இலங்கையில் உள்ளாட்சி தேர்தல் தேதியை அறிவித்தது தேர்தல் ஆணையம்
22 Jan,2023
தேர்தல் நடைமுறைகளுக்கு ரூ.10 பில்லியன் செலவாகும் என்று கூறப்படுகிறது. எதிர்க்கட்சியான எஸ்.ஜே.பி. கட்சி பெரும்பான்மையான இடங்களை வெல்ல முடியும் என்று நம்புகிறது மேலும் படிக்க கொழும்பு: இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக உள்ளாட்சி தேர்தல் 6 மாதங்களுக்கு தள்ளிவைக்கப்பட்டிருந்தது.
தேர்தலை நடத்த வேண்டும் என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தன. பொருளாதார நெருக்கடியை அரசு கையாளும் விதம் குறித்து மக்கள் அதிருப்தியில் இருப்பதாகவும், இந்த அதிருப்தியை காட்ட இந்த தேர்தல் மக்களுக்கு ஒரு வாய்ப்பாக இருக்கும் என்றும் எதிர்க்கட்சிகள் கூறிவருகின்றன. எனினும் பொருளாதார நெருக்கடியில் இருந்து இன்னமும் மீளாததால் தேர்தல் மீண்டும் தள்ளிவைக்கவே வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியானது. இந்நிலையில்,
நாடு முழுவதிலும் உள்ள 340 உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் வரும் மார்ச் மாதம் 9ஆம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் இன்று அறிவித்துள்ளது. தேர்தல் நடைமுறைகளுக்கு ரூ.10 பில்லியன் செலவாகும் என்று கூறப்படுகிறது. ஏற்கனவே நிதி நெருக்கடியில் இருப்பதால் தேர்தல் செலவு அரசுக்கு கூடுதல் நெருக்கடியை ஏற்படுத்தும். 2018ல் நடந்த உள்ளாட்சி தேர்தலில் ஆளும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி பெரும்பாலான இடங்களை கைப்பற்றியது.
தற்போது பொருளாதார நெருக்கடியைத் தொடர்ந்து கட்சியின் செல்வாக்கு சரிந்துள்ளது. மக்களின் எழுச்சி காரணமாக கட்சியின் தலைவரும் முன்னாள் அதிபருமான கோத்தபய ராஜபக்சே பதவி நீக்கம் செய்யப்பட்டார். தேர்தல் கூட்டணி தொடர்பான கருத்து வேறுபாடுகளால் கட்சியில் குழப்பம் நிலவுகிறது. எனவே, இந்த தேர்தலில் ஆளுங்கட்சிக்கு எதிர்பார்த்த வெற்றி கிட்டுமா என்பது சந்தேகம்தான். அதேசமயம், பிரதான எதிர்க்கட்சியான எஸ்.ஜே.பி. கட்சி பெரும்பான்மையான இடங்களை வெல்ல முடியும் என்ற நம்பிக்கையில் உள்ளது.