மயிலத்தமடு சிங்களவர்களின் பூர்வீகமென உரிமைகோரும் சரத்வீரசேகர
20 Oct,2023
மட்டக்களப்பு மயிலத்தமடு மேச்சல் தரை நிலம் சிங்களவர்களின் பாரம்பரியமான கிராமமெனவும் அங்கிருந்து அவர்களை வெளியேற்ற முயற்சித்தால் தமிழ் மற்றும் சிங்கள மக்களுக்கிடையில் இன முரண்பாடு ஏற்படுமெனவும் கடும்போக்குவாத அரசியல்வாதியும் நாடாளுமன்ற உறுப்பினருமான சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.
இலங்கையிலுள்ள எந்தவொரு மாகாணத்தையும் எந்தவொரு தரப்பினருக்கும் யாரும் எழுதிக் கொடுக்கவில்லை என இன்று(20) நாடாளுமன்றத்தில் உரையாற்றிய சரத் வீரசேகர சுட்டிக்காட்டியுள்ளார்.
தொடர்ந்தும் உரையாற்றிய அவர், “மட்டக்களப்பு மயிலத்தமடு மேச்சல் தரைபகுதியில் வாழும் சிங்களவர்கள் குறித்த பகுதியில் இருந்து வெளியேற வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் தெரிவித்திருந்தார்.
குறித்த பகுதி பாரம்பரிய சிங்கள கிராமமாகும். விடுதலைப் புலிகள் சிங்களவர்களை அழித்து அப்பகுதியில் சிங்கள இனப் பரம்பலை இல்லாதொழித்தார்கள். அது சிங்கள பாரம்பரிய கிராமம் என்பதற்கு ஆதாரங்கள் உள்ளன.
ஆகவே மேச்சல் தரை சிங்கள கிராம விவகாரத்தில் கை வைப்பதை தவிர்த்துக் கொள்ள வேண்டும்.
அரசியல் அதிகாரத்துடன் சிங்களவர்களை வெளியேற்றினால் சிங்கள மற்றும் தமிழ் மக்களுக்கிடையில் இன முரண்பாடு தோற்றம் பெறும்.
இலங்கை ஒற்றையாட்சி நாடு. ஒவ்வொரு மாகாணங்களும் ஒவ்வொரு இனங்களுக்கு என்று எழுதிக் கொடுக்கவில்லை. அனைவருக்கும் உரிமை உண்டு.
தமிழ் தேசிய கூட்டமைப்பு விடுதலைப் புலிகளின் அரசியல் ஆயுதம் என்பதை அனைவரும் நன்கு அறிவார்கள்.
பொருளாதார பாதிப்புக்கு மத்தியில் நாட்டை பிரிக்கும் செயற்பாடுகளுக்கு கூட்டமைப்பு முன்னுரிமை வழங்கியுள்ளது.
இவர்களின் நோக்கங்களுக்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது” - என்றார்.