அந்த முழக்கத்தின் உட்கிடையான அர்த்தமாகும்.
இராமலிங்கம் சந்திரசேகர்
பண்டாரவளையைச் சேர்ந்தவரான கடற்தொழில், நீரியல்வளங்கள் மற்றும் சமுத்திரவியல் வளங்கள் அமைச்சரான இராமலிங்கம் சந்திரசேகர் யாழ்ப்பாணத்துக்கான ஜே.வி.பி./ தேசிய மக்கள் சக்தி அமைப்பாளராவார். யாழ்ப்பாணத்தில் பல வருடங்களாக வசித்துவரும் அவர் தமிழ்நாட்டு மீனவர்களின் நடவடிக்கைகளின் விளைவாக வடபகுதி மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுடன் நன்கு பிரிச்சயமானவர். ஏற்கெனவே குறிப்பிட்டதை போன்று, தமிழ்நாட்டு மீனவர்களின் அத்துமீறலை தடுப்பதாக உறுதியளித்த காரணத்தினால் 2024 பாராளுமன்ற தேர்தலில் யாழ்ப்பாணத்தின் கரையோரப் பகுதிகளைச் சேர்ந்த மக்களில் பெரிய பிரிவினர் திசைகாட்டிக்கு வாக்களித்தனர்.
மீனவர் பிரச்சினை பற்றி கடுமையான அபிப்பிராயத்தை கொண்டவராக சந்திரசேகர் வீளங்குகிறார். கடந்த வருடம் டிசம்பரில் ஜனாதிபதி திசநாயக்க புதுடில்லிக்கு புறப்படுவதற்கு முன்னதாக சந்திரசேகர் ' தி இந்து ' பத்திரிகைக்கு வழங்கிய நேர்காணல் ஒன்றை வழங்கினார். அதில் அவர், கேடு விளைவிக்கின்ற இழுவைப்படகுகளை பயன்படுத்துவதை இந்தியத் தரப்பினர் நிறுத்தினால் மாத்திரமே நீண்டகாலமாக நிலவும் மீனவர் பிரச்சினையை தீர்க்கமான முறையில் தீர்த்துவைக்கக்கூடியதாக இருக்கும் என்று குறிப்பிட்டார்.
" அண்மையில் நடத்தப்பட்ட தேர்தல்களில் சகல இனக் குழுமங்களைச் சேர்ந்த மக்களும் வடக்கு, கிழக்கு, மலையகம் உட்பட சகல பிராந்தியங்களும் எங்களுக்கு ( தேசிய மக்கள் சக்திக்கு ) வாக்களித்து ஒரு பெரிய ஆணையைத் தந்திருக்கிறார்கள்.. அவர்களது அக்கறைகளை கவனிக்க வேண்டிய பொறுப்பு ஒன்று எமக்கு இருக்கிறது. தமிழ்நாட்டைச் சேர்ந்த இந்திய மீனவர்கள் இழுவைப்படகுகளை பயன்படுத்துவதன் விளைவான பிரச்சினை நீண்டகாலமாக எமது வடபகுதி மீனவர்களின் பிரதான கவலையாக இருந்து வருகிறது" என்று சந்திரசேகர் குறிப்பிட்டார்.
" இந்திய -- இலங்கை மீனவர் நெருக்கடியை தீர்த்து வைப்பது நவீன தொழில் நுட்பங்களையும் நிலைபேறான வழிமுறைகளையும் பயன்படுத்தி இலங்கையின் மீன் உற்பத்தியை அதிகரிப்பதற்கான தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் விரிவான திட்டங்களின் ஒரு அங்கமாகும். 2017 ஆம் ஆண்டில் 17.2 கிலோ கிராமாக இருந்த இலங்கையின் ஆள்வீத மீன் பாவனை இப்போது 11.07 கிலோகிராமாக வீழ்ச்சியடைந்துவிட்டது.
