ஈஸ்டர் குண்டுத்தாக்குதலின் முக்கிய சாட்சி மீது தாக்குதல்!!
05 Oct,2024
ஈஸ்டர் தாக்குதல் உள்ளிட்ட கிழக்கின் படுகொலைகள் குறித்து சாட்சி சொல்ல முன்வந்தவர் மீது மட்டக்களப்பு காத்தான்குடி காவல்துறை விசாரணை என அழைத்துச் சென்று தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதிய ஜனாதிபதியாக அநுரகுமார திஸாநாயக்க (Anura Kumara Dissanayake) அவர்கள் பொறுப்பேற்றதன் பின்னர் நாட்டில் நடைபெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல் மற்றும் ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவங்கள் உள்ளிட்ட நாட்டில் நடைபெற்ற கடத்தல்கள் படுகொலைகள் குறித்து விசாரணை செய்யப்பட்டு குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள் என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் ஏற்பட்டு வரும் நிலையில், உயிர்த்த ஞாயிறு தாக்குதல், ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை செய்யப்பட்ட சம்பவம், ஊடகவியலாளர்கள் கடத்தி படுகொலை செய்யப்பட்ட சம்பவங்கள் உட்பட கிழக்கு மாகாணத்தில் நடைபெற்ற படுகொலைகள் கடத்தல்கள் தொடர்பாக அந்த சம்பவங்களை செய்தவர்களுடன் கூடவே இருந்து குறித்த சம்பவங்கள் தொடர்பில் நேரடி சாட்சி சொல்வதற்கு முன் வந்து, இலங்கையின் பாதுகாப்பு தரப்பினருக்கும், ஜனாதிபதி செயலகம், மனித உரிமை அமைப்புகளிடமும் தனது வாக்குமூலத்தை வழங்கிவிட்டு தனது கடந்த காலத்தை மறப்பதற்காக மீன் வியாபாரம் செய்து வந்த முன்னாள் ஆயுதக் குழுக்களின் முக்கியஸ்தரான முகமட் குசைன் என்பவரை விசாரணைக்கு என அழைத்துச் சென்ற காத்தான்குடி காவல்துறை அவரை மிக மோசமாக தாக்கியதில் அவர் படுகாயம் அடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இலங்கையில் ஆட்சி மாற்றம் ஒன்று நடைபெற்றுள்ள நிலையில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் உட்பட நாட்டில் நடைபெற்ற படுகொலைகள் குறித்த விசாரணைகள் நடாத்தப்படும் போது அதன் முக்கிய சாட்சிகளாக முகமட் குசைன் போன்றவர்களின் வாக்கு மூலங்கள் மாறலாம் என்பதோடு படுகொலைகளுடன் சம்பந்தப்பட்டவர்களை குறித்த நபர் அடையாளம் காட்டிக் கொடுப்பார் என்ற அச்சம் காரணமாக தனது கணவரை கொலை செய்யும் நோக்கில் பொய்யான குற்றச்சாட்டுக்களை சுமத்தி அவரை விசாரணை என்ற போர்வையில் அவரை தாக்கியுள்ளதாக தாக்குதலுக்கு உள்ளானவரின் மனைவி தெரிவித்துள்ளார்.
குறித்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக மனித உரிமைகள் ஆணைக்குழு, சாட்சிகளை பாதுகாக்கும் ஆணைக்குழு, காவல்துறை உயர் அதிகாரிகளிடமும் முறைப்பாடு பதிவு செய்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.