அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்த ஒருபோதும் இடமளிக்க முடியாது. நாட்டு மக்களை ஒன்றிணைத்து மாபெரும் மக்கள் போராட்டத்தில் ஈடுபடுவோம்.
13 ஆவது திருத்தம் தொடர்பில் பிரதமர் தினேஷ் குணவர்தன தனது நிலைப்பாட்டை நாட்டுக்கு பகிரங்கப்படுத்த வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் ஜயந்த சமரவீர தெரிவித்தார்.
எதுல்கோட்டை பகுதியில் தேசிய சுதந்திர முன்னணியின் காரியாலயத்தில் திங்கட்கிழமை (30) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிட்டதாவது,
அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கடந்த 15 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் குறிப்பிட்டார். அதிகார பகிர்வுக்கான பேச்சுவார்த்தைகள் தற்போது முன்னெடுக்கப்படுகின்றன.
1987 ஆம் ஆண்டு அப்போதைய ஜனாதிபதி ஜே.ஆர் ஜயவர்தனவை இந்தியா பலவீனப்படுத்தி பலவந்தமான முறையில் அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை நிறைவேற்றியது.
13 ஆவது திருத்தத்திற்கு எதிராக மக்கள் விடுதலை முன்னணி, ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி, உட்பட சுதேச அரசியல் கட்சிகள் முன்னெடுத்த மாபெரும் தொடர் போராட்டத்தை தொடர்ந்து அரசியலமைப்பு திருத்தம் ஊடாக அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்திற்கு தடை ஏற்படுத்தப்பட்டது.
கயிற்றினால் கட்டி தொங்கவிடப்பட்ட கூர்மையான வாள்களை போல் அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தம் இலங்கைக்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது என உயர்நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளதுடன்,13 ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டுமாயின் மக்கள் வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என உயர்நீதிமன்றம் தெளிவாக குறிப்பிட்டுள்ளது.
அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தம் நடைமுறைப்படுத்தப்பட்டதை தொடர்ந்து நாட்டில் இனக்கலவரம் தோற்றம் பெற்றது.
60 ஆயிரம் பேர் கலவரத்தில் கொல்லப்பட்டார்கள், முக்கிய அரசியல் தலைவர்கள் நாட்டுக்காக உயிர் தியாகம் செய்தார்கள்.
2002 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 22 ஆம் திகதி பிரதமர் ரணில் விக்கிரமசிங்க விடுதலை புலிகள் அமைப்பின் தலைவர் வேலுபிள்ளை பிரபாகரனுடன் 'ரணில்- பிரபா' ஒப்பந்தத்தை கைச்சாத்திட்டதன் பின்னர் 2002.02.23 ஆம் திகதி மக்கள் விடுதலை முன்னணி மாபெரும் போராட்டத்தில் ஈடுப்பட்டது.
மேற்குலக நாடுகளின் ஆதரவுடன் பேச்சுவார்த்தை ஊடாக ஐக்கிய ரணில் விக்கிரமசிங்க மேற்கொண்ட முயற்சிகள் 2004 ஆம் ஆண்டு ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்தியது.
நாட்டை பிளவுப்படுத்தும் ரணில் விக்கிரமசிங்கவின் கொள்கையை பெரும்பான்மை மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. இதன் காரணமாகவே அவரது ஜனாதிபதி கனவு நிறைவேறவில்லை.
மக்கள் போராட்டத்தை தொடர்ந்து ஏற்பட்ட அரசியல் மாற்றத்தை தனக்கு சாதகமாக கொண்டு ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக பதவி ஏற்றுக்கொண்டார்.
பொருளாதார பாதிப்புக்கு மத்தியில் அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த ஜனாதிபதி அவதானம் செலுத்தியுள்ளார்.
13 ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தினால் இனங்களுக்கிடையில் முரண்பாடுகள் தோற்றம் பெறும். அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்த ஒருபோதும் இடமளிக்க முடியாது. நாட்டு மக்களை ஒன்றிணைத்து மாபெரும் மக்கள் போராட்டத்தில் ஈடுபடுவோம்.
நாட்டை பிளவுப்படுத்தும் அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்திற்கு ஆதரவு வழங்க போவதில்லை என தற்போதைய பிரதமர் தினேஷ் குணவர்தன 1987 ஆம் ஆண்டு காலஞ்சென்ற மாதுலுவாவே சோபித தேரர் முன்னிலையில் சத்திய பிரமானம் செய்தார்.
13 ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தும் ஜனாதிபதியின் நிலைப்பாடு தொடர்பில் பிரதமர் தினேஷ் குணவர்தன உண்மை நிலைப்பாட்டை பகிரங்கப்படுத்த வேண்டும் என்றார்.