ஆட்கடத்தல் நடவடிக்கைகள் தொடர்ந்தும் அதிகரித்து வருகின்றன. இது ஒரு சர்வதேச வியாபாரமாக மாறிவருகின்றது.
இந்த இருண்ட யதார்த்தம் ஒரு சிக்கலான சவாலை ஏற்படுத்துவதுடன், இது ஒவ்வொருவருடைய தனிப்பட்ட வாழ்க்கையை மட்டுமல்லாமல் நாட்டின் தேசிய பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலாக அமைவதாக பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்தார்.
ஆட்கடத்தல் நடவடிக்கைகள் தொடர்பாக நாட்டிலுள்ள பிரதேச செயலாளர்களுக்கு விழிப்புணர்வு வழங்கும் நோக்கில் ஏற்படு செய்யப்பட்ட செயலமர்வின் ஆரம்ப நிகழ்வு கொழும்பிலுள்ள ராடிசன் ஹோட்டலில் திங்கட்கிழமை (14) இடம்பெற்றது.
இங்கு பிரதான உரை நிகழ்த்தும் போதே பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர் மேலும் தெரிவிக்கையில் ,
ஆட்கடத்தல் தொடர்பான அச்சுறுத்தலின் தீவிரத்தை உணர்ந்து, ஆட்கடத்தலைக் கண்காணித்து எதிர்த்துப் போராடுவதற்காக 2021 - 2025 ஆம் ஆண்டுக்கான தேசிய மூலோபாய செயல் திட்டத்தை நாங்கள் உருவாக்கியுள்ளோம்.
அத்துடன் எங்கள் அணுகுமுறையானது தடுப்பு, பாதுகாப்பு, வழக்கு விசாரணை மற்றும் கூட்டாண்மை என்ற நான்கு தூண்களை அடிப்படையாகக் கொண்டது.
கூட்டு முயற்சியின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்த பாதுகாப்புச் செயலாளர், ஆட்கடத்தல்களை முழுமையாக தடுப்பதற்கு அரசு மற்றும் அரசு சார்பற்ற நிறுவனங்களுக்கு இடையேயான ஒருங்கிணைப்பு மிகவும் முக்கியமானதாகும்.
தற்போது, இந்த குற்றத்திற்கு எதிரான எங்கள் முயற்சியில் ஆட்கடத்தல் தடுப்பு பணிக்குழுவுடன் 20 பங்குதாரர்கள் சேர்ந்து செயற்படுகிறார்கள்.
இந்த பல்துறை ஒத்துழைப்பு தேசிய ஆட்கடத்தல் தடுப்பு செயலணியின் முயற்சிகளுக்கு தீவிரமாக பங்களிக்க உதவும். அமெரிக்க வெளியுறவுத்துறைக்கு சமர்ப்பிக்கப்பட்ட நபர்களின் கடத்தல் தொடர்பான ஆண்டறிக்கையில், அடுக்கு 2 கண்காணிப்பு பட்டியலில் இருந்து அடுக்கு 2க்கு நாம் மேம்படுத்தப்பட்டதன் மூலம் எங்கள் முன்னேற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளது.
அரச நிறுவனங்களுடன் இணைந்து, கள அபிவிருத்தி உத்தியோகத்தர்களை பணிக்குழுவுடன் இணைப்பதற்கும், ஆட்கடத்தல் குறித்த விழிப்புணர்வை கல்வி துறையில் சேர்ப்பதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.
ஆட்கடத்தல் மனித குலத்திற்கு எதிரான குற்றமாகும். இலங்கையின் தேசிய ஆட்கடத்தல் தடுப்பு செயலணி என்ற வகையில் ஆட்கடத்தலுக்கு எதிராக முழு பலத்துடன் போராடுவதில் உறுதியாக உள்ளோம் என்றார்.