சுற்றுலா விடுதியின் உரிமையாளரை கூரிய ஆயுதத்தால் தாக்கிய எகிப்து பிரஜை
03 Sep,2023
வெலிகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கும்பல்கம, குருந்துவத்த பிரதேசத்தில் சுற்றுலா விடுதி ஒன்றில் தங்கியிருந்த எகிப்திய சுற்றுலாப் பயணி ஒருவர் சுற்றுலா விடுதியின் உரிமையாளரை கூரிய ஆயுதத்தால் தாக்கி, குறித்த அறைக்கு தீ வைத்துவிட்டு தற்கொலை செய்துகொள்ள முயற்சித்துள்ளதாக வெலிகம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
33 வயதான எகிப்திய சுற்றுலாப் பயணி மூன்று வருடங்களாக இந்த சுற்றுலா விடுதியில் தங்கியிருந்ததாகவும் சுமார் ஒரு மாத காலமாக விடுதிக்கு செலுத்தவேண்டிய பணத்தை அவர் செலுத்தத் தவறியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இது குறித்து சுற்றுலா பயணியிடம், விடுதிக்கான கட்டணத்தை செலுத்துமாறு உரிமையாளர் கோரிக்கை விடுத்துள்ள சந்தர்ப்பத்தில் இவர்களுக்கு இடையில் வாக்குவாதம் ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இதன்போது கோபமடைந்த சுற்றுலா பயணி ஹோட்டல் உரிமையாளரை கூரிய ஆயுதத்தால் தாக்கியுள்ளார். பின்னர் தான் தங்கியிருந்த அறைக்குள் எரிவாயு சிலிண்டரை வீசிவிட்டு, தீ வைத்து தற்கொலை செய்துகொள்ள முயற்சித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
எவ்வாறாயினும் காயமடைந்த சுற்றுலா பயணியை மீட்ட பொலிஸார் உடனடியாக வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். தீப் பரவல் காரணமாக விடுதியின் அறைகளுக்கும், சொத்துகளுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் சுற்றுலாப்பயணி கைது செய்யப்பட்டு பொலிஸ் காவலில் சிகிச்சை பெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் தொடர்பில் வெலிகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.