– நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி ஆற்றிய விசேட உரை
– வெளிநாட்டுக் கடனை மறுசீரமைப்பதில் இலங்கை அடைந்துள்ள வெற்றி
– சிலர் ஜனாதிபதி பதவிக்காக பாடுபடும்போது, நான் நாட்டுக்காக பாடுபடுகின்றேன்
– ஆபத்தான தொங்கு பாலத்திலிருந்து இலங்கைத் தாய்த் திருநாடு எனும் குழந்தையை பாதுகாப்பாக அழைத்து வந்துள்ளேன்
– ‘ஹுனுவட்டயே’ நாடகத்தில் வருவது போல் குழந்தையைக் காப்பாற்ற ஆதரவளிக்காத குழுக்கள் இன்று குழந்தையின் உரிமையைப் பெற போராடுகின்றன
– பாதை தவறினால் ஏற்படும் ஆபத்துகளை நாம் அனைவரும் அறிவோம். சரியான முடிவை எடுக்க மக்களுக்கு உரிமை உள்ளது
– எந்த நிபந்தனையுமின்றி நாட்டைப் பொறுப்பேற்கையில் , பொருளாதார நெருக்கடியிலிருந்து நாட்டைக் காப்பாற்ற முடியும் என்ற நம்பிக்கையும் வேலைத் திட்டமும் மட்டுமே என்னிடம் இருந்தது
– அண்மைய வரலாற்றில், உலகில் எந்த ஒரு நாடும் இவ்வளவு குறுகிய காலத்தில் இத்தகைய தனித்துவமான வெற்றியைப் பெற்றதில்லை
– இந்தப் பயணத்தை சீர்குலைக்க முயன்றவர்கள் எதிர்காலத்தில் ஒரு நாள் நாட்டுக்கு துரோகம் செய்ததற்காக தங்கள் குழந்தைகள் முன் அவமானப்படுவர்
இலங்கையின் பிரதான உத்தியோகபூர்வ இருதரப்பு கடன் வழங்குநர்களுடன் இன்று (26) காலை கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தைகளை நிறைவு செய்து உத்தியோகபூர்வ கடன் வழங்குநர் குழுவுடன் இறுதி உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. சீனாவின் எக்ஸிம் வங்கியுடன் இன்று பீஜிங்கில் இறுதி உடன்பாடு எட்டப்பட்டதோடு அது அதற்கான முறையான நடைமுறைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவிதார்.
நாட்டை நேசிக்கும் அனைவருக்கும் இது நற்செய்தி என்று தெரிவித்த ஜனாதிபதி, சிலர் ஜனாதிபதி பதவிக்காக கடுமையாக பாடுபடும் நிலையில் தான் நாட்டிற்காக பாடுபட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
அவர்கள் தமக்குக் கிடைக்கும் பதவிகளைப் பற்றிக் கனவு காணும் போது, தான் நாட்டின் அபிவிருத்தியைப் பற்றிக் கனவு காண்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
விசேட உரையொன்றை ஆற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இவ்வாறு தெரிவித்தார்.
அன்று மக்களுக்கு வழங்கிய வாக்குறுதியின் பிரகாரம் இலங்கைத் தாயை ஆபத்தான தொங்கு பாலத்தின் ஊடாக கொண்டு வர முடிந்ததாக தெரிவித்த ஜனாதிபதி, ஹுனுவட்டயே நாடகத்தில் வருவதைப் போன்று கடினமான நிலைமையில் குழந்தையைப் பாதுகாப்பதற்கு அஞ்சி எந்த ஆதரவையும் வழங்காத தரப்பினர், குழந்தை தொங்கு பாலத்தை கடக்கும் முன்பே குழந்தையின் உரிமையைக் கேட்டு போராடுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
கடனை செலுத்த முடியாமல் வங்குரோத்தான நாடென்று முத்திரை குத்தப்பட்ட ஒரு நாடு இரண்டு வருடங்களில் இந்தளவு முன்னேற்றத்தைப் பெற முடிந்திருப்பது வெற்றி எனவும், அண்மைய வரலாற்றில் பொருளாதார படுகுழியில் விழுந்த உலகின் எந்த நாடும் இவ்வளவு குறுகிய காலத்தில் இவ்வாறான நிலையை அடைந்ததில்லை எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
நாடு எதிர்நோக்கும் சவால்களை உண்மையாகப் புரிந்துகொண்டு அவற்றிற்கு நடைமுறை தீர்வுகளை வழங்கி, முடிவுகளைக் காட்டிய தன்னுடன் சேர்ந்து நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வீர்களா? இல்லையேல் இன்னும் பிரச்சினையை புரிந்து கொள்ளாத மற்றும் அதிகாரத்திற்காக இருட்டில் தடவிக் கொண்டிருக்கும் குழுக்களுடன் இணைவதா என்பதை நாட்டு மக்கள் தீர்மானிக்க வேண்டும் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
தவறான பாதையில் செல்வதால் ஏற்படும் ஆபத்துக்களை அனைவரும் அறிந்துவைத்துள்ளதால், அது தொடர்பில் தீர்மானத்தை எடுப்பதற்கு மக்களுக்கு முழு உரிமையும் சுதந்திரமும் இருப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
மக்கள் எடுக்கும் தீர்மானம் ரணில் விக்ரமசிங்கவின் எதிர்காலத்தை தீர்மானிக்காது என்றும் அது நாடு மற்றும் எதிர்கால குழந்தைகளின் எதிர்காலத்தையே தீர்மானிக்கும் என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
வங்குரோத்து அடைந்து நாட்டின் பொருளாதாரம் படுகுழியில் வீழ்ந்திருந்த நாட்டை மீட்பதற்கு தனது கட்சிக்கு பாராளுமன்ற அதிகாரம் இருக்கவில்லை எனவும் தன்னால் நியமிக்கப்பட்ட அரச அதிகாரிகளோ தான் நியமித்த அமைச்சரவையோ இருக்கவில்லை என்றும் குறிப்பிட்ட ஜனாதிபதி, அவை எதுவும் இன்றி உலகையே ஆச்சரியப்படுத்தும் விதத்தில் இரண்டு வருடங்களில் நிலையான நாட்டை கட்டியெழுப்ப தன்னால் முடிந்ததாகவும் குறிப்பிட்டார்.
