கஞ்சா பயிர்ச்செய்கைக்கு அமைச்சரவை அங்கீகாரம் : ஓரிரு வாரங்களில் வர்த்தமானி வெளியாகும் - டயனா கமகே
28 Sep,2023
சுற்றுலாத்துறை சேவைக் கைத்தொழிலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் கட்டுப்பாடுகளை தளர்த்துவது அத்தியாவசியமானது.இரவு நேரங்களில் சுற்றுலா பயணிகள்; சுதந்திரமாக நடமாட இடமளிக்க வேண்டும். கஞ்சா பயிர்ச்செய்கைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.அதற்கான வர்த்தமானி ஓரிரு வாரங்களில் வெளியிடப்படும் என சுற்றுலாத்துறை அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் டயனா கமகே தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிட்டதாவது,
சுற்றுலாத்துறை கைத்தொழில் மேம்பாடு ஊடாக வெளிநாட்டு கையிருப்பு பற்றாக்குறைக்கு தீர்வு காண முடியும்.கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2023 ஆம் ஆண்டு (நிறைவடைந்த ஒன்பது மாத காலப்பகுதி) சுமார் 10 இலட்சம் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளார்கள்.
இந்த ஆண்டு இறுதி பகுதிக்குள் 15 இலட்சம் சுற்றுலா பயணிகளை நாட்டுக்கு அழைத்து வர எதிர்பார்த்துள்ளோம். அதற்கான விசேட செயற்திட்டங்கள் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளன.
எதிர்வரும் மூன்று மாதகாலப்பகுதிகளில் ஐரோப்பிய நாடுகளில் இருந்து அதிகளவிலான சுற்றுலா பயணிகள் நாட்டுக்கு வருகை தரவள்ளார்கள்.அத்துடன் மத்திய கிழக்காசிய நாடுகளில் இருந்து சுற்றுலா பயணிகளை அழைத்து வருவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது.
நாட்டுக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு மற்றும் அவர்களுக்கான தேவைகளை உறுதிப்படுத்துவது அரசாங்கத்தின் பொறுப்பாகும்.பிரதான சுற்றுலா மையங்களான நுவரெலியா,எல்ல,காலி,கொழும்பு ஆகிய பகுதிகளில் சுற்றுலா பயணிகள் இரவு நேரங்களில் சுதந்திரமாக நடமாடுவதற்கு வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.
சுற்றுலாத்துறை சேவைக் கைத்தொழிலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் கட்டுப்பாடுகளை தளர்த்துவது அத்தியாவசியமானதாக காணப்படுகிறது.நாட்டுக்கு அதிக வருமானத்தை ஈட்டித் தரும் வகையில் கஞ்சா பயிர்ச்செய்கைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.அதற்கான வர்த்தமானி ஓரிரு வாரங்களில் வெளியிடப்படும்.
கஞ்சா பயிர்ச்செய்கை ஊடாக ரூபாவை திரட்டுவது நோக்கமல்ல,நாட்டுக்கு அதிகளவான டொலரை ஈட்டிக் கொள்ள முடியும்.கஞ்சா பயிர்ச்செய்கைக்காக விசேட அதிகார சபை உருவாக்கப்பட்டு கண்காணிக்கப்படும் என்றார்.