‘எங்கள் நாட்டில் இனப்படுகொலையா?’ கனடா பிரதமரின் குற்றச்சாட்டுக்கு இலங்கை கண்டனம்
22 May,2024
இலங்கையில் ராணுவம் - போராளிகள் இடையிலான போரின்போது இனப்படுகொலை நிகழ்ந்ததாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குறிப்பிட்டதற்கு, இலங்கை தேசம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
’விடுதலைப் புலிகளுடனான ஆயுத மோதலின்போது இலங்கையில் இனப்படுகொலை நடந்தது என்ற குற்றச்சாட்டை முன்வைத்து தேர்தல் வாக்கு வங்கி அரசியலில் ஈடுபடுவதாக’ கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுக்கு எதிராக இலங்கை அரசு இன்று பதிலடி தந்துள்ளது. முன்னதாக மே 18 தினத்தை 'இனப்படுகொலை நினைவு தினமாக' அங்கீகரிக்க கனடா நாடாளுமன்றம் ஒருமனதாக வாக்களித்ததாக ஜஸ்டின் ட்ரூடோ ஒரு அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.
”இலங்கையில் இனப்போரின்போது இழைக்கப்பட்ட குற்றங்களுக்கு நீதி மற்றும் பொறுப்புக்கூறல் தொடர்பாக இலங்கையின் மக்கள் எதிர்கொள்ளும் சிரமங்களுக்காக நாங்கள் எப்போதும் வாதிடுவோம். முன்னாள் இலங்கை அரசாங்க அதிகாரிகள் நால்வருக்கு எதிராக, மனித உரிமை மீறல்களுக்கு பதிலளிக்கும் வகையில் 2023-ல் நாங்கள் பொருளாதாரத் தடைகளை விதித்தோம்" என்று ட்ரூடோவின் அந்த அறிக்கை விரிகிறது.
மேலும் "இலங்கையில் மனித உரிமைகளின் வலுவான பாதுகாவலராக கனடா உள்ளது. நிலையான சமாதானத்தை கட்டியெழுப்புவதற்கான அத்தியாவசிய மதிப்புகளான மதம், நம்பிக்கை மற்றும் பன்மைத்துவ சுதந்திரத்தை மதிக்குமாறு இலங்கை அரசாங்கத்தை தொடர்ந்து கனடா வலியுறுத்தும்" என்றும் அவர் தெரிவித்திருந்தார்.
கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் இந்த அறிக்கைக்கு, 2 நாட்கள் இடைவெளியில் இலங்கையின் வெளிவிவகார அமைச்சகம் கடுமையாக பதிலளித்துள்ளது. ’உள்நாட்டுப் போரின் போது இலங்கை தேசத்தில் இனப்படுகொலை என்று அழைக்கப்படும் பொய்யான குற்றச்சாட்டை’ நிராகரிப்பதாகக் கூறியது. "இலங்கையில் நடந்த இனப்படுகொலை என்ற மூர்க்கமான குற்றச்சாட்டுகளை இலங்கை அரசாங்கம், இதற்கு முந்தைய அனைத்து தகவல்தொடர்புகளிலும் திட்டவட்டமாக மறுத்து வந்துள்ளது. கனடாவிலோ அல்லது உலகின் வேறு எந்த இடத்திலிருந்தும், இலங்கையில் நடந்தது இனப்படுகொலை என புறநிலையாக தீர்மானிக்கவில்லை" என்றும் இலங்கை விளக்கமளித்துள்ளது.
"கனடாவின் இந்த ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள், ஐ.நா. சாசனத்தின் கொள்கைகளுக்கு மாறாக, தனிநாடு கோரி விடுதலைப் புலிகளால் நடத்தப்பட்ட ஆயுதமேந்திய மோதலின் முடிவுடன் தொடர்புடையது. விடுதலைப் புலிகள், கனடா உட்பட, உலகளவில் 33 நாடுகளில் பட்டியலிடப்பட்ட பயங்கரவாத அமைப்பாகும்" என்றும் இலங்கை தெரிவித்துள்ளது. ’இலங்கையில் இனப்படுகொலை நடந்ததாக தவறான விளக்கத்துக்கு பிரதமர் ட்ரூடோ ஒப்புதல் அளித்திருப்பது, வெளிநாடுகளில் வாழும் இலங்கை பாரம்பரியத்தின் மதிப்புமிக்க சமூகமான இலங்கை வம்சாவளி கனேடியர்களிடையே இன நல்லிணக்கத்தை மிகவும் சீர்குலைப்பதாகவும்’ அது கூறியுள்ளது.
"உலகளாவிய மனித உரிமை வழக்கறிஞர் என்று கூறிக்கொள்ளும் கனடா போன்ற நாடுகள், சர்வதேச சமூகத்தில் துருவமுனைப்பை அதிகரிக்கச் செய்யும் தங்களது சுயநல இரட்டைத் தரத்தை அங்கீகரித்து வருகின்றன. இலங்கை தொடர்பாக கனடா பிரதமரின் தொடர்ச்சியான அறிக்கைகள் கனடாவின் தேர்தல் வாக்கு வங்கி அரசியலின் விளைவு ஆகும்" என்றும் இலங்கையின் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.