ஜனாதிபதி ஆற்றிய முழுமையான உரை வருமாறு :
நமது நாட்டின் அண்மைய வரலாற்றில் இன்று மிக முக்கியமான நாள். இந்நாள் ஒரு தனித்துவமான மைல்கல்.
கடந்த காலத்தில் நாம் பாடுபட்ட பணிகளுக்கான நல்ல பலன்கள் தற்போது நமது நாட்டுக்குக் கிடைத்துள்ளன.
இன்று முற்பகல் பெரிஸ் நகரில் இலங்கையின் உத்தியோகபூர்வ இருதரப்பு கடன் வழங்குநர்களுடன் கடன் மறுசீரமைப்பு குறித்த பேச்சுவார்த்தைகள் நிறைவு செய்யப்பட்டு, கடன் வழங்குநர்களுடன் இறுதி இணக்கப்பாட்டை எட்ட முடிந்தது.
அதேபோல் சீனாவின் எக்ஸிம் வங்கியுடன் இன்று நாம் பீஜிங் நகரில் இறுதி இணக்கப்பாட்டினை எட்டினோம். அதற்கு அமைவான உரிய செயற்பாடுகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
நாட்டை உண்மையிலேயே நேசிப்பவர்களுக்கு இது ஒரு நற்செய்தியாகும்.
SRI LANKA WON!
இருதரப்பு கடன் வழங்குநர்களுடன் இவ்வகையான இணக்கப்பாட்டை எட்டுவதற்கு கடந்த இரண்டு ஆண்டுகளாக நாங்கள் கடுமையாக உழைத்து வந்தோம். விரிவாக பேச்சுவார்த்தை நடத்தினோம். கடந்த காலத்தில் நாம் பெற்ற பொருளாதார வெற்றிகள் இருதரப்பு பேச்சுவார்த்தைகளில் எமக்குப் பெரும் பலமாக இருந்தது.
இந்த பேச்சுவார்த்தைகள் வெற்றியடைய, எமது கடன் வழங்குநர்களான சீனா மற்றும் சீன எக்ஸிம் வங்கி, உத்தியோகபூர்வ கடன் வழங்குநர் குழுவில் இணைத்தலைமை வகிக்கும் இந்தியா, ஜப்பான், பிரான்ஸ் ஆகிய நாடுகளும் அந்தக் குழுவின் மற்ற உறுப்பினர்களும், பெரிஸ் கழகத்தின் செயலகமும் எமக்கு வழங்கிய ஆதரவுக்கு நான் நன்றி கூறுகிறேன்.
இந்தப் பேச்சுவார்த்தைகளில் கலந்துகொண்ட இலங்கை மற்றும் ஏனைய நாடுகளின் பிரதிநிதிகளுக்கும், எமக்கு ஆலோசனை வழங்கிய லஸார்ட்(Lazard) மற்றும் கிளிபோர்ட் சான்ஸ் (Clifford Chance)அதிகாரிகளுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம் .
இந்த ஒப்பந்தங்களின் மூலம், வெளிநாடுகளில் உள்ள அனைத்து இருதரப்பு கடன் தவணைகளையும் 2028 ஆம் ஆண்டுவரை ஒத்திவைக்க முடியும். அதன்பிறகு, சலுகை நிபந்தனைகள் அடிப்படையில் அனைத்து கடன்களையும் செலுத்த 2043 வரை நீண்டகால அவகாசம் கிடைக்கும்.
2023 ஆம் ஆண்டில் நாம் உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்பை நிறைவு செய்துள்ளோம்.இப்போது வெளிநாடுகளின் இருதரப்புக் கடன் மறுசீரமைப்பை வெற்றிகரமாக நிறைவுசெய்ய முடிந்தது.
அடுத்ததாக வெளிநாட்டு பிணைமுறி உரிமையாளர்களை உள்ளடக்கிய வணிகக் கடன் வழங்குநர்களுடன் ஒரு உடன்பாட்டை எட்ட வேண்டும்.
