இலங்கையில் (Sri Lanka) குறைந்த வருமானம் பெறும் 50,000 குடும்பங்களுக்கு காணி உறுதிப் பத்திரம் வழங்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க (Prasanna Ranatunga)சமர்ப்பித்த அமைச்சரவை பத்திரத்தின் பிரகாரமே அமைச்சரவை இதனை தீர்மானித்துள்ளது.
உறுதிப் பத்திரம் வழங்கும் திட்டத்தின் கீழ், வீடுகளின் முழு உரிமையை மாற்றும் போது அசல் பயனாளி இறந்திருந்தால், தற்போது அந்த வீட்டில் வசிக்கும் அவரது வாரிசுகளுக்கு உரிமைப் பத்திரம் வழங்கப்படவுள்ளது.
இதேவேளை, வீட்டு உரிமையாளர்களுக்கு நோட்டரி கட்டணம், முத்திரைகள் மற்றும் உரிமைப் பத்திரங்களை வழங்கும்போது ஏற்படும் பிற வரிகளில் இருந்து விலக்கு அளிக்கவும் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதோடு அதற்கான நோட்டரி கட்டணம், முத்திரைகள் மற்றும் பிற வரிகள் திறைசேரியால் ஏற்கப்பட வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளது.
2024ஆம் ஆண்டு வரவு செலவு திட்ட முன்மொழிவுகளின் ஊடாக நகர வீட்டு உரிமையின் கீழ் குறைந்த வருமானம் பெறும் 50,000 வீட்டு உரிமையாளர்களுக்கு வீட்டு உறுதிப் பத்திரங்களை வழங்க அதிபர் ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) முன்மொழிந்துள்ளார்.
இது தொடர்பில் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க கடந்த ஜனவரி 04ஆம் திகதி அமைச்சரவைப் பத்திரத்தை சமர்ப்பித்திருந்த நிலையில், சட்டமா அதிபர் தனது அவதானிப்புகளை முன்வைத்து உறுதிப் பத்திரங்கள் வழங்கும் போது அந்த வீடுகளில் வசிக்கும் ஒரு தரப்பினருக்கு பாதகம் ஏற்படலாம் எனத் தெரிவித்துள்ளார்
இந்த வீடுகளில் வசிப்பவர்களில் சிலர் ஏற்கனவே டிசம்பர் 31 முதல் நிலுவைத் தொகையை செலுத்தியுள்ளனர். எனினும், சிலர் செலுத்தாத காரணத்தினால் உரிய நேரத்தில் உரிய வாடகையை முழுமையாக செலுத்தியவர்களுக்கு இந்த பாதகம் ஏற்படக்கூடும் என சட்டமா அதிபர் தனது அவதானிப்புகள் மூலம் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதன்படி, கடந்த ஏப்ரல் மாத இறுதியில் சட்டமா அதிபரின் அவதானிப்புகளை கவனத்தில் கொண்டு அமைச்சரவை பத்திரத்தை சமர்ப்பித்த விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, டிசம்பர் 31இற்குள் வாடகை செலுத்திய வீட்டு உரிமையாளர்களுக்கு பத்திரங்களை வழங்குவதற்கு முன்னுரிமை வழங்க முன்மொழிந்தார்.
மேலும், உரிய காலத்துக்கான வாடகையை செலுத்தி பிறருக்கு உறுதிப் பத்திரங்களை வழங்கவும் முன்மொழியப்பட்டது.
இந்நிலையில், குறைந்த வருமானம் பெறும் வீடுகளின் முழு உரிமையும் மாற்றப்பட்ட பின், அந்த அடுக்குமாடி குடியிருப்புகளின் பராமரிப்புப் பணிகள் கூட்டு ஆதன முகாமைத்துவ அதிகார சபையினால் நியமிக்கப்பட்ட கூட்டு ஆதன முகாமைத்துவ கூட்டுத்தாபனங்களுக்கு மாற்றப்படும்.
இதற்காக நம்பிக்கை நிதியமொன்றை (Stinting Fund) உருவாக்குவதற்கும் எதிர்பார்க்கப்படுகிறது.
இதன்படி 12,230 வீடுகளுக்கு தலா 50,000 ரூபா வீதம் 611.5 மில்லியன் ரூபாவை திறைசேரியிலிருந்து வழங்குமாறும் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அமைச்சரவையிடம் கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.