சிறைச்சாலையில் ஹிருணிகா
30 Jun,2024
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர (Hirunika Premachandra) வெலிக்கடை சிறைச்சாலைக்கு அழைத்துவரப்பட்டுள்ள நிலையில், அவருக்கு சிறைக்கைதிகள் அணியும் ஆடைகள் வழங்கப்பட்டுள்ளன.
கொழும்பு - தெமட்டகொட பிரதேசத்தில் கடையொன்றில் பணிபுரிந்த இளைஞனை கடத்திச் சென்று சிறையில் அடைத்த குற்றச்சாட்டில், ஹிருணிகா பிரேமச்சந்திரவுக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் கடந்த வெள்ளியன்று (28.06.2024) மூன்று வருட கடூழியச் சிறைத்தண்டனை விதித்துள்ளது.
இந்த வழக்கின் தீர்ப்பை கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி அமல் ரணராஜா அறிவித்தார்.
மேலும், பிரதிவாதியான ஹிருணிகா பிரேமச்சந்திர 18 குற்றச்சாட்டுக்களில் குற்றவாளியாக காணப்பட்டதோடு ஒவ்வொரு குற்றச்சாட்டுக்கும் 20,000 ரூபாய் அபராதம் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.
அபராதத் தொகையைச் செலுத்தத் தவறினால் ஒவ்வொரு குற்றச்சாட்டிற்கும் 06 மாத சிறைத்தண்டனை விதிக்கப்படும் எனவும் உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதனையடுத்து, தற்போது வெலிக்கடை மகளிர் சிறைச்சாலையின் 'R' வார்டில் ஹிருணிகா தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
மேன்முறையீடு
அத்துடன், மருத்துவ அறிக்கையைப் பெற சிறைச்சாலை வைத்தியரிடம் அவர் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், குறித்த வழக்கின் தீர்ப்பை நாளை (01.07.2024) மேன்முறையீடு செய்யவுள்ளதாக ஹிருணிகா பிரேமச்சந்திரவின் சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.