இந்தப் பாதையில் தொடர்ந்து செல்வதன் மூலம், அதற்கான இணக்கப்பாட்டை ஏற்படுத்திக் கொள்ள முடியும். அது தொடர்பான பேச்சுவார்த்தைகளை நாம் தொடர்ந்தும் முன்னெடுத்து வருகிறோம்.
இன்று நாம் எட்டியுள்ள இணக்கப்பாடுகளால், நமது பொருளாதாரத்திற்கு சுவாசிக்க அவகாசம் கிடைக்கிறது.
2022ஆம்ஆண்டில்,மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 9.2வீதத்தினை, வெளிநாட்டுக் கடனை செலுத்துவதற்கு செலவிட வேண்டியிருந்தது.
2027 முதல் 2032 வரையான இடைப்பட்ட காலத்தில் கடன் செலுத்துவதற்காக மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4.5மூ இற்கும் குறைவான தொகையையே ஒதுக்குவதற்கான வாய்ப்பு கிட்டியுள்ளது.
2022 இல் அரசாங்கத்தின் வருடாந்த நிதித் தேவை, மொத்த தேசிய உற்பத்தியில் 34.6 சத வீதமாகும் . இந்த இணக்கப்பாடுகள் காரணமாக 2027-2032 வரையான காலப்பகுதியில் அந்த நிதித் தேவை 13 சதவீதத்தை விடக் குறையும்.
2022 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம், இலங்கை கடன் செலுத்த முடியாத நாடு என்று உத்தியோக பூர்வமாக அறிவித்தது.அந்த அறிவிப்பைத் தொடர்ந்து உலக நாடுகள் எங்களுடனான கொடுக்கல் வாங்கல்களை நிறுத்திவிட்டன.
வங்குரோத்து அடைந்த நாட்டுடன் நிதி உறவுகளைப் பேணுவதற்கு எந்தவொரு நாடும் முன்வராது, கடன்களை வழங்காது. குறைந்தபட்சம் கடன் பத்திரங்களைக்கூட ஏற்றுக்கொள்ளாது.
இந்தப் பின்னணியில் வெளிநாட்டுக் கடன் உதவியோடு நம் நாட்டில் செயற்படுத்தப்பட்ட திட்டங்கள் அனைத்தும் நிறுத்தப்பட்டன. அந்த நாடுகள், தங்கள் திட்ட அலுவலகங்களை மூடிவிட்டு தத்தமது நாடுகளுக்குச் சென்றன. அபிவிருத்திப் பணிகள் முற்றிலும் முடங்கின.
ஆனால் இப்போது கடன் மறுசீரமைப்புப் பணியின் முக்கியமான கட்டத்தை வெற்றிகரமாக முடித்துள்ளதால், வெளிநாட்டு நிதியைப் பயன்படுத்தி முன்னெடுத்த அனைத்து திட்டங்களையும் மீண்டும் தொடங்க அந்தந்த நாடுகளுக்கு சட்டபூர்வ வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளன.
கட்டுநாயக்க விமான நிலைய அபிவிருத்தி, இலகு ரயில் பாதை, அதிவேக நெடுஞ்சாலை உள்ளிட்ட பல திட்டங்கள் மீண்டும் ஆரம்பிக்கப்படும். அது மாத்திரமன்றி பல புதிய அபிவிருத்தித் திட்டங்களை எமக்குப் பெற்றுக்கொள்ள முடியும்.
இருதரப்பு கடன் வழங்குநர்கள் எங்களுடன் ஒரு இணக்கப்பாட்டுக்கு வந்துள்ளதால், நமது நாட்டின் மீதான சர்வதேச நம்பிக்கை மேலும் அதிகரித்து வருகிறது.
இது ஒரு வகையான சர்வதேச அங்கீகாரமாகும். எமது கடன் பத்திரத்தைக்கூட ஏற்றுக்கொள்ளாத சர்வதேச சமூகம் தற்போது எமக்கு நம்பிக்கைச் சான்றிதழை வழங்கும் நிலைக்கு வந்துள்ளது.
எனவே இன்று நாம் இணக்கப்பாட்டிற்கு வந்த இந்த இரண்டு புரிந்துணர்வு ஒப்பந்தங்களையும் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளோம்.
இந்த உடன்படிக்கைகளை பிரதமர் அவர்கள், ஜூலை 2ஆம் திகதி நடைபெறும் விசேட பாராளுமன்ற அமர்வில் பாராளுமன்ற அங்கீகாரத்துக்காகச் சமர்ப்பிப்பார். பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நாட்டை நேசிக்கும் அனைத்துத் தரப்பினரையும் அந்த ஒப்பந்தங்களை அங்கீகரிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
நாம் இதுவரை எளிதான பயணத்தை கடந்துவரவில்லை. கடந்த காலங்களில் நாம் மிகக் கடினமான, கஷ்டமான பாதையைக் கடந்துவந்தோம்.
இந்தப் பணிக்காக நமது அமைச்சர்களும், அதிகாரிகளும் கடுமையாக உழைத்தனர். நமது நாட்டின் பெரும்பான்மையான மக்கள் பொறுமையுடன் எங்களுக்கு ஒத்துழைப்பு வழங்கினர். நாங்கள் அனைவரும் வெவ்வேறு சிரமங்களையும், கஷ்டங்களையும் எதிர்கொண்டோம். இன்னமும் எதிர்கொள்கின்றோம்.
