வெளிநாட்டில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கோடிக்கணக்கான டொலர்கள்! அநுர தரப்பின் அறிவிப்பு
13 Oct,2024
கடந்த காலங்களில் ஊழல் மற்றும் கொள்ளை நடவடிக்கைகளில் ஈடுபட்ட அரசியல்வாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக தேசிய மக்கள் சக்தியின் அரசியல்சபை உறுப்பினர் கே.டி.லால்காந்த தெரிவித்துள்ளார்.
பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
கடந்த ஆட்சி கால திருடர்களைப் பிடிப்பதற்கு தேவையான அனைத்துத் திட்டங்களும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
திருடர்களைப் பிடிப்பது குற்றப் புலனாய்வுப் பிரிவினரினதும், இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினதும் செயற்பாடாகும். இதற்கான நடவடிக்கைகள் ஏற்கனவே முன்னெடுக்கப்பட்டுள்ளன.
மேலும், வெளிநாடுகளின் வங்கிகளில் இந்த நாட்டின் பணம் இருப்பதாக கூறப்படுகிறது. அந்தப் பணத்தை எப்போது நாட்டுக்குத் திருப்பிக் கொண்டுவரப் போகிறீர்கள் என எம்மிடம் கேள்வி எழுப்பப்படுகின்றது.
இந்த விவகாரங்களைப் பற்றி பேசுவது திருடர்களுக்குத் தேவையான தகவலை அளிப்பது போல் இருக்கும். அது எடுக்கப்படவேண்டிய சட்ட நடவடிக்கைகளுக்கு இடையூறு விளைவிக்கும் என குறிப்பிட்டுள்ளார்.
இந்தநிலையில், ராஜபக்ச குடும்பத்தினர் தமது ஆட்சிக் காலத்தில் பல கோடி டொலர்களை கொள்ளையிட்டு உகண்டாவில் பத்திரப்படுத்தி வைத்திருப்பதாக கடந்த காலங்களில் பல்வேறு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வந்தன.
வெளிநாட்டில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கோடிக்கணக்கான டொலர்கள்! அநுர தரப்பின் அறிவிப்பு | Rajapaksa Family Net Worth
குறிப்பாக, தேசிய மக்கள் சக்தி ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெறுவதற்கு முன்னரும் கூட இது தொடர்பான பல விமர்சனங்களை முன்வைத்திருந்ததுடன், இதனோடு தொடர்புடைய அனைவரும் தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியின் கீழ் கைது செய்யப்படுவார்கள் என்றும் தெரிவித்திருந்தனர்.
இந்தநிலையில், ஜனாதிபதி தேர்தலில் தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அநுர குமார திஸாநாயக்க வெற்றிபெற்ற நிலையில், அதன் பின்னரான நாட்களில் பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச மற்றும் பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் ஆகியோர் ராஜபக்சக்கள் கொள்ளையடித்ததாக கூறப்படும் பணத்தை மீண்டும் நாட்டுக்கு கொண்டு வருமாறு அநுர தரப்பிற்கு சவால் விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.