பொதுச் சொத்துக்கள் பாரியளவில் கொள்ளையடிக்கப்பட்டதன் காரணமாகவே இலங்கை வங்குரோத்து நிலையை எதிர்கொண்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டார(R M Ranjith Madduma Bandara) தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்றையதினம் (10) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இலங்கையில் சில அரசியல்வாதிகளும், அதிகாரிகளும், வேறு சிலரும் பொதுச் சொத்துக்களை ஊழல் முறையில் கொள்ளையடித்துள்ளனர். பொதுச் சொத்துக்கள் மூலம் கொள்ளையடிக்கப்பட்ட பணம் இலங்கையிலும் வெளிநாடுகளிலும் முதலீடு செய்யப்பட்டுள்ளது. அதன் காரணமாக வங்குரோத்தான நாட்டில் நாம் வாழ்கிறோம்.
அரசியல்வாதிகள் மற்றும் அரச அதிகாரிகள் சட்டவிரோதமான முறையில் சம்பாதித்து குவித்த சொத்துக்களை அரசிடமே மீளத் தர எந்த சட்ட ஏற்பாடும் இங்கு இல்லை.
பண்டோரா பத்திரங்களில் பெயர் குறிப்பிடப்பட்டவர்கள் நாடாளுமன்றத்தில் உள்ளனர். உகண்டா, டுபாய், சீஷெல்ஸ் ஆகிய நாடுகளில் இலங்கை அரசியல்வாதிகள் மற்றும் பல்வேறு நபர்கள் பணத்தை முதலீடு செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த சொத்துக்களை மீட்பதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக அரசாங்கம் தொடர்ந்து தெரிவித்தது. இது தொடர்பாக சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு பதிலாக, தாக்கல் செய்யப்பட்ட பல வழக்குகளை அரசாங்கம் திரும்பப் பெற்றுக் கொண்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியால் ஊழல் எதிர்ப்பு சட்டத்தை தனிநபர் பிரேரணையாக எம்மால் முன்வைக்க முடிந்தது. ஆனால் அரசாங்கம் பிரிதொரு ஊழல் எதிர்ப்பு சட்ட மூலத்தை நாடாளுமன்றத்தில் முன்வைத்தது.
இருந்த போதிலும், அரசாங்கம் கொண்டு வந்த சட்ட மூலத்துக்கு எதிர்க்கட்சி ஆதரவை தெரிவித்தது. ஆனால், அந்தச் சட்டத்தை அரசாங்கம் நடைமுறைப்படுத்தவில்லை.
நாட்டில் ஊழல், மோசடிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. எனவே, ஐக்கிய மக்கள் சக்தியாகிய நாம் திருடப்பட்ட சொத்துக்களை மீட்பதற்கான திருத்தச் சட்டமூலத்தை சமர்ப்பிக்க தீர்மானித்துள்ளோம்.
சட்ட விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக நியாயமாக சந்தேகிக்கப்படும் சொத்துக்களை தடை செய்து பறிமுதல் செய்வதற்கும், நிர்வகிப்பதற்கும் விரிவான ஏற்பாடுகளை இச்சட்டமூலம் வழங்குகிறது.
இந்தச் சட்டம் அநியாயமாகவும், ஊழல் வழிமுறையிலும் கொள்ளையடிக்கப்பட்ட பணம் மற்றும் சொத்துக்களை மீட்பதற்காக கையாளப்படும்.
அதற்கான சட்ட விதிகளை இந்தச் சட்டம் கொண்டுள்ளது. திருடப்பட்ட சொத்துக்களை மீட்பதற்கான திருத்தச் சட்ட மூலம், வெளிநாடுகளில் முதலீடு செய்யப்பட்ட பணம் மற்றும் சொத்துக்களை மீட்க தேவையான விதிகளை முன்வைத்துள்ளது.
மேலும், மீட்கப்பட வேண்டிய சொத்துக்கள் குறித்து ஆய்வு செய்து, பணம் மற்றும் சொத்துக்களை மக்களிடம் திரும்ப ஒப்படைக்க முகாமைத்துவ சபை ஒன்று நியமிக்கப்படும்.
திருடப்பட்ட சொத்துக்கள் திருத்தச் சட்டமூலம் தற்போது நாடாளுமன்ற பொதுச் செயலாளரிடம் கையளிக்கப்பட்டுள்ளது. திருடப்பட்ட சொத்துக்களை மீட்பதற்கான திருத்தச் சட்டமூலம், திருடப்பட்ட ஊழல் மிக்க பணத்தையும் சொத்துக்களையும் ஐக்கிய மக்கள் சக்தி ஆட்சி மூலம் நாட்டு மக்களுக்கு வழங்குவோம்.
நல்லாட்சி அரசாங்கத்தின் போது பெருமளவான ஊழல் மற்றும் மோசடி தொடர்பான பல முறைப்பாட்டு பத்திரங்கள் சட்டமா அதிபர் திணைக்களத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. அதுகுறித்த வழக்குகளும் பதியப்பட்டுள்ளன. ஆனால், தற்போதைய அரசாங்கம் அந்த வழக்குகளை ஒவ்வொன்றாக மீளப்பெற்று வருகிறது.
மக்களின் பணத்தையும் சொத்துக்களையும் அபகரித்த தரப்பினருக்கு சட்டத்தை நடைமுறைப்படுத்தாமல், திருடப்பட்ட பணத்தை பொது மக்களிடம் அறவிடும் வேலைத்திட்டத்தை தற்போதைய அரசாங்கம் நடைமுறைப்படுத்தியுள்ளது.
மக்களிடம் இருந்து திருடப்பட்ட பணம் மற்றும் சொத்துக்களை மீட்க உள்ள சட்டம் அனைத்தையும் நடைமுறைப்படுத்துவோம் என குறிப்பிட்டுள்ளார்.