இந்த முன்னேற்றத்தை சீர்குலைக்க சிலர் முயன்றனர், இன்னும் முயல்கின்றனர். ஆனால் அவர்களால் இந்தப் பயணத்தை நிறுத்த முடியவில்லை. இவர்கள் எதிர்காலத்தில் ஒருநாள், நாட்டைக் காட்டிக் கொடுத்தமைக்காக, தங்களின் பிள்ளைகளின் முன்னால் வெட்கப்பட நேரிடும்.
பொருளாதாரம் வலுப்பெறும் போதெல்லாம், நாம் சலுகைகளை வழங்கினோம். பொருளாதாரத்திற்கு பாதிப்பு ஏற்படாத வகையில் அந்தச் சலுகைகள் வழங்கப்பட்டன.
எதிர்காலத்திலும் அந்நிலைமை தொடரும். சரியான பாதையில் பயணித்தால், பொருளாதாரம் வலுப்பெறும்போது, தற்போதைய கஸ்டங்களை படிப்படியாகக் குறைத்துக் கொள்ளலாம்.
வேலை நிறுத்தங்களாலும், அச்சுறுத்தல்களாலும் இந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முடியாது. நாம் அனைவரும் ஒன்றிணைந்து பொருளாதாரத்தை வலுப்படுத்துவதன் மூலம், எங்களுக்கு தீர்வுகளும், நிவாரணங்களும் கிடைக்கும்.
இரண்டு வருடங்களுக்கு முன்னர் நாட்டைப் பொறுப்பேற்றபோது, நாங்கள் மிகவும் கடினமான பாதையில் செல்ல வேண்டியிருக்கும் என்பதை நான் சுட்டிக்காட்டினேன். இந்தப் பிரச்சினைகளை ஒரு வாரத்தில், இரண்டு, மூன்று, நான்கு மாதங்களில் அல்லது ஒரு வருடத்தில் தீர்க்க முடியாது என்றும் குறிப்பிட்டிருந்தேன்.
‘ஹுனுவட்டயே’ நாடகத்தை மேற்கோள்காட்டி, அடிவாரம் தெரியாத, பயங்கரமான பாதாளத்தின் மேலாக அமைக்கப்பட்ட தொங்கு பாலத்தை நாம் கடக்க நேரிடும் என்பதை வலியுறுத்தினேன்.
அப்போது நம் நாட்டின் பொருளாதாரம் பாதாளத்தில் இருந்தது. அதிலிருந்து நாட்டைக் காப்பாற்ற பலர் முன்வரத் தயங்கினர், பயந்தனர். ‘செய்யாத சிகிச்சைக்கு சிறு-தேன் ஔடதம் தேடுவதைப் போல’ ஒவ்வொரு காரணங்களைக் கூறி தப்பிக் கொள்ள முயன்றனர்.
முழு ஆட்சி அதிகாரத்தையும் கொடுத்தால் நாட்டைப் பொறுப்பேற்பதாக ஒரு தரப்பு கூறியது. அமைச்சரவைக்கு தங்களுடைய ஆட்களை நியமிக்க அனுமதித்தால் பொறுப்பை ஏற்றுக் கொள்வதாக மற்றொரு குழுவினர் தெரிவித்தனர். இன்னும் சிலர் ஜனாதிபதி பதவியை வழங்கினால் ஏற்றுக் கொள்வதாகக் கூறினர்.
ஆனால் எந்த நிபந்தனையும் இல்லாமல் இந்த சவாலை நான் ஏற்றுக்கொண்டேன். பொருளாதாரப் படுகுழியில் இருந்து நம் நாட்டையும், நம் நாட்டு மக்களையும் காப்பாற்றும் வலிமை எனக்கு இருந்தது. என்னிடம் வேலைத்திட்டம் இருந்தது.
இதுபோன்ற சூழ்நிலைகளில் இருந்து நாடுகள் வெளிவருவதற்கான வழிகளைப் பற்றிய புரிதலும் அனுபவமும் எனக்கு இருந்தது.
திட்டமிட்ட கொள்கைகள் மற்றும் அர்ப்பணிப்புடன் பொருளாதாரத்தை மீட்டெடுக்க முடியும் என்ற நம்பிக்கை எனக்கு இருந்தது. அதற்காக சர்வதேச ஆதரவைப் பெற முடியும் என்பதையும் அறிந்திருந்தேன்.
அவைதான் என்னிடம் இருந்தன. எனக்கென்று எம்.பி.க்கள் இருக்கவில்லை. எனக்கென்று ஒரு அமைச்சரவை இருக்கவில்லை. எனக்கென்று ஒரு அரசாங்கம் இருக்கவில்லை. ஆனால் நான் சவாலை ஏற்றுக்கொண்டேன்.
“பெருமை பேசுவதை விட்டுவிட்டு செயலில் இறங்குவதே ஒரு பணியை ஆரம்பிப்பதற்கான சரியான வழி!” என்று உலகப் புகழ்பெற்ற படைப்பாளி வால்ட் டிஸ்னி சொன்ன கூற்று நினைவுக்கு வந்தது. பயமின்றி செயலில் இறங்கினேன்.
