இலங்கையில் களைகட்டிவரும் திருவிழா.. பெரஹரா உற்சவம்
24 Aug,2023
பெரஹரா உற்சவம்பெரஹரா உற்சவம்
இலங்கையின் அடையாளமாக அறியப்படும் இந்த பெரஹரா திருவிழா 10 நாட்கள் நடைபெறும்
உலகின் திருவிழாக்களில் ஒன்றாக கருதப்படும் இந்த பெரஹரா உற்சவம், இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையே உள்ள தொன்மையான கலாச்சார மற்றும் வரலாற்றுத் தொடர்பை விளக்கும் திருவிழாவாகவும் அறியப்படுகிறது.
அதாவது, புத்த மதத்தை தோற்றுவித்த கவுதம புத்தரின் பல் இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட நாளைக் கொண்டாடும் விழாவாகவே இது தொடங்கப்பட்டதாக வரலாற்றுத் தகவல்கள் கூறுகின்றன. அதே நேரத்தில் பெரும்பான்மையினரின் மதமான பவுத்ததை மட்டும் முதன்மையாக கொள்ளாமல், இந்துக்கள் உள்ளிட்ட அனைத்து மதத்தினரும் மனமகிழ்வோடு கொண்டாடும் சமூக நல்லிணக்கத் திருவிழாவாகவும் பெரஹரா திகழ்கிறது.
அதன்படி, இந்த ஆண்டுக்கான திருவிழா கண்டியில் உள்ள புகழ்பெற்ற தலதா மாளிகையில் கோலாகலமாக தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தீ நடனம் காண்போர் மெய்சிலிர்க்கும் வண்ணம் அரங்கேறியது. அதன் தொடர்ச்சியாக இலங்கையின் பாரம்பரிய நடனங்கள் அரங்கேறின. மேளதாளங்களுடன் ஆண்களும், பெண்களும் இணைந்து நடனமாடிய காட்சிகள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தன.
இந்த விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக யானைகள் ஊர்வலம் வண்ணமயமாக அரங்கேறியது. வண்ண வண்ண உடைகள் உடுத்தி, மின்விளக்குகள் ஜொலிக்க ஒய்யாரமாக யானைகள் வீதி உலா வந்தன. இந்த பாரம்பரிய திருவிழாவைக் காண, ஆயிரத்திற்கும் மேற்பட்ட வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகை தந்திருந்தனர்.
இலங்கையின் அடையாளமாக அறியப்படும் இந்த பெரஹரா திருவிழா 10 நாட்கள் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.