அதனால் மக்கள் புரதம் ஊட்டச்சத்தை பெறுவதில் குறைவு ஏற்பட்டிருக்கிறது என்று தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் கூறப்பட்டிருக்கிறது. குறிப்பாக, 2022 ஆண்டில் ஏற்பட்ட வேதனைமிகு பொருளாதார நெருக்கடிக்கு பிறகு மந்த போசாக்கு முக்கிய கவனத்துக்கு உள்ளாகியிருக்கிறது. மக்கள் ஊட்டச் சத்துக்களை பெறுவதை உறுதிசெய்வதற்காக கடலுணவு உற்பத்தியை நாம் அதிகரிக்க வேண்டியது அவசியமாகும். அதைச் செய்வதற்கு எமது கடற் பிராந்தியத்தையும் கடல்சார் பல்வகைமையை (Marine biodiversity) பாதுுகாக்க வேண்டியது அவசியமாகும்" என்றும் சந்திரசேகர் நேர்காணலில் கூறினார்.
இத்தகைய அறிவிப்புக்களுக்கு மத்தியிலும், பிரச்சினையை கையாளுவதற்கு உருப்படியான எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட்டதாக இல்லை. இந்திய மீனவர்களின் சட்டவிரோத மீன்பிடி தொடருகிறது. இலங்கை கடற்படை கைதுகளைச் செய்கிறது, படகுகளை பறிமுதல் செய்கிறது. சில நாட்களுக்கு பிறகு மீனவர்கள் விடுதலை செய்யப்படுகிறார்கள். அதேவேளை, இந்திய மீனவர்களின் படகு தொகுதிகள் சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபடுகின்றன, தொடர்ந்தும் இழுவைப் படகுகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இலங்கையின் மீன்வளம் தொடர்ந்து குறைந்து கொண்டுபோகிறது. மீன்பிடியும் குறைகின்றது. 2017 ஆம் ஆண்டில் 17.2 கிலோ கிராமாக இருந்த இலங்கையின் ஆள்வீத மீன் பாவனை இப்போது 11.07 கிலோகிராமாக வீழ்ச்சி கண்டிருக்கிறது.
அர்த்தமுடைய நடவடிக்கை
இந்திய மீன்பிடிப் படகுகளுக்கும் இழுவைப் படகுகளுக்கும் எதிராக ஜனாதிபதி அநுர குமார திசநாயக்கவின் அரசாங்கம் அர்த்தமுடைய நடவடிக்கை எடுக்க வேண்டியதே முக்கியம்னதும் அவசியமானதுமாகும். கச்சதீவு ஒரு பிரச்சினை இல்லை. கசசதீவை கடந்துவந்து இந்திய மீனவர்கள் வடபகுதி கடற்பரப்பிற்குள் ஊடுருவுவதே பிரச்சினையாகும்.
கச்சதீவின் உடைமை பற்றிய மாயைத்தனமான பிரச்சினையினார் இலங்கை அரசாங்கம் மருட்சியடையாமல் இருக்க வேண்டும் என்பதுடன் பிரதான பிரச்சினையில் இருந்து கவனம் திரும்புவதற்கு இடமளிக்கக்கூடாது. இந்திய மீனவர்களுக்கு ஆதரவான சக்திகள் கச்சதீவின் உடைமை தொடர்பான கோரிக்கையை தொடர்ந்தும் கொதிநிலையில் வைத்திருக்கவே விரும்பும். அதேவேளை, சட்டவிரோத மீன்பிடியும் இழுவைப்படகுகள் பயன்படுத்தலும் குதுகலமாகத் தொடருகிறது.
இந்திய மீனவர்கள் எமது கடலில் சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபடுவதே பிரச்சினை. அந்த பிரச்சினையை ஜனாதிபதி திசநாயக்கவும் கடற்தொழில் அமைச்சர் சந்திரசேகரும் கடற்படை படகில் கச்சதீவுக்கு செல்வதன் மூலம் தீர்த்துவைக்க முடியாது. எமது கடலில் சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபடும் இந்திய படகுகளுக்கு எதிராக கடற்படை இடைவிடாமல் நடவடிக்கை எடுப்பதன் மூலம் மாத்திரமே பிரச்சினையை தணிக்க முடியும்.