2022 ஆகஸ்ட் 3 ஆம் திகதி பாராளுமன்றக் கூட்டத்தொடரின் ஆரம்ப உரையின்போது, வீழ்ச்சியடைந்த பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்ப பின்பற்ற வேண்டிய நான்கு அம்சக் கொள்கைகளை நான் நாட்டுக்கு முன்வைத்தேன்.
1. சர்வதேச நாணய நிதியத்துடன் கலந்தாலோசித்து, விரிவான கடன் வசதிகளைப் பெற்று நாட்டில் நிதி ஒழுக்கத்தை ஏற்படுத்துவது,
2. சர்வதேச நிதி மற்றும் சட்ட வல்லுனர்களான டுயணயசன மற்றும் ஊடகைகழசன ஊhயnஉந ஆகியோருடன் இணைந்து கடன் உறுதிப்படுத்தல் திட்டத்தைத் தயாரித்து கடன் வழங்குநர்களுடன் உடன்பாட்டை எட்டுவது,
3. வெளிநாட்டு முதலீட்டை உறுதிப்படுத்திக் கொள்வதோடு, ஏற்றுமதிப் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் கொள்கைகள், சட்ட திட்டங்களை உருவாக்குவதுடன், டிஜிட்டல் பசுமைப் பொருளாதாரத்தை உருவாக்குவது,
4. இத்திட்டத்தின் மூலம் 2048 ஆம் ஆண்டுக்குள் கடனற்ற பொருளாதாரத்தை உருவாக்கி அபிவிருத்தியடைந்த நாடாக மாற்றுவது,
ஆகிய நான்கு அம்சக் கொள்கைகளை அன்று முன்வைத்தேன்.
அன்று நான் குறிப்பிட்ட வேலைத்திட்டம் குறித்தும், அதை எப்படிச் செயல்படுத்துவது என்பது பற்றிய அனைத்துத் தகவல்களையும் அவ்வப்போது பாராளுமன்றத்தில் முன்வைத்தேன். இதை நாங்கள் இரகசியமாகச் செய்யவில்லை. அனைத்தும் வெளிப்படைத் தன்மையுடன் செய்யப்பட்டன.
நான்கு அம்சக் கொள்கைகளில் முதல் மூன்று விடயங்களும் இப்போது வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. நமது வேலைத்திட்டமும் நாம் கடந்து வந்த பாதையும் சரியானவை என்பதை இது நிரூபிக்கிறது.
கடனை திருப்பிச் செலுத்த முடியாமல் வங்குரோத்து முத்திரை குத்தப்பட்ட நாடு என்ற வகையில், இரண்டே ஆண்டுகளில் இந்த மாதிரியான முன்னேற்றத்தை எட்ட முடிந்ததே பாரிய வெற்றியாகும்.
இவ்வாறு பொருளாதார படுகுழியில் விழுந்த ஏனைய நாடுகளுக்கு, சாதகமான நிலையை எட்ட நீண்ட காலம் பிடித்தது. அண்மைய வரலாற்றில், உலகில் எந்த நாடும் இவ்வளவு சிறப்பான வெற்றியை இவ்வளவு குறுகிய காலத்தில் பெற்றதில்லை.
நமது பொருளாதாரம் வீழ்ந்துள்ள படுகுழி தொடர்பில் நாம் தெளிவாகப் புரிந்து வைத்திருந்தோம்.
அதற்குக் கொடுக்கப்பட வேண்டிய சரியான தீர்வுகளை நாங்கள் அறிந்திருந்தோம். எங்களுடைய தொலைநோக்குப் பார்வை, உறுதிப்பாடு, அர்ப்பணிப்பு காரணமாக இந்த நிலையை எங்களால் அடைய முடிந்தது. எனவே, இந்த வழியைப் பின்பற்றினால், நான்காவது கட்டமான 2048 இற்குள் அபிவிருத்தியடைந்த நாடாக மாற முடியும் என்பது இப்போது தெளிவாகிறது.
2022 ஆம் ஆண்டில் பொருளாதாரத்தில் அதல பாதாளத்தில் இருந்த ஒரு நாட்டின் தற்போதைய நிலை என்ன?
தொடர்ந்து 6 காலாண்டுகளாக சுருங்கிச் சென்ற நமது பொருளாதாரம் 2023 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில் இருந்து வளரத் தொடங்கியது. 2022ஆம் ஆண்டு ஏப்ரல் மாதமளவில் மீண்டு வர வழியின்றி, வற்றிப் போயிருந்த எமது வெளிநாட்டு கையிருப்பு தற்போது 5,500 மில்லியன் டொலராக உயர்ந்துள்ளது.
ரூபாய் வலுப்பெற்றுள்ளது. வங்கி வட்டி விகிதம் குறைந்துள்ளது.
