நன்னடத்தை இல்ல சிறுமிகள் பாலியல் நடவடிக்கைகளுக்காக விற்பனை
10 Jun,2024
கண்டி - வெலம்பொடை பிரதேசத்தில் உள்ள சிறுவர் நன்னடத்தை பராமரிப்பு நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சிறுமிகளை பாலியல் நடவடிக்கைகளுக்காக விற்பனை செய்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
சிறுவர் நன்னடத்தை பராமரிப்பு நிலையத்தில் இருந்த 17 வயதுடைய சிறுமியொருவர் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
தம்புள்ளை நீதவான் நீதிமன்றில் இருந்து கிடைக்கப்பெற்ற உத்தரவின் பிரகாரம் முறைப்பாடு செய்த சிறுமி கடந்த ஜனவரி மாதம் குறித்த சிறுவர் தடுப்பு நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தார்.
அங்கு கண்காணிப்பாளரால் சிறுமிகள் பல்வேறு நபர்களுக்கு விற்கப்படுவதாகவும், சிறுவர் நன்னடத்தை பராமரிப்பு நிலையத்தில் உள்ள மருத்துவ அறையில் பாலியல் செயல்பாடுகளுக்கான வசதிகளை வழங்குவதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
மடாட்டுகம பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி முறைப்பாடு செய்த சிறுமியின் மருத்துவ அறிக்கையை பெற்றுக்கொள்வதற்காக அவரை அநுராதபுரம் சட்ட வைத்திய அதிகாரியிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுத்துள்ளார்.
இந்நிலையில் சம்பவம் தொடர்பாக வெலம்படை பொலிஸாரும் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.