பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்த இலங்கையை உலகிற்கு திறந்துவிட எதிர்பார்த்துள்ளதாகவும், அது தொடர்பான சட்ட சீர்திருத்தங்கள் விரைவில் கொண்டு வரப்படும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
இலங்கையை அதிக போட்டித்தன்மை கொண்ட பொருளாதார முறைக்கு கொண்டு செல்வது தனது எதிர்பார்ப்பு எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற இந்திய வர்த்தகர்களுடனான விசேட சந்திப்பில் வைத்து அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில், பொருளாதார சுபீட்சத்திற்கான பாதையில் இந்தியாவுடன் நெருக்கமான உறவுகளைத் தொடர இலங்கை எதிர்பார்க்கிறது. இந்திய பொருளாதாரத்தை முன்னேற்ற பிரதமர் மோடி மேற்கொண்டு வரும் நிதிக் கொள்கை இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவும்.
இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான வர்த்தக உறவுகள் சுமார் எழுநூறு வருடங்களுக்கு முன்னர் ஆரம்பமானது. கேரளாவில் இருந்து இலங்கைக்கு வியாபாரம் செய்ய வந்த வரலாறு நமக்கு உண்டு.
நவகமுவில் உள்ள பத்தினி ஆலயம் கேரள மக்கள் இந்நாட்டிற்கு வந்து வர்த்தகம் செய்யும்போது கட்டப்பட்டதாகவும் வரலாற்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தற்போது ஆசியப் பிராந்தியத்தில் பலம் வாய்ந்த நாடாக இந்தியா தனது அதிகாரத்தை நிலைநாட்டியுள்ளது. ஆனாலும், மேற்கு ஆசிய நாடுகளும் பலமாக மாறியிருப்பதும் சிறப்பு வாய்ந்தது. இந்தியா போன்ற பலம் வாய்ந்த நாட்டுடன் வர்த்தக உறவுகளை வலுப்படுத்துவது இலங்கையின் பொருளாதாரத்துக்கு பெரும் நன்மை பயக்கும்.
பிரதமர் மோடி மேற்கொண்ட நிதிக் கொள்கையால், பொருளாதாரத்தில் இந்தியா முன்னேற முடிந்தது. அந்த நிதிக் கொள்கைகள் இலங்கைப் பொருளாதாரத்தின் எதிர்காலத்துக்கும் உதவுக்கூடியதாக அமைந்துள்ளது. நான் இலங்கையை மிகவும் போட்டி நிறைந்த பொருளாதாரத்துக்கு கொண்டு செல்லவே விரும்புகிறேன்.
பசுமைப் பொருளாதாரம் மற்றும் டிஜிட்டல் பொருளாதாரம் மூலம் இலங்கையின் பொருளாதார நிலையை வலுவான நிலைக்கு உயர்த்த முடியும். அதற்கு சட்டவிதிகள் அவசியம். போட்டி, பசுமை மற்றும் டிஜிட்டல் பொருளாதாரத்திற்கு தேவையான சட்டங்களை எதிர்காலத்தில் சீர்திருத்த எதிர்பார்க்கின்றோம்.
பொருளாதாரத்தை வலுப்படுத்தல்
நமது பொருளாதாரத்தை வலுப்படுத்த, இந்தியாவுடன் நெருங்கிய உறவை வைத்திருக்க வேண்டும். இலங்கையின் பொருளாதார நோக்கங்களையும் இலக்குகளையும் அடைவதற்கு இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பு மிகவும் முக்கியமானது.
இரு நாடுகளுக்குமிடையில் புதிய உடன்படிக்கைகளை ஏற்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் ஆராயப்பட்டு அதற்கான துறைகளை அவற்றில் ஈடுபடுத்த வேண்டும் என சுட்டிக்காட்டியுள்ளார்.