10 இலட்சம் ரூபா பணத்துடன் வீடு திரும்பிக்கொண்டிருந்த வர்த்தகர் மாயம் ! -
18 Aug,2023
மாத்தறை தெனியாய பகுதியில் உள்ள வங்கி ஒன்றில் இருந்து 10 இலட்சம் ரூபா பணத்தை பெற்றுக்கொண்டு வேன் ஒன்றில் வீடு திரும்பிக் கொண்டிருந்த வர்த்தகர் ஒருவர் காணாமல் போயுள்ளார்.
இது குறித்து வர்த்தகரின் மனைவி கொலன்ன பொலிஸில் மேற்கொண்ட முறைப்பாட்டுக்கு அமைய விசேட பொலிஸ் குழுக்கள்ஈடுபடுத்தப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
மேலும் வர்த்தகர் பயணித்த வேன் கொலன்ன பனிங்கந்த பகுதியிலுள்ள பொது மயானத்திற்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது.
வேனின் சாரதி ஆசனத்தில் மிளகாய்த்தூள் வீசப்பட்ட நிலையில் காணப்படுவதுடன் பணத்தை கொள்ளையடித்துச் செல்வதற்காக சந்தேக நபர்கள் மூலம் இவ்வாறு மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
எவ்வாறாயினும், குறித்த வர்த்தகர் தொடர்பில் எந்தவித தகவல்களும் கிடைக்க பெறவில்லை எனவும் தொடர்ச்சியாக தீவிர
விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப்பேச்சாளாரும், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் குறிப்பிட்டதாவது,
தேயிலை கொழுந்து சேகரிக்கும் வியாபாரத்தில் ஈடுபட்டு வரும் குறித்த வர்த்தகர் கடந்த 16 ஆம் திகதி காணாமல் போயுள்ளார்.
அவர் தெனியாய பகுதியில் உள்ள வங்கிக்கு சென்று பணத்தை எடுத்துக்கொண்டு வீட்டுக்கு வந்து கொண்டிருந்த சந்தர்பத்தில் அணில்கந்த பிரதேசத்தில் வைத்து காணாமல் போயுள்ளார். அவர் பயணித்த வேன் பனிங்கந்த பகுதியில் மீட்கப்பட்டுள்ளதுடன், குறித்த நபர் தொடர்பில் இதுவரையில் எந்த ஒரு தகவல்களும் கிடைக்க பெறவில்லை.
இந்த சம்பவம் தொடர்பில் கொலன்ன பொலிஸார் மற்றும் எம்பிலிப்பிட்டிய குற்றத்தடுப்பு பிரிவினர் இணைந்து தொடர்ச்சியாக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர் என்றார்.