இலங்கை தமிழர்கள் இருவரை நாடு கடத்திய சீனா..!
24 Feb,2024
கொள்கலன் ஒன்றில் மறைந்திருந்து மலேசியாவிற்கு தப்பிச் செல்ல முயன்ற போது சீனாவில் கைது செய்யப்பட்ட இரு இலங்கையர்களும் ஒரு வருடத்தின் பின்னர் நாடு கடத்தப்பட்டுள்ளனர்.
இவர்கள் இன்று (24) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டதாக விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இந்த 2 சந்தேக நபர்களும் கொழும்பு துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கப்பலில் இருந்த கொள்கலனில் மறைந்து மலேசியாவிற்கு தப்பிச் செல்ல முயற்சித்துள்ளனர்.
அவர்களில் ஒருவர் 26 வயதுடைய மலர்மதி ராஜேந்திரன் என்றும் மற்றவர் 39 வயதான ஜெயக்குமார் தருமராசா என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த இருவரும் கடந்த ஆண்டு ஜனவரி 30 ஆம் திகதி மலேசியா செல்வதற்காக கொழும்பு துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 'மெர்க்ஸ் யூனிகார்ன்' கப்பலில் ஏற்றப்பட்ட வெற்று கொள்கலனுக்குள் இரகசியமாக நுழைந்துள்ளனர்.
ஆனால் குறித்த கப்பல் மலேசியாவிற்கு வந்தபோது, கொள்கலனில் மறைந்திருந்த இரு சந்தேக நபர்களும் மலேசியா ஏற்றுக்கொள்ள மறுத்ததால், அதிகாரிகள் சந்தேக நபர்களை ஏற்றிக்கொண்டு பல நாடுகளுக்குச் சென்று இறுதியாக சீனாவிற்கு சென்றுள்ளனர்.
இந்நிலையில் சந்தேகநபர்கள் இருவரையும் நாட்டில் இருந்து நாடு கடத்த நடவடிக்கை எடுத்த பின்னர், இன்று காலை 5.01 மணி அளவில், சீனாவின் ஷாங்காய் நகரிலிருந்து சிறிலங்கன் எயார்லைன்ஸ் விமானமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த பின்னர், கட்டுநாயக்க விமான நிலைய குற்றப் புலனாய்வு திணைக்களம், வர்த்தகம் மற்றும் ஆட்கடத்தல் புலனாய்வு பிரிவின் அதிகாரிகள் குழு ஒன்று அவர்களை கைது செய்து கொழும்பு கிருலப்பன பகுதியில் உள்ள பிரதான அலுவலகத்திற்கு அழைத்து சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.