முடி கொட்டிய விவகாரம்; அழகு கலை நிலைய பெண்ணுக்கு விளக்கமறியல் !
14 Sep,2024
மினுவாங்கொடையில் பெண்ணின் தலை முடி உதிர்ந்து விழும் அளவுக்கு கிரீம் வகைகளைப் பூசி பொலிஸாரிடமிருந்து தலைமறைவாகியிருந்த அழகு கலை நிலையம் ஒன்றின் பணிப்பெண்ணை எதிர்வரும் 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மினுவாங்கொடை நீதிதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மினுவாங்கொடை பிரதேசத்தைச் சேர்ந்த 22 வயதுடைய பணிப்பெண்ணே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
அதேவேளை சம்பவம் தொடர்பில் , தலைமறைவாகியுள்ள அந்நிலையத்தின் உரிமையாளருக்கும் மற்றுமொரு பணிப்பெண்ணுக்கும் வெளிநாட்டு பயணத் தடை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
மினுவாங்கொடை பொரகொடவத்தை பிரதேசத்தைச் சேர்ந்த 35 வயதுடைய பெண்ணொருவர் திருமண நிகழ்வொன்றுக்கு செல்வதற்காக தனது தலை முடியை அழகு படுத்த கடந்த ஆகஸ்ட் மாதம் 30 ஆம் திகதி அன்று மினுவாங்கொடை நகரத்தில் உள்ள அழகு கலை நிலையம் ஒன்றிற்கு சென்றுள்ளார்.
அங்கு இருந்த அழகு கலை நிலையத்தின் பணிப்பெண்கள் பெண்ணின் தலைமுடியில் கிரீம் வகைகளை பூசியுள்ளனர். இதன்போது, இந்த பெண்ணின் தலைமுடிகள் திடீரென உதிர்ந்து விழுந்துள்ளன.
இதனையடுத்து, பாதிக்கப்பட்ட பெண் இது தொடர்பில் மினுவாங்கொடை பொலிஸ் நிலையத்தின் சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்தில் முறைப்பாடு அளித்துள்ளார்.
இதனையடுத்து சந்தேக நபர்களைக் கைதுசெய்து நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறு மினுவாங்கொடை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில் அழகுநிலையத்தின் உரிமையாளரும் இரண்டு பணிப்பொண்களும் பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்று தலைமறைவாகியிருந்த நிலையில், பணிப்பெண் ஒருவர் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.