“என் மகனை 12 வயதில் துறவியாக்கச் சொன்னபோது...” - இலங்கை அதிபர் அநுரவின் தாயார் பகிர்ந்த நினைவுகள்
30 Sep,2024
“எனது மகன் அநுர குமார திசாநாயக்கவை 12 வயதிலேயே புத்த துறவியாக்குவதற்காக துறவறத்துக்கு அனுப்புமாறு சொல்லியதை நான் ஏன் ஏற்கவில்லை” என இலங்கையின் புதிய அதிபரின் தாயார் சீலாவதி தெரிவித்துள்ளார்.
இலங்கையின் வடமத்திய மாகாணத்தின் தலைநகரமான அநுராதபுரத்திலிருந்து 25 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள விவசாய கிராமமான தம்புத்தேகம எனும் பகுதியில் ஒரு சிறிய ஆஸ்பெட்டாஸ் கூரையினாலான வீட்டில் அதிபர் அநுர குமார திசாநாயக்கவின் தாயார் டி.எம். சீலாவதி (86) தனது மகள் ஸ்ரீயலதாவுடன் (62) வசித்து வருகிறார். இலங்கையின் அதிபர் அநுர குமார திசாநாயக்க இளம் பருவம் பற்றி தாயார் சீலாவதி சண்டே அளித்த பேட்டி ஒன்றில் கூறியது: “எனது மகனுக்கு சிறுவயதில் காற்றில் பட்டங்களை பறக்க விட மிகவும் பிடிக்கும். தினமும் அருகிலுள்ள நீச்சல் குளத்திற்கு சென்று நீச்சலடிக்கவும் பிடிக்கும். அநுரவுக்கு எப்போதும் புத்தகங்களை வாசிப்பது மிகவும் பிடிக்கும்.
வீட்டின் எதிரே இருந்த மரத்தின் கிளையில் அமர்ந்து சப்தமாக படித்து கொண்டிருப்பது இன்னும் நினைவில் எனக்கு இருக்கிறது. சாப்பிடும் போதும் புத்தகமோ செய்தித்தாளோ வாசித்துக் கொண்டே சாப்பிடுவது அநுரவின் வழக்கமாக இருந்தது. அநுர கல்லூரியில் படிக்கும்போது அரசியலில் ஆர்வம் ஏற்பட்டது. அப்போது அவருக்கு கொலை மிரட்டலும் வந்தது. அவர் நெருங்கிய தொடர்பிலிருந்த அவரது சிறிய தந்தையார் (தந்தையின் சகோதரர்) கொலை செய்யப்பட்டார். அநுர தலைமறைவாக இருந்த காலத்தில் 1992-ம் ஆண்டு அவரது அப்பா இறந்துபோது, அவரது இறுதிச் சடங்கில் கூட கலந்து கொள்ள முடியவில்லை.
12 வயதிருக்கும்போது புத்த விகார் ஒன்றின் தலைமை குரு ஒருவர், அநுரவை துறவறத்துக்கு அனுப்புமாறு கேட்டார். அதனை நான் மறுத்து விட்டேன். அநுர பிறந்து ஆறாம் மாதத்தில் அவரது ஜாதகத்தை ஒரு ஜோதிடரிடம் காட்டியபோது, ’உங்கள் மகன் ஒரு நாள் அரசாள்வான்’ என்று அதிர்ச்சியோடு சொன்னார். எனது மகன் சாதாரண குடும்பத்திலிருந்து இன்று அதிபராகி உள்ளார். அவர் பொய் சொல்பவரோ, மோசடி செய்பவரோ கிடையாது. அவருக்காக அனுராதபுரத்தில் உள்ள ஆலங்களில் எனது மகனுக்காக பிரார்த்திக்க வேண்டும்” என தெரிவித்தார்.
சகோதரி ஸ்ரீயலதா கூறும்போது, “எனது தாயார் தினமும் இரவு தொலைக்காட்சியில் செய்திகளை பார்க்கிறார். செய்தியில் எனது சகோதரன் வரும்போதெல்லாம் என் மகனா என கேட்பார். மகனுடன் இருக்க அவர் விரும்புவார். என் சகோதரன் அநுரவும் இந்தப் பகுதிக்கு வரும்பொதெல்லாம் எங்களை பார்க்க வீட்டுக்கு வருவார். அவர் இந்த நாட்டின் இந்த பகுதிக்கு வரும்போதெல்லாம், எங்களை சந்திக்கிறார். தேர்தல் பிரச்சாரத்தின்போது, அநுர காரில் தூங்கியதுதான் அதிகம். அவரது பதவியேற்பு ஆரவாரமின்றி நடைபெற்றது. அவர் ஆடம்பரத்தை விரும்ப மாட்டார்” என தெரிவித்துள்ளார்.
யார் இந்த திசாநாயக்க? - இலங்கையின் வடமத்திய மாகாணத்தில் அமைந்துள்ள அநுராதபுரம் மாவட்டம் தம்புத்தேகம எனும் பகுதியில் 24.11.1968-ல் அநுர குமார திசாநாயக்க பிறந்தார். தனது பள்ளி படிப்பினை தம்புத்தேகவில் உள்ள கமினி மகா வித்யாலயா பள்ளியிலும், தம்புத்தேகம மத்திய கல்லூரி மற்றும் பேராதனை பல்கலைக்கழகத்தில் பயின்றார். 1988-ம் வருடம் இடதுசாரிக் கட்சியான தேசிய மக்கள் சக்தி (ஜேவிபி)யில் இணைந்தார். 1995-ம் ஆண்டு அதன் மாணவர் அமைப்பின் தேசிய அமைப்பாளராக நியமிக்கப்பட்டார்.
2000-ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தல் மூலம் முதன்முறையாக நாடாளுமன்ற உறுப்பினராக ஆனார். 2004-ம் ஆண்டு அப்போதைய கூட்டணி ஆட்சியில் விவசாய அமைச்சராக அநுர குமார திசாநாயக்க பதவி வகித்தார். 2014-ஆம் ஆண்டு ஜேவிபியின் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டார். 2019-ம் ஆண்டு நடைபெற்ற எட்டாவது அதிபர் தேர்தலில் போட்டியிட்ட அநுர குமார திசாநாயக்க 418,553 வாக்குகள் பெற்று மூன்றாம் இடத்தை பிடித்தார். தொடர்ந்து இலங்கையில் ஊழலுக்கு எதிராக அநுர குமார திசாநாயக்க குரல் கொடுத்து வந்தார். மேலும், இலங்கையில் 2022-ம் ஆண்டு ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியின்போது நடைபெற்ற போராட்டங்களில் முன்நின்று நடத்தியதில் அநுர குமார திசாநாயக்க முன்னணி வகித்ததும் குறிப்பிடத்தக்கது.