சிக்கப்போகும் முன்னாள் அமைச்சர்கள் மற்றும் எம்.பிக்கள் : அநுர அறிவிப்பு
13 Apr,2025
சட்டவிரோதமாக வாகனங்களை இறக்குமதி செய்து அவற்றைப் பதிவுசெய்யாமல் பயன்படுத்திய முன்னாள் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களது பெயர் பட்டியலொன்றை விரைவில் வெளியிடவுள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) தெரிவித்துள்ளார்.
திருகோணமலை (Trincomalee) - கந்தளாய் நகரில் நேற்று (12) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அங்கு தொடர்ந்தும் தெரிவிக்கையில், ”மாகாண சபைக்குச் சொந்தமான வங்கிக்கணக்கிலிருந்து அநாவசியமாகப் பணத்தை பெற்று அரசாங்கத்துக்கு நட்டம் ஏற்படுத்தியமைக்காக ஊவா மாகாண முன்னாள் முதலமைச்சர் கைதுசெய்யப்பட்டு தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
அந்த வங்கிக் கணக்கை நிறைவுறுத்தி பணம் பெறுமாறு தாமே அவருக்கு அறிவுறுத்தல் வழங்கியதாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) தற்போது கூறுகிறார். அவ்வாறெனில் தற்போது கையூட்டல் ஒழிப்பு ஆணைக்குழுவுக்கு வருமாறு அவருக்கு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.
முன்னைய காலங்களில் இவ்வாறான உயர்ந்த ஸ்தானத்தில் இருந்தவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கமுடியாத நிலை காணப்பட்டது. தற்போது அதனை நாம் மாற்றியுள்ளோம்.
எந்தவொரு சந்தர்ப்பத்திலும் குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கோ, கையூட்டல் ஒழிப்பு ஆணைக்குழுவுக்கோ வராதவர்கள் தற்போது விசாரிக்கப்படுகின்றனர். விசாரணைகளை முன்னெடுக்க உரிய சட்டநடைமுறை நிறுவனங்களுக்கு நாம் சுதந்திரம் வழங்கியுள்ளோம்.
முன்னர் காவல்துறையினருக்கு பயந்து குற்றவாளிகள் தலைமறைவாகினர். தற்போது முறையாக சட்டத்தை நடைமுறைப்படுத்தும்போது காவல்துறைமா அதிபரே தலைமறைவாகும் நிலை ஏற்பட்டுள்ளது.
அதேநேரம், கடந்த காலங்களில் வாகன இறக்குமதி தடைசெய்யப்பட்டிருந்த போதிலும் முன்னாள் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களில் பலர் வாகனங்களைக் கொண்டுவந்தனர். அவர்கள் அத்தகைய வாகனங்களைப் பதிவுசெய்யாமல் பயன்படுத்தினர்.
அதிகாரத்தில் இருந்தவர்கள் சட்டத்துக்குக் கட்டுப்படவில்லை. ஏனையோருக்கே சட்டம் உரித்தானது என அவர்கள் செயற்பட்டனர்.
எனவே, அவ்வாறு சட்டவிரோதமாக வாகனங்களைப் பயன்படுத்திய சிலர் விரைவில் கைதுசெய்யப்படவுள்ளனர். அவ்வாறானவர்களின் பெயர்கள் அடங்கிய நீண்ட பட்டியலொன்று உள்ளது.
இது அரசியல் பழிவாங்கல் அல்ல, நாம் சட்டத்தை முறையாக செயற்படுத்துகிறோம் என்பதையே இது காட்டுகிறது“ என அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.