கொழும்பில் கடும் பாதுகாப்பு... களத்தில் 100 புலனாய்வு அதிகாரிகள்!
05 Apr,2024
கொழும்பில் பாதுகாப்பு கடமைகளுக்கு சுமார் 100 புலனாய்வு அதிகாரிகள் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேல் மாகாணத்தில் காவல்துறையைச் சேர்ந்த சுமார் 100 புலனாய்வு அதிகாரிகளே தமது கடமைகளில் இருந்து விடுவிக்கப்பட்டு கொழும்பில் பாதுகாப்பு கடமைகளில் நியமிக்கப்பட்டுள்ளனர்.
எதிர்வரும் சிங்கள, தமிழ் புத்தாண்டு காலத்தில் வாகன திருட்டு, தங்க நகை கொள்ளை போன்ற குற்றச்செயல்களை தடுப்பதற்கும் பாதுகாப்பை அதிகரிப்பதற்கும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதற்காக, கொழும்பில் பொது பணிகளுக்காக மேல் மாகாண புலனாய்வு பிரிவின் அதிகாரிகளை நியமிக்குமாறு பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் பணிப்புரை விடுத்துள்ளார்.
கடந்த சில வாரங்களாக, இலங்கையில் பாதாள உலக மற்றும் போதைப்பொருள் செயற்பாடுகளுக்கு எதிரான நடவடிக்கைகளை பொலிஸார் தீவிரப்படுத்தியுள்ளனர்.
இதேவேளை, எதிர்வரும் பண்டிகை காலத்தின் போதும் குற்றவாளிகள் மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரர்களை இலக்கு வைத்து முன்னெடுக்கப்படும் விசேட நடவடிக்கைகள் தொடரும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் நிஹால் தல்தூவ தெரிவித்துள்ளார்.