இந்தியக் கடற்படைத் தளபதி அட்மிரல் தினேஷ் கே. திரிபாதி, நான்கு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று திங்கட்கிழமை (22) நாட்டை வந்தடைந்தார். இந்திய கடற்படை தளபதி இவ்விஜயத்தின்போது பிரதமர் ஹரிணி அமரசூரிய, இலங்கை கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் கஞ்சன பனாகொட உட்பட பல முக்கிய தரப்பினரை சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.
இந்த சந்திப்புக்களின்போது கடல்சார் பாதுகாப்பு, திறன் மேம்பாடு, பயிற்சி மற்றும் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான வழிகள் உட்பட பாதுகாப்பு ஒத்துழைப்பு தொடர்பான பல விடயங்கள் குறித்து கவனம் செலுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அவர் 'மாறும் இயக்கவியலின் கீழ் இந்தியப் பெருங்கடலின் கடல்சார் நோக்குநிலை' என்ற கருப்பொருளில் கொழும்பில் நடைபெறவுள்ள 12ஆவது காலி உரையாடல் 2025 – சர்வதேச கடல்சார் மாநாட்டிலும் கலந்துகொள்ளவுள்ளார்.
வருடாந்த பாதுகாப்பு கலந்துரையாடல், பணியாளர்கள் பேச்சுவார்த்தைகள் மற்றும் இலங்கை - இந்தியா கடற்படைப் பயிற்சி, பயிற்சி மற்றும் நீரியல் பரிமாற்றங்கள் உள்ளிட்ட பிற செயற்பாட்டு நடவடிக்கைகள் மூலம் இந்தியக் கடற்படை இலங்கை கடற்படையுடன் தொடர்ந்து இணைந்து செயற்பட்டு வருவதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்திய கடற்படை தளபதியின் இவ்விஜயமானது பரஸ்பர மரியாதை, கடல்சார் நம்பிக்கை மற்றும் இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்கான பகிரப்பட்ட பார்வை ஆகியவற்றின் அடிப்படையில் அமைந்த, இந்தியா - இலங்கை உறவுகளை மீண்டும் உறுதிப்படுத்துவதாக பாதுகாப்பு அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.
நாட்டிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு ஞாயிற்றுக்கிழமை ( செப்டம்பர் 21 ) வந்தடைந்த இந்திய கடற்படைத் தளபதி அட்மிரல் டினேஸ் கே திரிபாதி, திங்கட்கிழமை ( செப்டம்பர் 22) காலை கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் காஞ்சன பானகொடவை சந்தித்துள்ளார்.
இலங்கை கடற்படைத் தலைமையகத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
நான்கு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நாட்டை வந்தடைந்த இந்திய கடற்படைத் தளபதி மற்றும் அவரது மனைவியை கொழும்பில் உள்ள பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் ரியர் அட்மிரல் தம்மிக விஜேவர்தன வரவேற்றுள்ளார்.
நேற்று (2025 செப்டம்பர் 22) காலை கடற்படைத் தலைமையகத்திற்கு சென்ற இந்திய கடற்படைத் தளபதி அட்மிரல் தினேஷ் கே திரிபாதிக்கு கடற்படையின் சம்பிரதாயபூர்வ மரியாதை வழங்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் காஞ்சன பானகொட, இந்திய கடற்படைத் தளபதியை கடற்படைத் தலைமையகத்திற்கு வரவேற்றார்.
இந்த சந்திப்பின்போது, கடல்சார் பாதுகாப்பு மற்றும் இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவு தொடர்பான மூலோபாய மற்றும் இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் குறித்து கலந்துரையாடல் நடைபெற்றது.
இந்த உத்தியோகபூர்வ சந்திப்பைக் குறிக்கும் வகையில் இரு தரப்பினருக்கும் இடையே நினைவுப் பரிசுகளும் பரிமாறப்பட்டன.
மேலும், இந்த உத்தியோகபூர்வ விஜயத்தின் போது, இந்திய கடற்படைத் தளபதி இலங்கை அரசாங்கம் மற்றும் பாதுகாப்புத் தலைவர்களுடன் உத்தியோகபூர்வ சந்திப்புகளை நடத்த உள்ளார்.
மேலும் இலங்கை கடற்படையால் 12 வது முறையாக ஏற்பாடு செய்யப்பட்ட காலி உரையாடல் சர்வதேச கடல்சார் மாநாடு - 2025 இல் பங்கேற்றதன் பின்னர், 2025 செப்டம்பர் 25ஆம் திகதியன்று நாட்டிலிருந்து புறப்பட உள்ளார்.