இலங்கையின் பொருளாதாரம் மேம்படவில்லை, சர்வதேச நாணய நிதியம் அறிவிப்பு
19 Jan,2024
இலங்கையின் பொருளாதார வளர்ச்சி இன்னும் போதியளவு வலுப்படவில்லை என்று சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான சிரேஷ்ட அதிகாரி பீட்டர் புரூவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கைக்கு அண்மையில் பயணம் செய்திருந்த சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழுவினர், ஒரு வார காலமாக முக்கிய ஆய்வுகளை மேற்கொண்டிருந்தனர்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட அரசாங்கத்தின் முக்கிய அதிகாரிகளையும் சந்தித்து அவர்கள் பேச்சுக்களை முன்னெடுத்திருந்தனர்.
இதன்போது சர்வதேச நாணய நிதியத்தின் மூலம் இலங்கைக்கு வழங்கப்பட்ட முதலாம் கட்ட கடனுதவியை தொடர்ந்த பொருளாதார வளர்ச்சி தொடர்பில் ஆராயப்பட்டுள்ளது.
அதன் அடிப்படையில் இரண்டாம் கட்ட கடனுதவியை வழங்குவதற்கான செயற்பாடுகள் தற்போது முன்னெடுக்கப்படுகின்றன.
இந்நிலையில், இலங்கையிலுள்ள பரந்த மக்கள் தொகையை சென்றடையும் வகையில் நாட்டின் பொருளாதார நிலை இன்னும் மேம்படவில்லை என சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான சிரேஷ்ட அதிகாரி பீட்டர் புரூவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கையின் பொருளாதாரம் இன்னும் ஆரம்ப கட்டத்திலேயே இருப்பதாக அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
சொத்து வரி அறவிடப்படுவதன் மூலம், நிதியத்தின் நிபந்தனைகளை பூர்த்தி செய்யும் நடவடிக்கையை விரைவாக அடைந்து கொள்ள முடியும் என்றும் பீட்டர் ப்ரூவர் தொடர்ந்தும் குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள சொத்து வரியின் மூலம், நிதியத்தின் நிபந்தனைகளை பூர்த்தி செய்யும் நடவடிக்கையை வேகமாக பூர்த்தி செய்ய முடியுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை பொருளாதாரம் சற்று வளர்ச்சியடைந்து நிலைபெற்று வருவதாக அண்மைக்காலமாக கருத்துக்கள் முன்வைக்கப்பட்டுள்ள நிலையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.