இலங்கையில் ஒரே நாளில் 13 பேருக்கு மரணதண்டனை
28 Sep,2023
கொலைக்குற்றச்சாட்டு மற்றும் ஹெரோயின் போதைப்பொருள் கடத்தலென இருவேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்களின் குற்றம் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதை அடுத்து 13 பேருக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இதன்படி கூரிய ஆயுதங்களால் வெட்டி நபர் ஒருவரைக் கொன்ற குற்றச்சாட்டில் குற்றம் சாட்டப்பட்ட எட்டு பிரதிவாதிகளுக்கு களுத்துறை மேல் நீதிமன்ற நீதிபதி பிரதீப் அபேரத்ன புதன்கிழமை (27) மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.
கூரிய ஆயுதங்களால் தாக்கி கொலை
2003 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 24 ஆம் திகதி அல்லது அண்மித்த நாட்களில் களுத்துறை தெற்கில் உள்ள கலீல் பிளேஸில் வசிக்கும் சேயர் மொஹமட் மொஹமட் பாரிஸ் என்பவர் கூரிய ஆயுதங்களால் கொல்லப்பட்டமை தொடர்பில் எட்டு சந்தேக நபர்களுக்கு எதிராக சட்டமா அதிபர் உயர்நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தார்.
46 வயதான மொஹமட் ஜைன் முகமது ஹம்சா, 49 வயதான அப்துல் கரீம் மொஹமட் ரவிஸ்தீன், 59 வயதான மொஹமட் மவ்ஸ் மொஹமட், 45 வயதான மொஹமட் ரியாஸ்தீன் மொஹமட், 47 வயதான மொஹமட் ஜிப்ரி மொஹமட் ஜின்னா, அனைவரும் களுத்துறை, மஹா ஹினடியங்கல பகுதியைச் சேர்ந்த 43 வயதான மொஹமட் ஜிப்ரி மொஹமட் பிர்தவ்ஸ், 44 வயதான மொஹமட் சஹீர் மொஹமட் சியாம், 45 வயதான மொஹமட் நிலாப்தீன் மொஹமட் அஜீல் ஆகியோருக்கே மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை கடந்த 2019 நவம்பர் 2ஆம் திகதி அல்லது அதற்கு அண்மித்த நாளொன்றில் 152 கிலோ கிராம் ஹெராயின் போதைப்பொருளை டோலர் படகின் மூலமாக இலங்கைக்குக் கொண்டு வந்தவேளை, சிறிலங்கா கடற்படையினரால் நடுக்கடலில் வைத்து கைது செய்யப்பட்ட மீனவர்கள் ஐவருக்கும் கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நாமல் பண்டார பலல்லே மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.
பிரதிவாதிகளுக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் முறைப்பாட்டாளரினால் எவ்விதமான சந்தேகத்திற்கும் இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளது என தீர்மானித்த நீதிபதி, பிரதிவாதிகளின் இந்த செயற்பாட்டால் சமூகத்தில் ஏற்படும் ஆபத்தான நிலைமையை கருத்தில் கொண்டு பிரதிவாதிகளுக்கு இவ்வாறு தண்டனை வழங்கி தீர்ப்பளிப்பதாக தெரிவித்தார்.