இறுக்கமான கொள்கைகள் மற்றும் சகல தரப்பினரதும் கூட்டிணைந்த முயற்சி என்பவற்றின் ஊடாக மிகத்தீவிர பொருளாதார நெருக்கடியிலிருந்து நாடு மீட்சியடைந்துள்ளது.
அம்மீட்சிக்கு பெரிதும் உதவிய விரிவாக்கப்பட்ட நிதிவசதிச்செயற்திட்டம் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டுவருவதுடன், ஒரு சிறு பகுதி தவிர்ந்த ஒட்டுமொத்த கடன்மறுசீரமைப்பு செயன்முறையும் பூர்த்திசெய்யப்பட்டுள்ளது.
இன்னமும் பூர்த்திசெய்யப்படாமல் இருக்கும் கடன்மறுசீரமைப்பின் சிறு பகுதி வெகுவிரைவில் நிறைவுசெய்யப்படும்.
இனிவருங்காலங்களில் நிலைபேறான பொருளாதார வளர்ச்சியை அடைந்துகொள்வதிலேயே விசேட கவனம் செலுத்தப்படும் என இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
2025 க்கும், அதற்கு அப்பாலுக்குமான இலங்கை மத்திய வங்கியின் கொள்கை அறிக்கை இன்று புதன்கிழமை (08) மத்திய வங்கியின் கேட்போர் கூடத்தில் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்கவினால் வெளியிட்டுவைக்கப்பட்டது.
இதன்போது கடந்த 2024 ஆம் ஆண்டு பதிவான பொருளாதார அடைவுகள் குறித்துத் தெளிவுபடுத்துகையிலேயே நந்தலால் வீரசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார். அதுபற்றி அவர் மேலும் கூறியதாவது:
நாடு கடந்த காலங்களில் முகங்கொடுத்திருந்த மிகத்தீவிர பொருளாதார நெருக்கடியிலிருந்து படிப்படியாக மீட்சியடைந்து வருகின்றது.
அதன்படி இறுக்கமான கொள்கைகள் மற்றும் கூட்டிணைந்த முயற்சி என்பவற்றின் ஊடாக நுண்பாகப்பொருளாதார ஸ்திரத்தன்மை மீளுறுதிப்படுத்தப்பட்டதுடன், அதன்மூலம் வலுவானதொரு பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதற்கான அடித்தளம் இடப்பட்டது.
அதன் நீட்சியாக தொடர் மறுசீரமைப்புக்கள் மூலம் நாட்டின் பொருளாதாரம் முன்னேற்றமடைந்து வருகின்றது. சர்வதேச நாணய நிதியத்துடன் எட்டப்பட்ட விரிவாக்கப்பட்ட நிதிவசதிச்செயற்திட்டத்துக்கு அமைவாக கடன்மறுசீரமைப்பு செயன்முறையிலும் குறிப்பிடத்தக்களவு முன்னேற்றம் எட்டப்பட்டுள்ளது.
எமது இறுக்கமான நாணயக்கொள்கையின் ஊடாக மிக உயர்வான மட்டத்தில் காணப்பட்ட பணவீக்கம் கட்டுப்படுத்தப்பட்டு, தற்போது பணச்சுருக்க நிலைமை பதிவாகியுள்ளது.
அதுமாத்திரமன்றி நிதிநிலைமையின் ஸ்திரத்தன்மையும் மீளுறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இவையனைத்தும் நாட்டின் பொருளாதாரத்துடன் தொடர்புடைய சகல தரப்பினரதும் அர்ப்பணிப்பு மற்றும் கடின முயற்சி என்பவற்றின் ஊடாகவே அடையப்பட்டுள்ளன.
இந்த அடைவுகள் முதலீட்டாளர்கள் மத்தியில் நம்பிக்கையைக் கட்டியெழுப்புவதற்கும், நீண்டகால அடிப்படையில் நாட்டை நிலைமாற்றமடையச்செய்வதற்கும் உந்துதல் அளித்துள்ளன.
