இலங்கையிலுள்ள சதுப்பு நிலங்கள் தொடர்பில் வெளியாகிய அறிவிப்பு
31 May,2024
இயற்கை பாதுகாப்புக்கான சர்வதேச ஒன்றியம் ((IUCN) ) தமிழ்நாடு, இலங்கை மற்றும் மாலைதீவுகளை உள்ளடக்கிய கடலோரப் பகுதிகளில் உள்ள சதுப்பு நிலங்களை மிகவும் அபாயகரமானதாக பட்டியலிட்டுள்ளது.
தமது முதல் உலகளாவிய மதிப்பீட்டில் இந்த விடயத்தை இயற்கை பாதுகாப்புக்கான சர்வதேச ஒன்றியம் குறிப்பிட்டுள்ளது.
இந்த அறிக்கையை அடுத்து. சதுப்பு நிலத்தை பாதுகாக்க தமிழ்நாடு வனத்துறை 20 கிராம சதுப்புநில குழுக்களை அமைத்துள்ளது என்று இந்திய மாநில அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டு மே 22ஆம் திகதி வெளியிடப்பட்ட இயற்கை பாதுகாப்புக்கான சர்வதேச ஒன்றியத்தின் ஆய்வின்படி வெப்பமண்டல, துணை வெப்பமண்டல மற்றும் உலகெங்கிலும் உள்ள 36 புவியியல் பகுதிகளில் வெப்பமான மிதமான வடமேற்கு அத்திலாந்திக் பிராந்தியத்தைத் தவிர தென் இந்தியா, இலங்கை மற்றும் மாலைதீவுகள் மட்டுமே ஆபத்தான நிலையைக் கொண்டுள்ளன என்பது வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
பல்லுயிர் பாதுகாப்பு, உள்ளூர் சமூகங்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் மற்றும் சேவைகளை வழங்குதல் மற்றும் காலநிலை மாற்றத்தின் தாக்கத்தை குறைத்தல் ஆகியவற்றிற்கு சதுப்புநில சுற்றுச்சூழல் அமைப்புகள் முக்கியமானவை.
எனினும், சதுப்பு நிலங்களுக்கு அச்சுறுத்தல்கள் வேகமாக உருவாகி வருகின்றன என்று இயற்கை பாதுகாப்புக்கான சர்வதேச ஒன்றியம் சுட்டிக்காட்டியுள்ளது.