இலங்கை தமிழர் அதிகார பகிர்வுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் சிங்கள கட்சிகள்... ரணில் அரசுக்கு புதிய சிக்கல்
27 Jul,2023
இலங்கை தமிழர் அதிகாரப் பகிர்வுக்கு சிங்கள அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இதனால் அதிபர் ரணில் விக்ரமசிங்கே அரசுக்கு புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. இலங்கை அதிபர் ரனில் விக்ரமசிங்கே கடந்த வாரம் இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு பிரதமர் மோடியை சந்தித்து பேசினார்.
அப்போது தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வு அளிக்கும் 13 ஆவது சட்ட திருத்தத்தை இலங்கை அரசு அமல்படுத்த வேண்டும் என்றும், தமிழர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் மாகாணங்களில் தேர்தல் உடனடியாக நடத்தப்பட வேண்டும் என்றும் பிரதமர் மோடி, ரனில் விக்ரமசிங்கேவிடம் வலியுறுத்தினார். இவற்றை பரிசீலிப்பதாக ரனில் விக்ரமசிங்கே கூறியிருந்தார்.
இந்த சூழலில் இலங்கை தமிழர் பிரச்னை, அவர்களுக்கு அதிகாரம் அளித்தல், மாகாணங்களில் தேர்தல் நடத்துதல் உள்ளிட்டவை குறித்து விவாதிக்க இன்று அனைத்து கட்சி கூட்டத்திற்கு ரனில் விக்ரமசிங்கே அழைப்பு விடுத்திருந்தார். இந்நிலையில் தமிழர் அதிகார பகிர்வுக்கு சிங்கள கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இந்த விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் மத்தியில் கருத்து வேறுபாடுகள் காணப்படுவதால் ரனில் அரசுக்கு புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து முக்கிய எதிர்க்கட்சியான சமாகி ஜன பலவெகாயா (எஸ்.ஜே.பி.) கட்சியின் தலைவர் சாஜித் பிரேமதாசா, தங்களுக்கு எதிர்க்கட்சி கூட்டத்தில் பேசப்படவுள்ள விவகாரங்கள் குறித்து முழுமையான தகவல் ஏதும் தெரிவிக்கவில்லை.
இலங்கை மக்களின் நலனுக்காக எதிர்க்கட்சி கூட்டத்தில் பங்கேற்கிறோம் என்று தெரிவித்துள்ளார். மேலும், இந்த கூட்டத்தில் நியாயமான முறையில் முயற்சிகள் மேற்கொள்ளப்படாமல், அரசியல் நலனுக்காக ஏதேனும் ஆளுங்கட்சி செய்தால் கூட்டத்தை புறக்கணிப்போம் என்று அவர் கூறியுள்ளார்.
இலங்கையில் 30 ஆண்டுகளாக நீடித்த உள் நாட்டுப்போர் கடந்த 2009 இல் முடிவுக்கு வந்தது. விடுதலை புலிகள் முற்றிலுமாக இலங்கையில் அகற்றப்பட்டுள்ள நிலையில், அங்குள்ள தமிழர்களுக்கு அதிகாரம் அளிக்க ரனில் விக்ரமசிங்கே தலைமையிலான அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது.