கிண்ணியாவில் தடைப்பட்டுள்ள தரைவழி போக்குவரத்து: மக்கள் விடுத்துள்ள கோரிக்கை
28 Nov,2024
மகாவலி கங்கை பெருக்கெடுப்பால், திருகோணமலை (Trincomalee) கிண்ணியா பிரதேச செயலக பிரிவில் உள்ள நான்கு கிராமங்களின் தரைவழி போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாக கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.
இதனால் தோணிகள் மூலம் பயணம் செய்யும் அவர்கள், இது ஒரு பாதுகாப்பான பயணம் இல்லை எனவும், பாதுகாப்பான போக்குவரத்து வசதிகளை பெற்றுத் தருமாறு அரச அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கிண்ணியா பிரதேசத்தில் உள்ள, உப்பாறு கிராம சேவகர் பிரிவிலுள்ள கண்டல்காடு, மயிலப்பன்சேனை, காரை வெட்டுவான் மற்றும் சோலை வெட்டுவான் ஆகிய கிராமங்களே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளன.
கிண்ணியா நகரத்துக்கு செல்வதற்கு வேறு எந்த தரை வழி போக்குவரத்து மார்க்கமும் இல்லாத நிலையில், வெள்ளத்துக்கு மத்தியில், தங்களுடைய வீடுகளில் இருந்தவாறு பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
மேலும், வைத்தியசாலை போன்ற அவசர தேவைகளுக்கு கூட உடனடியாக செல்ல முடியாமல் கஷ்டப்படுவதாகவும், உணவு தேவை போன்ற அன்றாட கருமங்களை தேவையான நேரங்களில் உடனடியாக நிறைவேற்ற முடியாமல் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் இவர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில், வெள்ள அனர்த்த நிலைமைகளின் போது, 14 வருடங்களுக்கு மேலாக இதே கஷ்டங்களை தொடர்ச்சியாக எதிர்நோக்கி வருவதாகவும், இதற்கு முடிவு கிடைக்காதா? எனவும் கிராமவாசிகள் அங்கலாய்க்கின்றமை குறிப்பிடத்தக்கது.