ஏ.டி.எம். அட்டையை திருடி பொருட்கள் கொள்வனவு; கான்ஸ்டபிளின் மோசமான செயல் !
03 Oct,2024
நாடாளுமன்ற சர்க்கிளில் கார் விபத்தில் படுகாயம் அடைந்த தம்பதியரின் ஏ.டி.எம். கார்டை வைத்து 16,400 ரூபா பெறுமதியான பொருட்களை கொள்வனவு செய்த பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் வெலிக்கடை பொலிஸ் குற்றப்புலனாய்வு பிரிவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார் .
கொழும்பு மாநகர போக்குவரத்து பிரிவு மற்றும் கொட்டாவ பொலிஸ் நிலையத்தில் பணிபுரியும் கான்ஸ்டபிள் ஒருவரே சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
16,400 ரூபா பெறுமதியான பொருட்கள் கொள்வனவு
கடந்த மாதம் 9ஆம் திகதி இந்த விபத்து இடம்பெற்றுள்ளதுடன் விபத்தில் காயமடைந்த கணவன் மனைவி கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
இந்த நிலையில் விபத்து இடம்பெற்ற போது அவர்களது பணப்பையை யாரோ திருடிச் சென்று அதிலிருந்த ATM அட்டையை பயன்படுத்தி பெலவத்தில் உள்ள பல்பொருள் அங்காடியில் 16,400 ரூபா பெறுமதியான பொருட்களை வாங்கியதாக காயமடைந்த நபர், வெலிக்கடை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
அந்த முறைப்பாட்டின் பிரகாரம், வெலிக்கடை பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் குழுவொன்று பல்பொருள் அங்காடிக்குச் சென்று அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கமராக் காட்சிகளை ஆராய்ந்துள்ளனர்.
இதன்போது கான்ஸ்டபிளை அடையாளம் கண்டு கொழும்பு மாநகர போக்குவரத்துப் பிரிவிற்குச் சென்று அவரைக் கைது செய்ததாக உயர் பொலிஸார் தெரிவித்தனர்.
ATM அட்டையை பயன்படுத்தி பொருட்களை கொள்வனவு செய்த குற்றச்சாட்டின் பேரில் பொலிஸ் கான்ஸ்டபிள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த நிலையில் குறித்த பொலிஸ் கான்ஸ்டபிளிடம் ஒழுக்காற்று விசாரணைகளை மேற்கொண்டு வரும் பொலிஸார் அவரை பணி இடைநீக்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.