மியான்மார் கடற்படையினரால் கைதுசெய்யப்பட்ட 15 இலங்கை மீனவர்களும் நாட்டை வந்தடைந்தனர்
11 May,2024
மியான்மார் கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டு அந்நாட்டுச் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 15 இலங்கை மீனவர்கள் இன்று (11) கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ள நிலையில் கட்டுநாயக்க விமான நிலைய அதிகாரிகளால் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கட்டுனேரிய, மாரவில, உஸ்வட்டகெட்டியாவ மற்றும் குருணாகல் ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 18 முதல் 50 வயதுக்குட்பட்ட 15 இலங்கை மீனவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களில் 7 பேர் கடந்த 2023 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 23 ஆம் திகதி வென்னப்புவ கடலிலிருந்தும் மேலும் 8 பேர் நவம்பர் மாதம் 7 ஆம் திகதி கற்பிட்டி மீன்பிடி துறைமுகத்திலிருந்தும் மீன்பிடி கப்பல்கள் மூலம் கடலுக்குச் சென்றுள்ளனர்.
இந்நிலையில், இவர்கள் பயணித்த மீன்பிடிக் கப்பல்களானது இயந்திரக் கோளாறு காரணமாக செயலிழந்து நடுக்கடலில் தத்தளித்துக் கொண்டிருந்துள்ள நிலையில் மியான்மார் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பின்னர் அவர்கள் அந்நாட்டுச் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று (11) கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து இவர்கள் 15 பேரும் கட்டுநாயக்க விமான நிலைய அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.