இந்தியா உதவியால் இலங்கை மீண்டது: இலங்கை அதிபர் ரணில் நெகிழ்ச்சி
23 Jun,2024
இந்தியாவின் கடனுதவியால் பொருளாதார நெருக்கடியின் இரண்டு கடினமான ஆண்டுகளில் இருந்து மீண்டுள்ளதாக இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே தெரிவித்துள்ளார். இலங்கையின் கொழும்புவில் 31வது அனைத்திந்திய கூட்டாளர்கள்(partners)கூட்டம் கடந்த 20ம் தேதி தொடங்கி நேற்று வரை நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அந்நாட்டின் அதிபர் ரணில் விக்ரமசிங்கே கலந்து கொண்டு பேசியதாவது, இலங்கை பொருளாதார நெருக்கடியில் சிக்கி இரண்டு கடினமான ஆண்டுகளில் இருந்து மீண்டுள்ளது. இந்தியா எங்களுக்கு 3.5 பில்லியன் டாலர் (ரூ.29,247கோடி) கடனுதவி வழங்கியதால் இது சாத்தியமானது என்பதை நான் ஒப்புக்கொள்ள வேண்டும்.
இவை அனைத்தும் திருப்பி செலுத்தப்படும். இரு நாடுகளும் இணைந்து பல்வேறு துறைகளில் பணியாற்ற இருக்கிறோம். இதில் எரிசக்தி துறையும் ஒன்றாகும். கடந்த வாரம் பிரதமர் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்வதற்காக டெல்லி சென்றபோது நாங்கள் முடிவு செய்த, ஒப்புக்கொண்ட கூட்டு திட்டத்தை விரைவுபடுத்துவது குறித்து விவாதித்தேன். முக்கியமானவை அடையாளம் காணப்பட்டுள்ளது. இவை நாம் செல்லும் புதிய பாதையை காட்டும். பல்வேறு முன்மொழிவுகள் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது” என்றார்.