மலேசியாவில் இலங்கையர்கள் மூவர் கொல்லப்பட்ட சம்பவம்சந்தேகநபர் சிறையில் சடலமாக
03 Oct,2023
மலேசியா - சென்டுல் பகுதியில் இலங்கையர்கள் மூவர் கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக கோலாலம்பூர் காவல்துறை தலைமையக அதிகாரி டத்தோ அலாவுதீன் அப்துல் மஜீத் தெரிவித்துள்ளார்.
செப்டம்பர் மாதம் 22 ஆம் திகதி இடம்பெற்ற கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டு சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டு சிறைக்காவலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் ஒருவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
அவர் மேலும் தெரிவிக்கையில், “இரண்டு பிரதான சந்தேக நபர்களுக்கு கொலைகளை செய்வதற்கு உதவிய சந்தேகத்தின் பேரில் மேலும் மூன்று இலங்கையர்களும், பாகிஸ்தானியரும் பெட்டாலிங் ஜெயாவில் உள்ள வீடொன்றில் வைத்து கைது செய்யப்பட்டனர்.
நான்கு சந்தேக நபர்களிடம் விசாரணை நடத்திய போது கிடைத்த தகவலின் அடிப்படையில் இரண்டு முக்கிய சந்தேக நபர்களை கைது செய்ய முடிந்தது.
உயிரிழந்த இலங்கையர் தவிர மேலும் ஆறு இலங்கையர்களும், பாகிஸ்தானியர் ஒருவரும் கொலையுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 20 முதல் 40 வயதுக்கு இடைப்பட்டவர்கள்” எனத் தெரிவித்தார்.