செனல் 4' க்கு எதிராக சட்ட நடவடிக்கை - பிரித்தானியாவில் முறைப்பாடு
09 Sep,2023
உயிர்த்த ஞாயிறுதின குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் “செனல் 4“ தொலைக்காட்சி பொய்யான ஆதாரங்களுடன் ஆவணப்படத்தை வெளியிட்டுள்ளதாக குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளது.
குற்றப்புலனாய்வுப் பிரிவின் பிரதானி மேஜர் ஜெனரல் சுரேஸ் சாலே, “செனல் 4“ தொலைக்காட்சிக்கு எதிராக பிரித்தானிய ஒளிபரப்பு ஒழுங்குப்படுத்தல் நிறுவனத்திடம் முறைப்பாடொன்றை பதிவுசெய்துள்ளார்.
தமது சட்டத்தரணிகள் ஊடாகவே அவர் இந்த முறைப்பாட்டை பதிவுசெய்துள்ளார்.
செனல் 4 தொலைக்காட்சி கடந்த புதன்கிழமை உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் வெளியிட்ட ஆவணப்படம் இலங்கையில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது.
இந்த ஆவணப்படத்தில் இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துறை சந்திரகாந்தன் மற்றும் குற்றப் புலனாய்வு பிரிதானி சுரேஷ் சாலே, ஆகியோர் மீது கடுமையான குற்றச்சாட்டுக்களை தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் முன்னாள் ஊடகப் பேச்சாளர் அசாத் மௌலானா சுமத்தியுள்ளார்.
குறிப்பாக இந்தத் தாக்குதல்களை ஒருங்கிணைப்பதில் பின்புலமாக இவர்கள் இருவரும்தான் பிரதானமாக செயல்பட்டதாக அசாத் மௌலான குற்றச்சாட்டுகளை சுமத்தியிருந்தார்.
இதற்கு இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துறை சந்திரகாந்தன் கடுமையான எதிர்ப்புகளை வெளியிட்டதுடன், தமது புகலிட கோரிக்கையை நிறைவேற்றிக்கொள்ளவே அசாத் மௌலான இவ்வாறு பொய்யான தகவல்களை வெளியிட்டு வருவதாகவும் கூறியுள்ளார்.
இந்நிலையில், செனல் 4 தொலைக்காட்சிக்கு எதிராக சி.ஐ.டியின் பிரதானி சுரேஷ் சாலே, தமது சட்டத்தரணிகள் ஊடாக பிரித்தானிய ஒளிபரப்பு ஒழுங்குப்படுத்தல் நிறுவனத்துக்கு முறைப்பாடொன்றை அளித்துள்ளார்.
சுவிட்ஸர்லாந்தில் அகதிகள் முகாமில் தஞ்சமடைந்துள்ள அசாத் மௌலானா, தமது குடியுரிமை கனவை நிறைவேற்றிக்கொள்ள நாட்டின் தேசியப் பாதுகாப்புக்கு பாதிப்பை ஏற்படுத்த முனைவதுடன், தம்மீது சேறுபூசம் நடவடிக்கையிலும் ஈடுபட்டுவதாக குற்றம் சுமத்தியே சி.ஐ.டியின் பிரதானி சுரேஸ் சாலே, பிரிதானிய ஒளிபரப்பு ஒழுங்குப்படுத்தல் நிறுவனத்துக்கு இவ்வாறு முறைப்பாடு அளித்துள்ளார்.
சி.ஐ.டியின் பிரதானி மேஜர் ஜெனரல் சுரேஸ் சாலேவின் முறைப்பாட்டை ஏற்றுக்கொண்டுள்ள பிரித்தானிய ஒளிபரப்பு ஒழுங்குப்படுத்தல் நிறுவனம், விரைவில் இதுதொடர்பிலான சுயாதீன விசாரணைகளை மேற்கொண்டு தகவல்களை வழங்குவதாக பதிலளித்துள்ளது.