இலங்கையில் சீரற்ற காலநிலையால் - 5 பேர் பலி - பல இடங்களில் வெள்ளம்
02 Jun,2024
புவக்பிட்டிய பிரதேசத்தில் வெள்ளத்தில் மூழ்கி 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
36 மற்றும் 07 வயதுடைய இரண்டு பெண்களும் 78 வயதுடைய ஆண் ஒருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
இதேவேளை, தெய்யந்தர, பல்லேவெல பிரதேசத்தில் வீடொன்றின் மீது மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் ஒருவர் காயமடைந்து எல்லேவெல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்
இந்த சம்பவம் நேற்று இரவு பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தெனகம பிரதேசத்தில் வசிக்கும் 20 மற்றும் 27 வயதுடைய இருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
சடலங்கள் எல்லேவெல வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை டீயெந்தர பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை சீரற்ற காலநிலை காரணமாக 3834 குடும்பங்களை சேர்ந்த 13717 பேர் பாதிக்கப்பட்டுள்ள அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
20 மாவட்டங்களில் 190 பிரதேச செயல பிரிவுகள் பாதிக்கப்பட்டுள்ளனர். 4119 வீடுகள் பகுதியளவில் பாதிக்கப்பட்டுள்ளன. 20 வீடுகள் பகுதியளவில் பாதிக்கப்பட்டுள்ளன.
அதேவேளை, பல நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் அதிகரித்துள்ளதாக நீர்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது. அதனை அண்டியுள்ள குடும்பங்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கப்பட்டுள்ளன. அடுத்து வரும் 24 மணித்தியாலங்களில் வெள்ளம் ஏற்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
8 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதற்கமைய, களுத்துறை, கண்டி, நுவரெலியா, இரத்தினபுரி, கொழும்பு, காலி, கேகாலை மற்றும் பதுளை மாவட்டங்களுக்கு இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.