ஈஸ்டர் தாக்குதலை தடுக்கவில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ள காவல்துறை உத்தியோகத்தர்களுக்கு பதவி உயர்வு மற்றும் மேலதிக பொறுப்புகளை வழங்குவதை அங்கீகரிக்க முடியாது என இலங்கை கத்தோலிக்க திருச்சபையின் ஊடகப் பேச்சாளர் சிறில் காமினி பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலில் ஏற்பட்ட உயிரிழப்பைத் தடுக்காத காவல்துறை உத்தியோகத்தர்கள் குறித்த உண்மையை மறைத்து, இவ்வாறான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டால் கத்தோலிக்கத் திருச்சபை எதிர்ப்புத் தெரிவிக்கும் என தந்தை குறிப்பிட்டுள்ளார்.
ஈஸ்டர் தாக்குதலைத் தடுக்காதது பெரிய குற்றம் என்றும், அப்படிப்பட்டவர்களைக் காவல் கண்காணிப்பாளராகவோ அல்லது வேறு பதவிகளுக்காகவோ நியமித்தால், அது உயிரிழந்த அப்பாவி மக்களை கேலிக்கூத்தாக்கிவிடும் என்றார்.
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை நடத்த நியமிக்கப்பட்ட மூன்று ஆணைக்குழுக்களின் அறிக்கைகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளதாகவும், பிரதி காவல்துறை மா அதிபர் தேஷ்பந்து தென்னகோன், உதவி காவல்துறை அத்தியட்சகர் சிசிர மென்டிஸ் மற்றும் கட்டான காவல் நிலைய பொறுப்பதிகாரி சமிந்த நவரத்ன ஆகியோருக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணைகளை நடத்துமாறு அதிபர் ஆணைக்குழுவின் அறிக்கை பரிந்துரைத்துள்ளதாகவும் தந்தை மேலும் தெரிவித்தார்.
இந்த பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துமாறு கொழும்பு பேராயர் மல்கம் கர்தினால் ரஞ்சித், காவல்துறை மா அதிபரிடம் கோரிய போதிலும், கடிதங்கள் கிடைத்துள்ளதாக காவல்துறை மா அதிபர் பதில் கூட அனுப்பவில்லை எனவும் தந்தை மேலும் தெரிவித்தார்.
மாறாக அவர்களுக்கு பதவி உயர்வுகளும் கூடுதல் பொறுப்புகளும் வழங்கப்பட்டதாகவும், ஈஸ்டர் தாக்குதல் இடம்பெற்று 4 வருடங்கள் கடந்துள்ள போதிலும் அதன் பின்னணியில் உள்ள உண்மை இன்னும் வெளிவரவில்லை எனவும் தந்தை சிறில் காமினி தெரிவித்துள்ளார்.
பொரளை பேராயரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இன்று (9) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே சிறில் காமினி பெர்னாண்டோ தந்தை இவ்வாறு தெரிவித்தார்.
இந்த அதிபர் ஆணைக்குழுவிற்கு 13 கோடிக்கு மேல் செலவிடப்பட்டுள்ளதாகவும், அதன் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தாதது பொதுமக்களின் பணத்தை விரயமாக்குவதாகவும் தந்தை மேலும் தெரிவித்தார்.
இது தொடர்பில் கொழும்பு பேராயர் ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிவித்தலையும் முன்வைத்த தந்தை, ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை பெற்றுக்கொடுக்கும் நடவடிக்கை எத்தகைய தடைகள் வந்தாலும் கைவிடப்பட மாட்டாது எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன், மக்கள் தமது கருத்தையும் நிலைப்பாட்டையும் தெரிவிப்பதற்கு தேர்தலே பிரதான வாய்ப்பாக இருப்பதால் தேர்தலை ஒத்திவைக்காமல் நடத்த வேண்டுமெனவும் எனவும் தந்தை குறிப்பிட்டுள்ளார்.