இலங்கைக்கு நேரடி விமான சேவையை ஆரம்பிக்கும் நிறுவனம்
23 Mar,2024
கொழும்பு மற்றும் பங்களாதேஷ் தலைநகர் டாக்காவிற்கு இடையில் நேரடி விமான சேவையை ஆரம்பிக்கவுள்ளதாக ஃபிட்ஸ் ஏர் (FitsAir) நிறுவனம் தெரிவித்துள்ளது.
குறித்த விமான சேவையானது இலங்கைக்கும் பங்களாதேஷுக்கும் இடையில் குறைந்த விலையிலான பயண விருப்பங்களுக்கான வளர்ந்து வரும் தேவையை நிவர்த்தி செய்யும் வகையில் மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பங்களாதேஷின் வேகமாக விரிவடைந்துவரும் பொருளாதாரத்தின் வெளிச்சத்தில், இலங்கை வர்த்தகர்களிடமிருந்து ஆர்வத்தை ஈர்க்கும் வகையில், டாக்கா ஒரு பிரபலமான நகரமாக உருவாகி வருகிறது.
இதனை அங்கீகரித்து, வளர்ந்து வரும் சந்தையின் தேவைகளைப் பூர்த்தி செய்ய குறைந்த கட்டணத்தில், சரியான நேரத்தில் மற்றும் திறமையான விமான இணைப்பை வழங்கவுள்ளதாக ஃபிட்ஸ் ஏர் நிறுவனம் உறுதி செய்துள்ளது.
இந்த விமான சேவை ஏப்ரல் மாதம் 16 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதோடு ஆரம்ப கட்டணமாக 74,600 ரூபாவாக அறவிடவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
தற்போது ஃபிட்ஸ் ஏர் (FitsAir) கொழும்பில் இருந்து டுபாய், மாலி மற்றும் சென்னைக்கு நேரடி சேவைகளை வழங்கிவருகின்றமை குறிப்பிடத்தக்கது.