துவாரகா போன்று காணொளி வெளியிட்டவர்களுக்கு சிக்கல்! இலங்கை அரசாங்கம் எடுக்கவுள்ள கடும் நடவடிக்கை
22 Dec,2023
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனின் மகள் எனக் குறிப்பிட்டு பெண்ணொருவர் பேசுவதைப் போன்று காணொளியை வெளியிட்ட நபர்கள் விரைவில் கைது செய்யப்படுவர் என பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.
அதிபர் ஊடக மையத்தில் வியாழக்கிழமை (21) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனின் மகள் எனத் தெரிவிக்கப்பட்டு பெண்ணொருவர் பேசுவதைப் போன்று வெளியிடப்பட்ட காணொளி தொடர்பில் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சு அவதானம் செலுத்தியுள்ளது.
குறித்த காணொளி தயாரிக்கப்பட்ட காணொளி என்பது அடையாளப் படுத்தப்பட்டுள்ளது.
புலம்பெயர் அமைப்பினர்
அது தொடர்பில் பயங்கரவாத விசாரணைப்பிரிவு மற்றும் குற்றப்புலனாய்வு பிரிவு என்பன விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றன.
இவ்வாறான காணொளிகளை வெளியிடுபவர்களை எவ்வாறேனும் இனங்கண்டு அவர்களை நிச்சயம் கைது செய்வோம் என குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில், துவாரகா பேசுவது போன்று வெளியான காணொளி முற்றிலும் பொய்யானது எனவும் இது தலைவரின் மகள் துவாரகா இல்லை எனவும் புலம்பெயர் அமைப்பினர்கள் மற்றும் முன்னாள் போராளிகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.