இத்தாலிய குடியுரிமைக்கு விண்ணப்பித்த இலங்கையர்கள் கைது
13 Jun,2024
இத்தாலிய குடியுரிமைக்கு விண்ணப்பித்த இலங்கையர்கள் அந்த நாட்டு பொலிஸாரால் கைது செய்யப்பட்டு குற்றவியல் சட்டத்தின் கீழ் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
வென்னப்புவ பிரதேசத்தில் உள்ள வெளிநாட்டு சான்றிதழ் மொழிபெயர்ப்பு நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட இலங்கையில் உள்ள இத்தாலிய தூதரகத்தின் போலி முத்திரையிடப்பட்ட சான்றிதழ்களை வழங்கி குடியுரிமைக்கு விண்ணப்பித்த குற்றச்சாட்டில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இத்தாலியில் வசிக்கும் இலங்கையர்கள் தங்கள் குடும்ப உறுப்பினர்களை இத்தாலிக்கு அழைப்பதற்காக விசா விண்ணப்பிக்கும் போதும், இத்தாலிய குடியுரிமைக்கு விண்ணப்பிக்கும் போதும், பிறப்பு, திருமணம், பொலிஸ் அறிக்கை சான்றிதழ்கள் மற்றும் பிற சான்றிதழ்களை இலங்கையில் உள்ள இத்தாலிய தூதரகத்தில் இருந்து சட்டப்பூர்வமாக்குவது கட்டாய நடைமுறையாகும்.
போலி ஆவணங்கள்
இவ்வாறான தேவையை நிறைவேற்றும் வகையில் முகவர்கள் ஊடாக ஆவணங்களை பெற்றுக்கொண்டவர்கள் விசாரணையின் போது சிக்கியுள்ளனர்.
வென்னப்புவ பிரதேசத்தில் வெளிநாட்டு சான்றிதழ் மொழிபெயர்ப்பு நிறுவனமொன்றை நடத்தும் ஒருவரினால் இந்த போலி சான்றிதழ்கள் தயாரிக்கப்பட்டுள்ளது.
இந்த பிரச்சினைகளை எதிர்கொண்ட இலங்கையர்கள் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரிவித்துள்ளதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது