இரு நபர்களை கொலை செய்தவருக்கு மரண தண்டனை
20 Nov,2024
அம்பாந்தோட்டை, கட்டுவனவில் இரண்டு நபர்களை கொலை செய்த 'ஜுலம்பிட்டிய அமரே' என அழைக்கப்படும் கீகனகே கமகே அமரசிறிக்கு தங்காலை மேல் நீதிமன்றம் விதித்த மரண தண்டனையை மேன்முறையீட்டு நீதிமன்றம் உறுதி செய்தது.
குற்றம் சாட்டப்பட்டவர் தாக்கல் செய்த மேன்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்த மேன்முறையீட்டு நீதிமன்றம், ஐந்து குற்றச்சாட்டுகளுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை உறுதி செய்தது.
கடந்த 2012 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 15ஆம் திகதி கட்டுவன, ஹடிவத்தையைச் சேர்ந்த லியனகே ரஞ்சித் என்பவரின் வீட்டில் நடைபெற்ற ஜே.வி.பி கூட்டத்தில் இருவர் சுட்டு கொல்லப்பட்டமை உட்பட ஐந்து குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளது.
கட்டுவனவில் இருவரைக் கொலை செய்ததோடு, மற்றுமொருவரை காயப்படுத்திய குற்றத்திற்காக ஜூலம்பிட்டியே அமரே குற்றவாளி என நிரூபிக்கப்பட்டதையடுத்து தங்காலை மேல் நீதிமன்றத்தால் 2019 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 7 ஆம் திகதி மரண தண்டனை விதிக்கப்பட்டது.
அந்த சம்பவத்தில் தல்வத்தை, கட்டுவன பகுதியைச் சேர்ந்த 50 வயதுடைய எதிரிமான்னகே மலானி மற்றும் 18 வயதான ஜே.பி. நிமந்த கிரேஷன் ஆகியோர் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டதுடன், 26 வயதான பிரதீப் சாரங்கா பலத்த காயங்களுக்குள்ளானார்.
இந்நிலையில் ஜனாதிபதி சட்டதரணி யு.ஆர். டி சில்வா மற்றும் சாவித்திரி பெர்னாண்டோ ஆகியோர் குற்றம் சாட்டப்பட்டவர்கள் சார்பில் ஆஜரானார்கள். சட்டமா அதிபர் சார்பில் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் வசந்த பெரேரா ஆஜரானார்.