நாடு பொருளாதார நெருக்கடியில் சிக்கித்தவிக்கும்போது உள்ளூராட்சி தேர்தலை நடாத்த போதுமான நிதி இல்லை என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க (23) பாராளுமன்றத்தில் அறிவித்துள்ளதை எதிர்க்கட்சிகள் கண்டித்து போராட்டங்களை முன்னெடுக்கின்றனர்.
அவரது மாமனார் ஜே.ஆர்.ஜெயவர்த்தனா நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சி முறைமையை ஏற்படுத்த தெரிவித்த காரணங்களில் முக்கிமானது வீணான தேர்தல் செலவுகளை தடுத்து அதனை மிச்சப்படுத்துவதே.அவர் நிதியமைச்சராக இருந்ததால் நாட்டின் பொருளாதார வளர்ச்சி அரச வரவு செலவுகளை நன்கறிந்திருந்தார்.
வரலாற்றில் ஒரு வருடத்தில் 3 மாதங்களில் இரு பொதுத்தேர்தல்களை நாடு 1960 ஆம் ஆண்டு சந்தித்ததால் ஏற்பட்ட செலவுகள் பொருளாதாரத்தை பெரிதும் பாதித்ததுள்ளது எனக்கூறிய அவர் அதனை தடுத்து மீதப்படுத்த திட்டங்களையும் அந்த ஆண்டே வகுத்தார்.
1960 மார்ச் 18 தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சிக்கு வந்து சிம்மாசனப்பிரசங்கம் தோல்வியடைந்ததால் பாராளுமன்றத்தை மகா தேசாதிபதி (Governor General ) சேர் ஒலிவர் குணத்திலக்கா ஏப்ரல் 23 இல் கலைத்து மீண்டும் தேர்தலுக்கு ஆணையிட்டார்.1960 ஜூலை 20 இல் தேர்தல் நடைபெற்று சுதந்திரக்கட்சி ஆட்சியமைத்தது.
1960 மார்ச் தேர்தலில் ஆசனங்கள்: ஐ.தே.க- 50, சுதந்திரக்கட்சி -46, தமிழரசு -15, சம சமாஜக்கட்சி -10, தமிழ்க்காங்கிரஸ்- 1 கம்யூனிஸ்ட்-3 மக்கள் ஐக்கிய முன்னணி-10,ஏனைய கட்சிகள்- 26.சிம்மாசனப்பிரசங்கத்துக்கு எதிராக 86 வாக்குகளும் ஆதரவாக 61 வாக்குகளும் கிடைத்து தோல்வியடைந்து 33 நாட்களில் ஆட்சி கவிழ்ந்தது.தமிழரசுக்கட்சியும் எதிராக வாக்களித்தது.
ஐக்கிய தேசியக் கட்சியை விட அதிகமாக உள்ள ஏனைய கட்சிகளுடன் மகா தேசாதிபதி ஆட்சியமைப்பது குறித்து ஆலோசனை நடத்தி ஏற்பாடுகளை முன்னெடுந்திருந்தால் வருடத்தில் இரு தேர்தல்கள் நடைபெறாமல் தடுத்திருக்கலாம். ஒரு தேர்தலுக்கான செலவை வேறு தேவைகளுக்காக பயன்படுத்தியிருக்கலாம் என ஜே.ஆர்.சிந்தித்தார்.
இதனால் 'வெஸ்ற் மினிஸ்ரர்' முறையிலான பிரித்தானிய பாராளுமன்ற ஆட்சி முறையை நீக்கி நிறைவேற்று அதிகாரங்களுடைய ஜனாதிபதி ஆட்சியை ஏற்படுத்தவேண்டும் என அன்றே சிந்தித்தாக " Leaders and Leadership " என்ற சஞ்சிகைக்கு 1990 இல் ஜே.ஆர்.கூறியிருந்தார்.
அத்துடன் ஒரு பாராளுமன்ற உறுப்பினர் இறந்தால் அல்லது பதவி விலகினால் அல்லது நீதிமன்றத்தால் பதவி நீக்கப்பட்டால் இடம்பெறும் இடைத்தேர்தல்களால் வீணான செலவு என்பதையும் நீக்கி தேர்தலில் போட்டியிட்டவருக்கு அடுத்தவரை நியமிக்கும் திட்டத்தையும் ஜே.ஆர்.நிறைவேற்று அதிகார அரசியலமைப்பில் நடைமுறைப்படுத்தினார்.இதனால் கடந்த காலங்களில் இடைத்தேர்தல்கள் நடைபெறாது பெருமளவு நிதி அரசுக்கு இலாபமாக கிடைத்துள்ளது.
1965 இல் இராஜாங்க அமைச்சரான ஜே.ஆர்.நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை குறித்து ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுவில் கூறியபோதும் வீணான தேர்தல் செலவை தடுக்கும் முறைகளை குறிப்பிட்டிருந்தார்.அதனை பிரதமர் டட்லி உட்பட பலர் ஏற்கவில்லை.
1971 ஜூலை 2 ஐக்கிய முன்னணி அரசின் அரசியலமைப்பு சபையிலும் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி தொடர்பான பிரேரணையை எதிர்க்கட்சித்தலைவரான ஜே.ஆர்.முன்வைத்தபோதும் அடிக்கடி தேர்தல்களால் ஏற்படும் வீண் செலவீனங்களை தடுப்பதை சுட்டிக்காட்டியிருந்தார்.
ஒரு ஜனாதிபதி இறந்தால் அல்லது பதவி விலகினால் தேர்தல் மூலமாக புதிய ஜனாதிபதியை தெரிவு செய்ய பெருமளவு நிதி தேவைப்படும் என்றே பிரதமரை பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதியாக தெரிவுசெய்யும் முறையை ஏற்படுத்தினார்.ஜனாதிபதி ரணில் அவ்வாறே தெரிவானார் என்பதும் குறிப்பிடத்தக்கது.