பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென்னாபிரிக்கா ஆகிய ஐந்து நாடுகளின் ஆங்கில முதல் எழுத்துக்களை கொண்டு அமைக்கப்பட்டுள்ள பிரிக்ஸ்(BRICS) என்ற அரசாங்கங்களுக்கு இடையிலான அமைப்பில் சேர விரும்பும் நாடுகளின் பட்டியலில் இலங்கையும் இணைந்துள்ளது.
இலங்கையின் வெளியுறவு அமைச்சர் அலி சப்ரி(Ali Sabry) இதனை இந்திய செய்தி நிறுவனம் ஒன்றிடம் தெரிவித்துள்ளார்.
இதன்படி இந்த ஆண்டு பிரிக்ஸ் கூட்டமைப்பில் சேர விரும்பும் சுமார் 30 நாடுகளின் பட்டியலில் இலங்கை தற்போது இணைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
முன்னதாக 2024 இல் பிரிக்ஸ் அமைப்புக்கு தலைமைப் பொறுப்பை ஏற்ற ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின்(Vladimir Putin) தனது ஆரம்ப உரையில், தமது அமைப்பின் உறுப்புரிமை ஐந்து நாடுகளில் இருந்து 10 ஆக உயர்த்தப்படும் என்று அறிவித்திருந்தார்.
இந்தநிலையில் குறித்த உலகளாவிய முகாமில் சேர ஆர்வமாக உள்ளதாகவும், அதன் உறுப்புரிமமையை பெறுவதற்காக இந்தியாவை அணுக திட்டமிட்டுள்ளதாகவும் இலங்கையின் வெளியுறவு அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
ஜோகன்னஸ்பர்க் உச்சி மாநாட்டிற்குப் பின்னர் பாகிஸ்தான் இதேபோன்ற முயற்சியை மேற்கொண்டது. இஸ்லாமாபாத் 2023 இன் பிற்பகுதியில் பிரிக்ஸின் உறுப்புரிமையை பெற விண்ணப்பித்துள்ளது.
அத்துடன் அதன் உறுப்பினர் முயற்சிக்கு ரஷ்யா மற்றும் சீனாவின் ஆதரவை நாடியுள்ளது.இலங்கையுடன், ஆப்கானிஸ்தான், அங்கோலா, கொமரோஸ், கொங்கோ, காபோன், கினியா-பிசாவ், லிபியா, மியான்மர், நிகரகுவா, தெற்கு சூடான், சூடான், சிரியா, துனிசியா, துருக்கி, சோமாலியா, உகண்டா மற்றும் சிம்பாப்வே ஆகிய நாடுகளும் அரசுகளுக்கிடையேயான இந்த பிரிக்ஸ் அமைப்பில் சேர விருப்பம் தெரிவித்துள்ளன.
ஏற்கனவே பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஸ் உட்பட்ட நாடுகள் இந்த அமைப்பில் இணைவதற்காக விண்ணப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது