1 லட்சம் குரங்குகளை சீனாவுக்கு அனுப்பும் இலங்கை அரசு காரணம் என்ன?
21 Apr,2023
இலங்கையில் உள்ள 1 லட்சம் குரங்குகளை சீன நிறுவனத்துக்கு வழங்க அந்நாட்டு அரசு முடிவெடுத்துள்ளது சர்ச்சையாகியுள்ளது.
toque macaques என்ற குரங்குகள், இலங்கை நிலப் பகுதிக்குள் மட்டுமே வாழும் ஒரு உட்பிரதேசத்திற்குரிய உயிரியாகும்(Endemic Species). IUCN நிறுவனத்தின் சிவப்புப் பட்டியலில், சூழல் சீர்கேடால் முற்றிலுமாக அழிந்து போய்விடக்கூடிய வாய்ப்புள்ள உயிரியாக இந்த வகை குரங்குகள் வகைப்படுத்தப்பட்டுள்ளன.
இலங்கையில் தோராயமாக 30 லட்சத்துக்கும் மேற்பட்ட குரங்குகள் இருக்கலாம் என்று மதிப்பிடப்படுகிறது. இதனால், அதிகளவிலான பயிர் சேதங்கள் ஏற்படுவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், விவசாயிகளுக்கும், குரங்குகளுக்கும் இடையே ஏற்படும் பிரச்னையை தீர்க்கும் வகையிலும், கூடுதல் வருவாயை பெருக்கும் வகையிலும் இலங்கையில் உள்ள 1 லட்சத்திற்கும் மேற்பட்ட குரங்குகளை சீனாவில் உள்ள தனியார் உயிரியியல் பூங்காவுக்கு வழங்க அந்நாடு முடிவெடுத்துள்ளது. இதற்கு வனவிலங்கு ஆர்வலர்களும், சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இதுகுறித்து சுற்றுச் சூழல் அமைப்பு ஒன்று தெரிவிக்கையில், "இந்த முடிவை அரசு கைவிட வேண்டும். போதிய நிதி ஒதுக்கீடு செய்து குரங்கின் குணாதிசயங்களை ஆய்வு செய்வதன் மூலம் பயிர் சேதங்கள் சம்பந்தமான விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும்" என்று கூறியுள்ளது.