கட்டுநாயக்க விமான நிலையத்திற்குள் ஆயுதங்களுடன் சென்று அடிதடியில் ஈடுபட்ட ராஜாங்க அமைச்சர்
17 May,2024
கட்டுநாயக்க விமான நிலைய வளாகத்திற்குள் குழப்பம் ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்டதனை இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீர ஒப்புக் கொண்டுள்ளார்.
வெளிநாட்டில் உள்ள தனது மகனைப் பார்ப்பதற்காக தனது மனைவியை விமான நிலையத்திற்கு அழைத்துச் செல்வதற்காக கடந்த 14ஆம் திகதி காலை கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அவர் சென்றிருந்தார்.
அங்கு இராஜாங்க அமைச்சர் தனது பாதுகாப்பு அதிகாரிகளுடன் துப்பாக்கி ஏந்தியவாறு விமான நிலையத்திற்குள் நுழைய முற்பட்டதுடன் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் அரச அமைச்சரிடம் பயணச்சீட்டுடன் விமான நிலையத்திற்குள் நுழையுமாறு கூறியுள்ளனர்.
துப்பாக்கி ஏந்தியவர்களை விமான நிலையத்துக்குள் அனுமதிக்க முடியாது என்றும் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீர பாதுகாப்பு அதிகாரிகளை திட்டியதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும், இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீரவால் விமான நிலைய வளாகத்திற்குள் பொருட்களை கொண்டு செல்லும் நபர்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இராஜாங்க அமைச்சரின் மனைவி கொண்டு வந்த சில பயணப் பொதிகளை ஏற்றிச் செல்வதற்காக இராஜாங்க அமைச்சர் 700 ரூபாவை பொருட்களை கொண்டு செல்பவர்களுக்கு வழங்கியிருந்த நிலையில், அந்தத் தொகை போதுமானதாக இல்லை என்ற காரணத்தினால் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பான தகவல்கள் ஊடகங்கள் வாயிலாக கசிந்துள்ள நிலையில், தாக்குதல் சம்பவத்தை இராஜாங்க அமைச்சர் ஏற்றுக்கொண்டுள்ளார்.