2022 செப்டம்பரில் 70 சதவீதமாக இருந்த பணவீக்கம் தற்போது 9 சதவீதமாகக் குறைந்துள்ளது. முதன்மை கணக்கு இருப்பை உபரியாக மாற்றக்கூடிய நிலைமை உருவாகியிருக்கிறது. அதேபோல், கடந்த ஆண்டு நாட்டின் வெளிநாட்டுக் கணக்குக் கையிருப்பில் உபரியை ஏற்படுத்த முடிந்தது. 1977 இற்குப் பின்னர் உபரியை ஏற்படுத்தியது இதுவே முதல் முறையாகும்.
சிறந்த பொருளாதார முகாமைத்துவத்தின் மூலம் வங்குரோத்து நிலையில் இருந்து மீள்வதற்காக நாம் இந்த இலக்குகளை எட்டியிருக்கிறோம். எமது உத்தியோகபூர்வ கடன் வழங்குநர்கள் கடன் மறுசீரமைப்புக்கு இணக்கம் தெரிவித்துள்ளனர்.
அதனால், நாம் இப்போது மீண்டும் சர்வதேசத்தின் நம்பிக்கையைப் பெற்றுள்ளோம். அதேநேரம் நாம் இதுவரை கடந்து வந்த பாதை சரியானது என்பது மீண்டும் உறுதி செய்யப்பட்டுள்ளது. சர்வதேச அளவிலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
இந்த வேலைத் திட்டத்தை பாராளுமன்றத்தில் அன்று சமர்ப்பித்தபோது, நாட்டைப் பற்றி சிந்தித்து இந்த வேலைத் திட்டங்களுடன் இணைந்துகொள்ளுமாறு இந்நாட்டின் அனைத்து அரசியல் கட்சிகளிடமும் அழைப்பு விடுத்தேன்.
சில அரசியல் கட்சிகள் அந்த அழைப்பை ஏற்று இன்று என்னுடன் இணைந்து இந்தப் பயணத்திற்கு ஆதரவளித்து வருகின்றன. ஆனால் சில அரசியல் கட்சிகள் இன்றும் விமர்சித்து வருகின்றன.
இந்த விமர்சனங்கள் பற்றியும் கூற விரும்புகிறேன்.
கோட்டாபய ஜனாதிபதி பதவியில் இருந்தபோது சர்வதேச நாணய நிதியம் இல்லாமல் தீர்வு கிட்டாது என்று சொன்னவர்கள் இப்போது சர்வதேச நாணய நிதியம் தேவையில்லை என்கின்றனர்.
மக்கள் கஷ்டப்படும்போது பொருளாதாரத்தை மேம்படுத்துவதில் பயனில்லை என்று கூறிய தரப்பினர், அவர்கள் ஆட்சிக்கு வந்தால் பால் தேநீருக்கு பதிலாக வெறும் தேநீரை மட்டும் குடிக்க வேண்டியிருக்கும் என்று கூறுகின்றனர்.
சிலர் பிரசித்தமடைய அரசியல் செய்கின்றனர். இல்லையெனில், பாடசாலை அரசியலை செய்கிறார்கள். அவர்களின் அரசியல், பொருளாதார, ஆட்சி நிர்வாக அறிவு முன்பள்ளிக் கல்விக்கு மேலாக வளரவில்லை.
எவ்வாறாயினும், இந்த பிரச்சினை உக்கிரமடைந்த தருணத்திலேயே அதன் ஆழத்தை நான் உணர்ந்துகொண்டேன். தனியொரு பாராளுமன்ற உறுப்பினராக இருந்தாலும் நான் இந்த நெருக்கடி குறித்து எடுத்துக்கூறினேன். தீர்வுகளையும் வலியுறுத்தினேன். சிலருக்கு இன்னும் அதன் பாரதூரம் புரியாமல் இருக்கிறது.
நான் இந்த நாட்டைப் பொறுப்பேற்ற பின்னர், நாட்டைக் கட்டியெழுப்ப பல நடவடிக்கைகளை மேற்கொண்டேன். அவை அனைத்தும் சரியானவை என்பதை அறிந்துகொள்ள அவர்களுக்கு இரு வருடங்கள் தேவைப்பட்டன. நான் இப்போது முன்னெடுக்கும் நடவடிக்கைகள் சரியானவை என்பதை புரிந்து கொள்ளவும் அவர்களுக்கு இன்னும் சில வருடங்கள் தேவைப்படும்.
சரியானது எது என்பது புரியும் வரையில் அவர்கள் கூச்சலிட்டுக் கொண்டிருப்பதை மட்டுமே செய்வார்கள். வெட்டிப் பேச்சு பேசுவோர் தொடர்ந்து பேசிக்கொண்டிருப்பர். வீண் பேச்சு பேசுவோரும் தொடர்ந்து பேசிக்கொண்டிருப்பர்.
அது பற்றியும் சற்றுப் பேச விருப்புகிறேன்.
நமது நாடு ஐஎம்எப்(IMF)ஆதரவைப் பெற்றுக்கொண்ட முதலாவது முறை இதுவல்ல. இதற்கு முன்னதாக 16 தடவை ஐஎம்எப்(IMF) ஆதரவு பெறப்பட்டுள்ளது.
அந்த ஒவ்வொரு முறையும் இலங்கை தோல்வியடைந்தது. ஏன் அவ்வாறு நடந்தது? நாம் நிபந்தனைகளை மீறினோம். நாங்கள் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. நிதி ஒழுக்கத்தைப் பேணவில்லை.
ஐஎம்எப்(IMF) வேலைத் திட்டத்தில் நாம் வெற்றி பெறுவது வரலாற்றில் இதுவே முதல் முறையாகும். முன்பு ஐஎம்எப்(IMF) இடம் உதவி கோரிய 16 தடவையும் நாம் வங்குரோத்து அடைந்த நாடாக இருக்கவில்லை. ஆனால் வங்குரோத்து நாடாக உதவி கோரி, அந்தத் திட்டத்தை வெற்றிபெறச் செய்வதற்கு தலைமைத்துவம் வழங்கியதையிட்டு நான் மகிழ்ச்சி அடைகிறேன்.
அது இத்தோடு முடிந்துவிடாது. இது எமது பயணத்தில் ஒரு மைல்கல் மட்டுமே. இங்கிருந்து நாம் புதிய ஆரம்பத்தைப் பெற வேண்டும்.
தற்போது எங்களுக்கு சர்வதேச அங்கீகாரம் கிடைத்துள்ளது. மீண்டும் சர்வதேசத்தின் நம்பிக்கையைப் பெற்றுள்ளோம். இவற்றை நாம் பயன்படுத்தி பொருளாரத்தை முன்னேற்ற வேண்டும்.
முழுமையான வெற்றியைப் பெற வேண்டும். நாம் முழுமையான வெற்றியைப் பெற்றால் நம் நாடு மீண்டும் சர்வதேச நாணய நிதியத்திற்கு செல்ல வேண்டிய அவசியம் இருக்காது. அதற்காகவே நான் பாடுபடுகிறேன்.
ஐஎம்எப்(IMF) செல்ல அவசியமில்லாத, வலுவான வினைத்திறனான வளர்ச்சியடைந்த பொருளாதாரத்தை நாட்டில் கட்டியெழுப்பவே நான் பாடுபடுகிறேன். அதற்காக நாம் உழைக்கிறோம்.
நானும், எமது அமைச்சரவையும், நமது அரசாங்கமும் அதற்காக அர்ப்பணிப்புடன் உழைக்கிறோம். உழைப்பது மட்டுமன்றி அதற்கான பலன்களையும் காட்டுகிறோம்.
எங்களை விமர்சிக்கும் சில குழுக்கள் அரசியல் அதிகாரத்தைப் பெறுவதை மட்டுமே நோக்கமாகக் கொண்டுள்ளனர்.
எதிர்காலத்தில் ஆட்சிக்கு வர ஆசைப்படுவோர் இப்போதே ஜனாதிபதியையும் தெரிவு செய்துவிட்டனர். அவர்களில் சிலர், ஆட்சிக்கு வந்தப் பின்னர் அமைச்சர்களை நியமிப்பது தொடர்பில் ஆழமாக ஆலோசனை நடத்துகிறார்கள்.
சிலர் இப்போதே அமைச்சுக்களைப் பகிர்ந்து கொண்டுள்ளனர். அவ்வாறு கனவு காணும் தரப்பினர், அவர்களின் மனைவியருக்கு அந்த அமைச்சுப் பதவிகளை வழங்குவது குறித்தும் சிந்திக்கிறார்கள்.
இந்தக் கனவு அமைச்சர்கள் இன்றைய எனது உரையை பற்றி நாட்டு மக்களிடம் எத்தனை பொய்களை சொல்லியுள்ளார்கள். ஊடக சந்திப்புக்களை நடத்தி பொய் சொன்னார்கள். அவை அனைத்துமே பொய் என்பது நாட்டு மக்களுக்கு இப்போது தெரியவந்திருக்கும்.
நாட்டுக்கு எவ்வாறான வெற்றி கிட்டினாலும், ஏன் அவர்கள் இன்னும் இதனை வன்மமாகப் பார்க்கிறார்கள்? நாட்டிற்கு கிடைக்கும் நற்செய்தியை எதிர்மறையாக பார்ப்பது ஏன்? எல்லாவற்றிலும் அரசியல் ஆதாயம் பெற ஏன் முயற்சிக்கிறார்கள்? அதிகாரத்தைப் பெறுவதற்காக ஏன் நாட்டுக்கு துரோகம் செய்கின்றனர்? இவ்வாறான சந்தர்ப்பங்களில் அரசியல் செய்வது ஏன்? அதற்கு இதுதான் காரணம்.
ஜனாதிபதி பதவிக்காக கடுமையாகப் போராடுகிறார்கள். நாம் நாட்டுக்காக போராடுகிறோம். அவர்களோ தங்களுக்குக் கிடைக்கும் பதவிகள், பட்டங்கள் பற்றிக் கனவு காண்கிறார்கள். ஆனால் நாம் நாட்டின் வளர்ச்சி பற்றி கனவு காண்கிறோம்.
அவர்கள் அமைச்சுக்களைப் பகிர்ந்துகொள்ள திட்டமிடுகிறார்கள். நாம் நாட்டை கட்டியெழுப்ப திட்டங்களை வகுக்கிறோம்.