அதேவேளை தற்போது நிலைபேறான பொருளாதார வளர்ச்சியை அடைந்துகொள்வதில் விசேட கவனம் செலுத்தப்பட்டிருப்பதுடன் உள்நாட்டு நாணய உறுதிப்பாடு மற்றும் நிதியியல் உறுதிப்பாடு என்பவற்றின் மீதும் அவதானம் குவிக்கப்பட்டுள்ளது.
அதேபோன்று 2024 ஆம் ஆண்டில் நுண்பாகப்பொருளாதாரத்தினதும், நிதியியல் முறைமையினதும் உறுதிப்பாட்டைப் பேணுவதில் இலங்கை குறிப்பிடத்தக்களவு முன்னேற்றத்தை அடைந்துகொண்டது.
அத்தோடு நாட்டின் பொருளாதார மீட்சியில் பெருமளவு முன்னேற்றத்தை அடைந்துகொள்வதற்கு உதவிய விரிவாக்கப்பட்ட நிதிவசதிச்செயற்திட்டம் தொடர்ந்து முன்னெடுப்பட்டதுடன், ஒரு சிறு பகுதி தவிர்ந்த ஒட்டுமொத்த கடன்மறுசீரமைப்பு செயன்முறையும் அரசாங்கத்தினால் பூர்த்திசெய்யப்பட்டது.
இன்னமும் பூர்த்திசெய்யப்படாமல் இருக்கும் கடன்மறுசீரமைப்பின் சிறு பகுதி வெகுவிரைவில் நிறைவுசெய்யப்படும்.
அது கடன்வழங்குனர்கள் மற்றும் அபிவிருத்திப் பங்காளர்களுடனான தொடர்புகள் மீண்டும் பழைய நிலைக்குத் திரும்புவதற்குப் பெரிதும் பங்களிப்புச்செய்தது.
அதேவேளை உலகின் முன்னணி கடன் தரப்படுத்தல் நிறுவனங்கள் இரண்டினால் நாட்டின் கடன் மீள்செலுத்துகை இயலுமை மீண்டும் தரமுயர்த்தப்பட்டது.
மத்திய வங்கியின் பிரதான கடப்பாட்டின் பிரகாரம், மிக உயர்வான மட்டத்தில் காணப்பட்ட பணவீக்கம் கடந்த ஆண்டு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதுடன், தற்போது தொடர்ந்து இரண்டாவது காலாண்டிலும் பணச்சுருக்க நிலைமை தொடர்கிறது.
எனவே புதிய மத்திய வங்கிச்சட்டத்தின் பிரகாரம் இதுகுறித்த அறிக்கை மத்திய வங்கியினால் நிதியமைச்சுக்கும், பாராளுமன்றத்துக்கும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
2024 இன் முதல் மூன்று காலாண்டுகளில் நாட்டின் பொருளாதாரம் நாம் எதிர்பார்த்ததை விடவும் உயர்வாக 5.2 சதவீத வளர்ச்சியைப் பதிவுசெய்தது. பொருளாதாரத்தின் முக்கிய துறைகள் குறிப்பிடத்தக்களவால் விரிவடைந்தன.
மேலும் மத்திய வங்கியின் நாணயக்கொள்கையைப் பொறுத்தமட்டில் 2024 ஆம் ஆண்டில் முக்கிய சில மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டன.
குறிப்பாக இரட்டை கொள்கை வட்டிவீத முறைமையிலிருந்து மாறுபட்டு, ஒற்றை கொள்கை வட்டிவீத முறைமை அறிமுகப்படுத்தப்பட்டது.
அத்தோடு வெளிநாட்டுத்துறை, நிதியியல் துறை மற்றும் வங்கித்துறை என்பனவும் கடந்த ஆண்டு முன்னேற்றகரமான செயலாற்றத்தைப் பதிவுசெய்தன.
2023 ஆம் ஆண்டில் 4.4 பில்லியன் டொலர்களாகப் பதிவான மொத்த அலுவல்சார் ஒதுக்குகள், கடந்த ஆண்டின் இறுதியில் 6.1 பில்லியன் டொலர்களாக உயர்வடைந்தன என்றார்.