உலகின் பரிதாபகரமான நாடுகள் பட்டியல்- இலங்கை,இந்தியா எந்த இடம் தெரியுமா?
30 May,2023
உலகின் மிகவும் பரிதாபகரமான நாடுகளின் பட்டியலில் ஜிம்பாப்வே முதலிடத்தை பிடித்துள்ளது. 157 நாடுகளின் வரிசையில் இந்தியா 103-வது இடத்தில் உள்ளது.
பிரபல பொருளாதார நிபுணர் ஸ்டீவ் ஹான்கே வருடாந்திர துயரக் குறியீட்டை வெளியிட்டுள்ளார். உலக நாடுகளின் பொருளாதார சூழலின் அடிப்படையில் இந்த குறியீடு வெளியிடப்படுகிறது. அதன் படி இந்த ஆண்டின் மிகவும் பரிதாபகரமான நாடுகளின் பட்டியலில் ஜிம்பாப்வே முதலிடத்தை பிடித்துள்ளது. உள்நாட்டு போரால் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைன், சிரியா மற்றும் சூடான் நாடுகளை பின்னுக்கு தள்ளி ஜிம்பாப்வே முதலிடத்தை பிடித்துள்ளது.
ஜிம்பாப்வேவில் கடந்த ஆண்டு, பணவீக்க விகிதம் 243 சதவிகித்தை கடந்தது. இது மட்டுமல்லாமல் வேலைவாய்ப்பின்மை, அதிகப்படியான கடன் வட்டி, பொருளாதார மந்த நிலை ஆகியவற்றின் காரணமாக ஜிம்பாப்வே பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளதாக ஸ்டீவ் ஹான்கே கூறியுள்ளார்.
வெனிசுலா, சிரியா, லெபனான், சூடான், அர்ஜென்டினா, ஏமன், உக்ரைன், கியூபா, துருக்கி, இலங்கை, ஹைட்டி, அங்கோலா, டோங்கா மற்றும் கானா நாடுகள் பட்டியலில் முதல் 15 இடங்களை பிடித்துள்ளன. வேலைவாய்ப்பின்மை காரணமாக இந்தியா 103-வது இடத்தை பிடித்துள்ளது. அமெரிக்கா 134-வது இடத்தில் உள்ளது. அங்கும் வேலைவாய்ப்பின்மையே மக்களின் துயரத்திற்கு காரணமாக அமைந்துள்ளது.
மிகவும் மகிழ்ச்சியான நாடாக சுவிட்சர்லாந்து தேர்வாகியுள்ளது அங்கு கடனற்ற சூழலும், ஸ்த்திரதன்மையுடன் கூடிய பொருளாதார வளர்ச்சியும் மகிழ்ச்சியான நாடாக விளங்க காரணம் என ஸ்டீவ் ஹான்கே தெரிவித்துள்ளார். மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் குவைத் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. அயர்லாந்து, ஜப்பான், மலேசியா, தைவான், நைஜர், தாய்லாந்து, டோகோ மற்றும் மால்டா நாடுகள் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் முதல் பத்து இடங்களை பிடித்துள்ளன.