47 அறைகள் கொண்ட சொகுசு வீட்டில் இணைய மோசடி , 120 சீனப் பிரஜைகள் கைது
12 Oct,2024
கண்டி, குண்டசாலை பிரதேசத்தில் சொகுசு வீடு ஒன்றில் தங்கியிருந்து இணையவழி மோசடியில் ஈடுபட்ட 120 சீனப் பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சீன பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்ர்கள் தங்கியிருந்த சொகுசு வீட்டில் சுமார் 47 அறைகள் காணப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதன்போது சீனப் பிரஜைகளிடமிருந்து 15 கணினிகள் மற்றும் 300 கையடக்கத் தொலைபேசிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
அதேவேளை நாடளாவிய ரீதியில் கடந்த ஏழு நாட்களில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் இணையவழி மோசடியில் ஈடுபட்டதாகக் கூறப்படும் 200 வெளிநாட்டுப் பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அதன்படி, ஹங்வெல்ல பிரதேசத்தில் கடந்த 6 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 30 சீனப் பிரஜைகளும் 4 இந்தியப் பிரஜைகளும் 6 தாய்லாந்து பிரஜைகளும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நாவல பிரதேசத்தில் கடந்த 7 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 19 சீனப் பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் பாணந்துறை பிரதேசத்தில் கடந்த 10 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 20 சீனப் பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.