அதிகாரத்தைக் கோரி இலங்கையைச் சுற்றி வருகிறார்கள். பாடசாலைகளுக்குச் சென்றும் அதிகாரத்தை கேட்கிறார்கள். உலகம் முழுவதும் பறந்து நாட்டின் அதிகாரத்தைக் கேட்கிறார்கள். அதிகாரத்துக்காக அல்லும் பகலும் ஓடித் திரிகின்றனர்.
ஆனால் நாம் நாட்டுக்காக இரவு பகல் பாராமல் உழைக்கிறோம். நாடு முழுதுமாகச் சென்று மக்கள் தேவைகளைப் பூர்த்தி செய்கிறோம். பொருளாதாரத்தை வலுப்படுத்தும் திட்டங்களை ஆரம்பிக்கிறோம். நான் உலகம் முழுவதும் சென்று நமது நாட்டின் வளர்ச்சிக்காக சர்வதேச ஆதரவைப் பெற்று வருகிறேன்.
இத்தகைய பின்னணியில் நான் உங்களிடம் இந்தக் கேள்வியைக் கேட்க விரும்புகிறேன்.
ஆரம்பத்திலிருந்தே பிரச்சினையைப் புரிந்துகொண்டு நடைமுறைச் சாத்தியமான தீர்வுகளை வழங்கிய என்னுடன் நாட்டை முன்னேற்றுவீர்களா? அல்லது இன்னும் பிரச்சினையை புரிந்து கொள்ளாமல், இருட்டில் தடவிக் கொண்டு, அதிகாரத்தைப் பெற முயற்சிக்கும் குழுக்களுடன் பயணிக்க விரும்புகிறீர்களா?
நீங்கள் சரியான பாதையில் சென்று உங்களதும் நாட்டினதும் எதிர்காலத்தை மேம்படுத்துவீர்களா? அல்லது பயணத்தை மாற்ற வேண்டுமா?
தவறான பாதைக்குத் திரும்பினால் அல்லது தவறான பாதையில் பயணித்தால் ஏற்படும் விளைவுகளை நாம் அனைவரும் நன்கு அறிவோம். எனவே சரியான முடிவை எடுங்கள்.
அந்த முடிவை எடுக்க உங்களுக்கு முழு உரிமையும் சுதந்திரமும் உள்ளது. உங்கள் முடிவு ரணில் விக்ரமசிங்கவின் எதிர்காலத்தை தீர்மானிக்காது. நாட்டின் எதிர்காலத்தையும் உங்கள் எதிர்காலத்தையும் மட்டுமன்றி அது உங்கள் குழந்தைகளின் எதிர்காலத்தையும் தீர்மானிக்கப் போகிறது.
பொருளாதாரம் படுகுழியில் வீழ்ந்து வங்குரோத்து நிலையிலிருந்த நாட்டை மீட்க எனது கட்சிக்கு பாராளுமன்றத்தில் அதிகாரம் இருக்கவில்லை.
நான் நியமித்த அரசாங்க அதிகாரிகளும் இருக்கவில்லை. அமைச்சர்களும் இருக்கவில்லை. ஆனால் அவை எதுவுமேயில்லாமல், உலகையே வியப்பில் ஆழ்த்தும் வகையில் இரண்டு வருட காலத்தில் நாட்டை சுமூகமான நிலைமைக்கு கட்டியெழுப்ப என்னால் முடிந்தது. அதை யோசித்துப் பாருங்கள்.
இரண்டு வருடங்களுக்கு முன்பு வீதிகளில் எவற்றை கண்டோம்? இன்று எதனைக் காண்கிறோம்.
ஆபத்தான தொங்கு பாலத்திலிருந்து இலங்கை அன்னையை மீட்டுத் தருவதாக அன்று நான் வாக்குறுதி அளித்தேன். குழந்தையைப் பத்திரமாக மீட்டு வந்திருக்கிறேன்.
இப்போது என்ன நடந்தது? “ஹுனுவடயே” நாடகத்தில் வருவது போல், குழந்தையைக் காக்க எந்த ஆதரவும் தராத குழுக்கள் தற்போது குழந்தையின் உரிமையைப் பெறப் போராடுகின்றனர்.தொங்கு பாலத்தைக் கடக்கும் முன் குழந்தையை சொந்தமாக்க முயற்சிக்கிறார்கள். குழந்தையை இரு பக்கமாக அன்றி அனைத்துப் பக்கங்களிலும் பிடித்து இழுக்கின்றனர்.
நாம் அறிந்த ‘ஹுனுவடயே’ நாடகத்தின் நிறைவில், குழந்தையின் உரிமை உண்மையான தாய்ப்பாசமுள்ள அன்னைக்கு கிடைக்கிறது.
“தகுதியானவருக்கு தகுதியானது கிடைக்க வேண்டும்.குதிரை சரியான வண்டியோட்டியிடம் கொடுக்கப்பட வேண்டும்” என்று நாடகத்தின் கதாசிரியர் கூறுகிறார்.
அந்தக் கதையில் வரும் நீதிபதி அஸடக்கைப் போன்று நீங்களும் சரியான முடிவை எடுக்க வேண்டும். அப்போது தகுயானவருக்கு தகுதியானது கிடைக்கும். நமது நாட்டுக்கு ஒளிமயமான எதிர்காலம் கிட்டட்டும்.