துவாரகாவை தேடும் சிறிலங்கா அரசாங்கம்
09 May,2023
விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் மனைவி மற்றும் மகள் இன்னமும் வாழ்வதற்கான சாத்தியம் இருப்பதாக ஓய்வுபெற்ற இந்திய இராணுவ அதிகாரி, புவி அரசியல் ஆய்வாளர் மேஜர் மதன்குமார் தெரிவித்துள்ளார்.
இந்திய ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் மகள் துவாரகாவை தேடி இலங்கை உளவுத்துறையில் முக்கியமான அதிகாரி தலைமையில் ஒரு தேடுதல் நடவடிக்கை இலங்கை அரசாங்கத்தால் முன்னெடுக்கப்படுவதாக முக்கிய பத்திரிகையொன்றில் வெளியாகியிருந்த கட்டுரை தொடர்பில் வினவப்பட்ட போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
இது தொடர்பில் மேஜர் மதன்குமார் மேலும் கூறுகையில்,
விடுதலைப் புலிகளின் தலைவர் உயிருடன் இருப்பதாக நெடுமாறன் ஒரு விடயத்தை முன்வைத்தார்.
இந்த நிலையில் இலங்கை இராணுவத்தில் பிரிகேடியர் தரத்திலுள்ள அதிகாரியொருவர், “பிரபாகரன் கொல்லப்பட்டார் அதை பொட்டம்மான் மற்றும் கருணா உறுதி செய்தனர். மரபணு பரிசோதனையையும் நாம் எடுத்துள்ளோம்.
அந்த பரிசோதனையில் உயிரிழந்தது பிரபாகரன் தான் என உறுதி செய்யப்பட்டது” என நெடுமாறனின் அறிவிப்பிற்கு மறுப்பு செய்தியொன்றை விடுத்திருந்தார்.
ஆனால் பிரபாகரனின் மூத்த மகன் சார்ள்ஸ் கொல்லப்பட்டது தெரியும், இளைய மகன் பாலச்சந்திரன் கொல்லப்பட்டது தெரியும், எனினும் அவரது மனைவி மற்றும் மகள் எங்கே என்பது இதுவரையில் தெரியவில்லை.
காணாமல்போனோர் பட்டியலில் தான் அவர்கள் உள்ளனர். எனவே அவர்கள் வாழ்வதற்கான சாத்தியம் இருக்கிறது. இப்படியான சூழலில் விடுதலைப் புலிகளுக்கு புத்துயிர் அளிப்பதற்கான சாத்தியம் இருப்பதாக ஏற்கனவே ஆராய்ந்துள்ளோம்.
இதற்கான சாத்தியம் இருக்கும் சந்தர்ப்பத்தில் இதனால் நேரடியாக பாதிக்கப்படுவது இலங்கையில் தற்போது ஆட்சியிலுள்ள அரசாங்கமே என சுட்டிக்காட்டியுள்ளார்.