நாட்டுக்கு சுற்றுலா வந்த பெண் ஒருவரின் பயணப் பொதி திருடப்பட்ட சம்பவம் 5,000 டொலர் வெகுமதி அறிவிப்பு!
29 May,2024
நாட்டுக்கு வந்த இங்கிலாந்து பெண் ஒருவரின் பயணப் பொதி திருடப்பட்ட சம்பவம் தொடர்பில் கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
இந்நிலையில்,தனது பயணப் பொதியை கண்டுப்பிடித்துக்கொடுக்கும் நபர்களுக்கு 5,000 டொலர் பெறுமதியான பணப்பரிசு வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
பயணப் பொதியினுள் விமான பயணச்சீட்டு,கமரா , மடிக்கணினி மற்றும் 2,000 டொலர் பெறுமதியான பணம் உள்ளிட்ட பொருட்கள் காணப்பட்டதாகக் குறித்த முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த பெண்ணின் பயணப் பொதியே இவ்வாறு திருடப்பட்டுள்ளது. பிரபல யூடியூப் சேனல் ஒன்றினை நடத்திச் செல்லும் இவர் பல்வேறு நாடுகளுக்குச் சென்று அந்நாடுகளின் சுற்றுலாத் தலங்களைக் காணொளிகளாக எடுத்து தனது யூடியூப் சேனலில் பதிவிடுவது வழக்கம்.
சுமார் 37 நாடுகளுக்குச் சென்றுள்ள இவர் இலங்கையின் சுற்றுலாத் தலங்களைக் காணொளிகளாக எடுப்பதற்காக கடந்த 24 ஆம் திகதி இலங்கைக்கு வருகை தந்துள்ளார்.
இந்நிலையில் எல்ல பிரதேசத்திற்குச் செல்வதற்காகக் கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திற்குச் சென்றுள்ள நிலையில் சீரற்ற காலநிலை காரணமாக ரயில் சேவை இரத்துச் செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து பஸ்ஸில் எல்ல பிரதேசத்தை நோக்கிப் பயணித்துக்கொண்டிருக்கும் போது அதே பஸ்ஸில் பயணித்த இருவர் இவரது பயணப் பொதியைத் திருடியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.